Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆம்ஸ்ட்ராங்கின் மனசாட்சி; பிரபுதேவாவின் வழக்கறிஞர்! ஆனந்த் யார் தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் ஆனந்த்தைப் பற்றி பலருக்கும் அதிகம் தெரியாது. அவர் யார்? அவரது பின்புலம் என்ன என்பதைப் பார்ப்போம்.

ஆம்ஸ்ட்ராங்கிற்கு அடுத்த பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக யார் வருவார் என்ற கேள்விக்கு நேற்று தேசிய தலைமை ஒரு விடையை அளித்துவிட்டது. வழக்கறிஞர் ஆனந்த்தை மாநிலத் தலைவராக நியமித்துள்ளதாகத் தேசிய ஒருங்கிணைப்பாளர் அசோக் சித்தார்த்ஜி நேற்று செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார். புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஆனந்த் கட்சியின் மிகப் பழைமையான உறுப்பினர். மேலும் கட்சியை சார்ந்த வழக்குகளை எடுத்துத் திறம்பட நடத்தி, நீதிமன்றத்தில் வெற்றி பெற்றுத்தந்தவர்.

Armstrong BSP

அதிமுக ஆட்சிக்காலத்தில் ஒரு சட்டமன்ற உறுப்பினருடன் நெருக்கமாக இருந்து வந்தார் ஆம்ஸ்ட்ராங். அதை விரும்பாத மேல்மட்ட அரசியல்வாதி ஒருவர் ஆம்ஸ்ட்ராங்கிற்கு எதிராக 6 வழக்குகளை காவல்துறை மூலம் போடவைத்தார். அந்த வழக்குகள் அடிப்படை ஆதாரம் அற்றவை என்று நீதிமன்றம் போனார் ஆம்ஸ்ட்ராங். இறுதியில் பொய் வழக்குகளைப் போட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கை ஏற்று நடத்தியவர்தான் இப்போது தலைவராகப் பதவியேற்றுள்ள ஆனந்த்.

எந்த வழக்காக இருந்தாலும் அவரை நம்பி தைரியமாக ஒப்படைக்கும் அளவுக்கு வாதத் திறமை பெற்றிருந்தார் ஆனந்த். அதற்கு ஒரு உதாரணம் இருக்கிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஆம்ஸ்ட்ராங் காவல்துறையினரின் ரவுடிகள் பட்டியலில் இடம்பெற்றுள்ளதாக ஆங்கில நாளிதழான டைம்ஸ் ஆஃப் இந்தியா ஒரு செய்தியை வெளியிட்டிருந்தது. அதை எதிர்த்து பத்திரிகை மீது வழக்குத் தொடுத்தார் ஆம்ஸ்ட்ராங். அந்தச் செய்தி உண்மை இல்லை என்பதை சட்டரீதியாகப் போராடி நீதிமன்றத்தில் தனக்கு சாதகமாகத் தீர்ப்பையும் பெற்றார். இந்தப் பொய் செய்தியை வெளியிட்ட செய்தியாளருக்கும் வெளியீட்டாளருக்கும் 6 மாத சிறைத் தண்டனையை நீதிமன்றம் வழங்கியது. இந்த வழக்கிலும் வாதாடி வெற்றியைப் பெற்றுக் கொடுத்தவர் வழக்கறிஞர் ஆனந்த் தான்.

தொடர்ச்சியாக ஆம்ஸ்ட்ராங் மீது பொய் வழக்குகள், அச்சுறுத்தல்கள் இருந்ததால்தான் அவர் முறைப்படி காவல்துறையில் சான்றிதழ் பெற்று தனது பாதுகாப்புக்காக ஒரு துப்பாக்கியையும் வைத்திருந்தார். ரவுடி பட்டியலில் உள்ளவர்களுக்கு காவல்துறை துப்பாக்கி தராது. அதை சட்டப்படி விண்ணப்பித்துப் பெற உறுதுணையாக இருந்தவர் இந்த ஆனந்த். ஆம்ஸ்ட்ராங் துப்பாக்கிக்கான உரிமம் 2027 வரை உள்ளது. அப்படி ஒரு துப்பாக்கியை வைத்திருந்த ஒருவர் ரவுடிகளால் வெட்டி வீசப்பட்டபோது அதைப் பயன்படுத்தவில்லை. அதற்கு முன்பும்கூட அவர் அதைப் பயன்படுத்தவில்லை.

Armstrong BSP

அந்தளவுக்குத் தன்னை ஒரு பொதுவான மனிதராக, குறிப்பாகப் பட்டியலின மக்களின் பாதுகாவலராக இருந்து வந்துள்ளார் ஆம்ஸ்ட்ராங். அந்த இடத்தை இப்போது அவரது வலது கரமாக இருந்தவரும் சட்டரீதியாக அவருக்குப் பின்புலமாக இருந்தவருமான ஆனந்த் நிரப்பி இருக்கிறார். இவரைப் பற்றி அவரது கட்சியினரை தாண்டி பலருக்கும் அதிகம் தெரியாது.

1974இல் சென்னையில் பட்டாபிராம் பகுதியில் பிறந்தவர் ஆனந்தன். அங்கேயே அவர் பள்ளிப்படிப்பை முடிந்தார். அதன்பின்னர் 1992 ஆம் ஆண்டு அம்பேத்கர் சட்டக்கல்லூரியில் சேர்ந்து சட்டம் படித்தார். அதனை அடுத்து மூத்த வழக்கறிஞர் ராஜா இளங்கோவனிடம் ஜூனியராக வேலையில் சேர்ந்தார். அங்கே சட்ட நுணுக்கங்களை கற்ற இவர் பிறகு வழக்கறிஞராக நீதிமன்றத்தில் வாதாட ஆரம்பித்தார். அவரது வழக்கறிஞர் தொழிலில் பல பிரபலமான வழக்குகள் அவரைத் தேடிவந்தன.

குறிப்பாக பிரபுதேவா மற்றும் நடிகர் பிரசாந்த் விவாகரத்து வழக்கு இவர் மீது ஊடக வெளிச்சத்தைப் பாய்ச்சியது. அதில், வெற்றி பெற்றதன் மூலம் வழக்கறிஞர் வட்டாரத்தில் தனித்த அடையாளத்தைப் பெற்றார் ஆனந்த். இந்த வழக்கறிஞர் தொழிலில் கிட்டத்தட்ட 25 வருடங்களாக இருந்து வருகிறார் இவர்.

எப்படி பிரபல திரை நட்சத்திரங்களின் வழக்குகள் மூலம் ஊடக வெளிச்சத்தை ஈர்த்தாரோ அதேபோல சுயமரியாதை திருமணம் செல்லாது என்று அளிக்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக வழக்கை தொடர்ந்து முற்போக்கு வட்டாரங்களில் தனது முத்திரையைப் பதியவைத்தார். வழக்கறிஞராகச் சட்டக்கல்லூரியில் தனது பயணத்தைத் தொடங்கியது முதலே இவருக்கு ஆம்ஸ்ட்ராங் உடன் நல்ல பழக்கம் இருந்து வந்தது. அந்த நட்பு அப்படியே கட்சி ரீதியான தொடர்பாக மாறியது. முறையாகப் பகுஜன் சமாஜ் கட்சியில் இணைந்து தீவிர அரசியலில் ஈடுபட்டு வந்தார்.

கட்சியின் தேசிய தலைமையின் உத்தரவின் பேரில் கடந்த 2009 ஆம் ஆண்டு திருவள்ளூர் மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டார். அந்தத் தேர்தலில் 40 ஆயிரத்திற்கு மேலான வாக்குகளைப் பெற்றார். அப்போதே இந்தப் பகுதியில் தனக்கும் கட்சிக்கும் எந்தளவுக்கு செல்வாக்கு உள்ளது என்பதை உறுதிசெய்தார். அப்போது முதல் ஆம்ஸ்ட்ராங் உடன் நெருங்கிய நட்பு கொண்டிருந்த ஆனந்த், வெறும் நண்பராக மட்டும் இல்லாமல் அவருக்கு அதிகாரப்பூர்வ வழக்கறிஞராகவும் வலம் வந்தார்.

தலைவராகப் பொறுப்பேற்றுள்ள ஆனந்த், "பகுஜன் சமாஜ் கட்சி என்றால் அது தலித் கட்சிபோல ஒரு தோற்றத்தை தமிழ்நாட்டில் ஏற்படுத்தி விட்டார்கள். இது வெகுஜன மக்கள் கட்சி. பகுஜன் என்றால் சோஷியல் இஞ்ஜினியரிங் என்று அர்த்தம்" என்று சொல்லி இருக்கிறார்.

பிஎஸ்பியின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஆனந்த்திற்கு இயக்குநர் பா.ரஞ்சித் தனது எக்ஸ் தளத்தில் வாழ்த்து செய்தி ஒன்றைப் பதிவிட்டுள்ளார். அதில், "பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவராக வழக்கறிஞர் திரு.பி. ஆனந்தன் அவர்களையும், மாநில ஒருங்கிணைப்பாளராகத் திருமதி.பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் அவர்களையும் தேர்ந்தெடுத்திருப்பதை முழுமனதுடன் வரவேற்று, என் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மறைந்த சமத்துவத் தலைவர் அண்ணன் ஆம்ஸ்ட்ராங் அவர்களின் தன்னலமற்ற கள செயற்பாட்டைப் போலத் தலித் மக்களின் விடுதலைக்காகவும், உரிமைகளுக்காகவும், சுயமரியாதைக்காகவும் எவ்விதமான சமரசமும் பின்வாங்கலும் இல்லாமல் சித்தாந்தத் தெளிவுடன் பாபாசாகேப் அம்பேத்கர் கண்ட கனவுகளுக்குச் செயல் வடிவம் கொடுக்கவும், தலித் மக்களின் நலனில் அக்கறை கொண்டு களம் காணவும் மனதார வாழ்த்துகிறேன்' என்று கூறியிருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+