இலவச வீட்டு மனை பட்டா.. சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி விடாத கதை.. பேராசை விஏஓவுக்கு பெருநஷ்டம்
காஞ்சிபுரம்: அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்கியதற்காக கைதாகும் சம்பவங்கள் அண்மை காலத்தில் அதிகரித்துள்ளது. காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே ரூ,15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். அவர் எதற்காக லஞ்சம் வாங்கினார்.. எப்படி சிக்கி கொண்டார் என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
வீட்டு மனை பட்டா வாங்க, பட்டாவில் பெயர் மாற்றம் செய்ய, சொத்து வரியில் பெயர் மாற்றம் செய்ய, மின்சார இணைப்பு பெற, வாரிசு சான்றிதழ் பெற என பல்வேறு அரசின் சேவைகளை பெற லஞ்சம் கொடுக்க வேண்டிய நிலை இருப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகிறார்கள். அதனை நிரூபிக்கும் விதமாக அடிக்கடி கைது சம்பவங்கள் நடந்து வருகிறது.

காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத்தை அடுத்த திருமுக்கூடல் கிராமத்தை சேர்ந்த 40 வயதாகும் குமரவேலுக்கு அரசு சார்பில் இலவச வீட்டு மனை பட்டா மாவட்ட கலெக்டரால் வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால் தமிழக அரசு வழங்கிய இலவச வீட்டு மனை பட்டா கிராம கணக்கு பதிவேட்டில் பதிவேற்றம் செய்யப்படாமல் இருந்துள்ளத. இந்த நிலையில் பட்டாவை பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று திருமுக்கூடல் கிராம நிர்வாக அலுவலர் கருணாகரனை குமரவேல் அணுகி இருக்கிறார்.
கிராம நிர்வாக அலுவலர் கருணாகரன் பட்டாவை பதிவேற்றம் செய்ய ரூ.20 ஆயிரம் லஞ்சம் கேட்ட நிலையில் இறுதியாக ரூ.15 ஆயிரம் தருவதாக உறுதி அளித்துள்ளார். எனினும் லஞ்சம் கொடுக்க மனம் இல்லாத நிலையில் காஞ்சீபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசாரிடம் குமரவேல் புகார் அளித்திருக்கிறார்.
காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், குமரவேலிடம் ரசாயணம் தடவிய ரூபாய் நோட்டுக்களை கொடுத்தனுப்பினார்கள். அவர்களின் அறிவுரைப்படி குமரவேல் விஏஓவை சந்திக்க சென்றார்.. இதன்படி, நேற்று திருமுக்கூடல்- சாலவாக்கம் சாலையில் அருங்குன்றம் அருகே குமரவேலிடம் இருந்து, கிராம நிர்வாக அலுவலர் கருணாகரன் லஞ்ச பணத்தை பெற்றுள்ளார்.
அப்போது திடீரென அங்கு வந்த காஞ்சீபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை மற்றும் கண்காணிப்பு பிரிவு டிஎஸ்பி கலைச்செல்வன், ஆய்வாளர் கீதா தலைமையிலான போலீசார், கிராம நிர்வாக அலுவலர் கருணாகரனை கையும் களவுமாக கைது செய்தார்கள். பின்னர் திருமுக்கூடல் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு கிராம நிர்வாக அலுவலர் கருணாகரனை அழைத்து சென்று லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள். பின்னர் வழக்குப்பதிவு செய்து கிராம நிர்வாக அலுவலர் கருணாகரனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.












Click it and Unblock the Notifications