மெகா வெள்ளம்! 100 ஆண்டுகளுக்கு பிறகு.. பாலாற்றில் ஆர்ப்பரித்து செல்லும் மழைநீர்.. கரையோர மக்கள் அவதி
காஞ்சிபுரம்: தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வரும் நிலையில், பாலாற்றில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மெகா வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பாலாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தை மாவட்ட வருவாய்த்துறை அலுவலர் பன்னீர்செல்வம் நேரில் ஆய்வு செய்தார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்து கடந்த சில தினங்களாகத் தொடர் கன மழை பெய்து வருகிறது.
வங்கக் கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள் காரணமாக இம்மாத தொடக்கம் முதலே வடதமிழக மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

மெகா வெள்ளம்
இப்படித் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் தென்பெண்ணை, சங்கர பரணி உள்ளிட்ட முக்கிய ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதேபோல பாலாற்றிலும் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மெகா வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பாலாற்றில் 1.20 லட்சம் கன அடி அளவுக்கு வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடும் நிலையில், வெள்ளத்தை மாவட்ட வருவாய்த்துறை அலுவலர் பன்னீர்செல்வம் நேரில் ஆய்வு செய்தார்.

1.25 லட்ச கன அடி நீர்
கனமழையின் காரணமாக ராணிப்பேட்டை மாவட்டம் அணைக்கட்டிலிருந்து நேற்று காலை 6 மணி நிலவரப்படி சுமார் 1.4 லட்சம் கன அடி நீர் பாலாற்றில் திறந்து விடப்பட்டது. இதன் காரணமாகக் காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள பாலாற்றில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. பாலாற்றில் தற்போது சுமார் 1.25 லட்சம் கன அடி நீரானது ஆர்ப்பரித்துக் கொண்டு பாய்ந்து வருகிறது. இதேபோல் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாற்றில் சுமார் 25 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்பட்டு செய்யாற்றிலும் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கு எச்சரிக்கை
இவ்விரு ஆறுகளில் ஏற்பட்டுள்ள கடும் வெள்ளப் பெருக்கினால் இவ்விரு ஆற்றங்கரையோர கிராம மக்களுக்கு மாவட்ட ஆட்சியர் டாக்டர் மா. ஆர்த்தி வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் பழைய சீவரம் அருகே பாலாறு, செய்யாறு, வேகவதி என மூன்று ஆறுகள் சங்கமிக்கும் இடமான திருமுக்கூடலில் மூன்று ஆறுகளின் வெள்ள நீரும் கலந்து வருவதால் தற்போது கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளப் பெருக்கினால் இரு கரையோரங்கள் முழுவதும் வெள்ள நீரானது ஆர்ப்பரித்துக் கொண்டு செல்கிறது.

நேரில் ஆய்வு
இதனையடுத்து திருமுக்கூடல் பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ள பெருக்கினையொட்டி காஞ்சிபுரம் மாவட்ட வருவாய்த்துறை அலுவலர் பன்னீர்செல்வம், வாலாஜாபாத் தாசில்தார் லோகநாதனுடன் ஆய்வு மேற்கொண்டார். மேலும் கூடுதலாக அப்பகுதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டால் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து வருவாய்த்துறை அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார். திருமுக்கூடலில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கினால் அப்பகுதியே கடல் போல் காட்சியளிக்கின்றது.

போக்குவரத்து பாதிப்பு
மேலும், வல்லிபுரம் ஈசூர் ஆகிய பகுதிகளில் உள்ள பாலத்தின் மேல் சுமார் 2 அடி அளவுக்கு வெள்ள நீர் ஓடுவதால் போக்குவரத்தும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் உடனான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. கிராம மக்கள் செங்கல்பட்டு வழியாக மதுராந்தகம் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், பாலத்தின் அருகே யாரும் செல்ல வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சிக்கிய மக்கள்
இதனிடையே பாலாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் வேலூர் அண்பூண்டி- திருமணி இடையே சிக்கியுள்ள 8 பேரை மீட்கும் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது.. அவர்கள் அப்பகுதியில் ஆடுமெய்துக் கொண்டிருந்தவர்கள் என்றும் வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகளில் தேசிய பேரிடர் மீட்பு படை இறங்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications