ஜெயச்சந்திரன் அல்டிமேட்.. அப்பதான் உள்ளே நுழைஞ்சாரு.. மளமளனு வந்துவிழுந்த பணம்.. குளச்சலில் ஆச்சரியம்
கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் ஒரு ஆச்சரிய சம்பவம் நடந்துள்ளது.. இதைக்கேள்விப்பட்டு, ஒட்டுமொத்த மக்களும் ஜெயச்சந்திரனை பாராட்டி கொண்டிருக்கிறார்கள்.. யார் இந்த ஜெயச்சந்திரன்?
ஏடிஎம் மிஷினில் கோளாறுகள் ஒருபக்கம் என்றால், ஏடிஎம்களில் சிலசமயம் கள்ள நோட்டுகள் வந்துவிடுவது அதற்கு மேல் அதிர்ச்சியை தந்துவிடுகிறது.

ஏடிஎம் மிஷின்கள்: சில மாதங்களுக்கு முன்பு, நாகை பப்ளிக் ஆபீஸ் சாலையில், கனரா வங்கிக்கு சொந்தமான ஏடிஎம் இயந்திரம் உடைக்கப்பட்டுள்ளதாக போலீஸாருக்கு தகவல் வந்தது.. இதனால் பதறியடித்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீஸார், ஏடிஎம் மையம் திறந்து கிடப்பதையும், உள்ளே இயந்திரம் உடைக்கப்பட்டு கிடந்ததையும் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்..
பிறகு அங்கிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, அதில் மர்மநபர் ஒருவர் முகமூடி அணிந்தபடி, ஏடிஎம் மிஷினை கடப்பாறையால் உடைப்பது பதிவாகி இருந்தது.. ஆனால், கடப்பாறையால் மிஷினை உடைத்தும்கூட, அவரால் பணம் எடுக்க முடியாமல் போயுள்ளது.. எனவே, வழக்குப்பதிவு செய்த போலீஸார், கொள்ளையனை தனிப்படை அமைத்து பிடித்தனர்.
விஸ்வநாதன்: அவர் பெயர் விஸ்வநாதன். 25 வயதாகிறது.. விஸ்வநாதன் தந்த வாக்குமூலம் இதுதான்: "எனக்கு வேலை எதுவும் இல்ல சார்.. எங்கெல்லாமே அலைந்து திரிந்தேன்.. திடீர்னு சரக்கு சாப்பிடணும்போல இருந்தது.. பணத்திற்கு என்ன செய்கிறதுன்னு நினைச்சிட்டே இருந்தேன்.. அப்பதான், 24 மணி நேரம் பணம் கொடுக்கும் மிஷின்தான் இருக்கேன்னு நினைச்சேன்.. இதுக்காகவே ஒரு கடப்பாறையை எடுத்துட்டு போய், ஏடிஎம்-ஐ உடைத்தேன். ஆனா, அது சொதப்பலாகிடுச்சு.. அந்த மிஷினை உடைக்கவே முடியல..
முதன்முதலில் திருட்டுல இறங்கினதுனால என்னவோ, முதல் திருட்டு முற்றிலும் கோணலாயிடுச்சு. நம்மால திருடக்கூட முடியவில்லையேன்னு நினைச்சு ஒரு மணிநேரம் ஏடிஎம் ரூமிலேயே உட்கார்ந்து அழுதுட்டேன் சார்" என்று கண்கள் கலங்கி சொன்னார் விஸ்வநாதன்.. இதைக்கேட்டதுமே போலீசாருக்கு சிரிப்பு வந்துவிட்டது.. திருடவில்லை என்றாலும், திருட்டு முயற்சியில் ஈடுபட்ட குற்றத்துக்காக விஸ்வநாதன் ஜெயிலில் உள்ளார்.
ஆட்டோ டிரைவர்: ஆனால், இப்போது ஒரு சம்பவம் குமரி மாவட்டத்தில் நடந்துள்ளது.. ஆனால் திருட்டு சம்பவமில்லை.. குளச்சலைச் சேர்ந்தவர் ஜெயச்சந்திரன்.. 54 வயதாகிறது. ஆட்டோ ஓட்டி வருகிறார்.. இவர் குளச்சல் மெயின் ரோட்டில் தூய மரியன்னை மேல்நிலைப்பள்ளி எதிரில் உள்ள ஒரு ஏடிஎம் மையத்துக்கு, பணம் எடுக்க போயுள்ளார்.. தன்னிடமிருந்து ஏடிஎம் கார்டை செருக முயன்றபோது, திடீரென பணம் தானாகவே கையில் வந்து கொட்டி உள்ளது..
ஏடிஎம் கையிலேயே இருக்கிறது.. கார்டையே செருகவில்லை, அதற்குள் பணம் வருகிறதே என்று அதிர்ந்து போனார் ஜெயச்சந்திரன்.. பிறகு அந்த பணத்தை எடுத்து எண்ணி பார்த்தார். அதில் மொத்தம் 50 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் இருந்திருக்கின்றன.. இது எல்லாமே ரூ.500 நோட்டுகள் ஆகும்.. அந்த ஏடிஎம் மையத்தில் ஜெயச்சந்திரன் தவிர வேறு யாருமே இல்லை.
வங்கி மேலாளர்: எனினும், இந்த பணம் தன்னுடையது இல்லை என்பதால், அதனை ஒப்படைக்க வேண்டும் என்பதற்காக, சம்பந்தப்பட்ட வங்கிக்கு சென்றார் ஜெயச்சந்திரன்.. வங்கி மேலாளரிடம் நடந்த விஷயத்தை சொல்லி, 50 ஆயிரம் ரூபாய் பணத்தையும் ஒப்படைத்தார். ஜெயச்சந்திரனின் இந்த நேர்மையை வங்கி மேலாளரும், அங்கிருந்த ஊழியர்களும், வங்கிக்கு வந்திருந்த பொதுமக்களும் வியந்து பாராட்டினார்கள்..
இதுகுறித்து வங்கி மேனேஜர் சொல்லும்போது, "சம்பந்தப்பட்ட ஏடிஎம் மிஷினில் எந்திரத்தில் பணம் எடுப்பதோடு, டெபாசிட் செய்யும் வசதியும் உள்ளது. ஜெயச்சந்திரன் செல்வதற்கு முன்பு, கஸ்டமர்கள் யாராவது பணத்தை எந்திரத்தில் டெபாசிட் செய்திருக்கலாம். ஆனால் எந்திரத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக பணம் உரிய கணக்கில் டெபாசிட் ஆகாமல் இருந்திருக்கும். இது தெரியாமல் அந்த கஸ்டமரும் அங்கிருந்து கிளம்பி சென்றிருக்கலாம்.
கிரேட் - கிரேட்: பிறகு, ஜெயச்சந்திரன் சென்றபோது அந்த பணம் வெளியே வந்துள்ளது. அதனால், சம்பந்தப்பட்ட வாடிக்கையாளரை வரவழைத்து அவரது கணக்கில் அந்த பணம் வரவு வைக்கப்படும்" என்றார்..
இந்த சம்பவம் கன்னியாகுமரியில் பெரும் பரபரப்பை தந்துவருகிறது.. ஆனாலும், அந்த ஏடிஎம் மிஷினை சரிசெய்து விட்டார்களா? என்று தெரியவில்லை. ஏடிஎம் மிஷினை உடைத்து திருடும் சில நபர்களுக்கு மத்தியில், ஜெயச்சந்திரன் போன்ற நேர்மையாளர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.. கிரேட்.. கிரேட்..!!
கள்ள நோட்டுகள்: ஏடிஎம்-ல் கள்ள நோட்டுகள் கிடைத்தால், வாடிக்கையாளர்கள் சில வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்.. எந்த ஏடிஎம்-ல் பணம் எடுக்கப்பட்டதோ, அதன் அருகிலுள்ள அந்த வங்கிக்குச் செல்லவேண்டும். அந்தப் பணத்தை முதலில் பரிசோதித்து அது கள்ள நோட்டாக இருக்கும் பட்சத்தில், "கள்ள நோட்டு" என்று பணத்தின் மீது சீல் வைக்கப்படும். அதன்பின் வாடிக்கையாளரின் முகவரி மற்றும் அடையாளச் சான்றை வாங்கி, அவரிடம் கையெழுத்து வாங்கப்படும்.
ஒவ்வொரு வங்கியிலும் கள்ள நோட்டுக்கு என்றே தனி பதிவேடு, ஒன்று வங்கி மேலாளரிடம் இருக்கும். அதில் வாடிக்கையாளர் கொண்டுவந்த கள்ள நோட்டு குறித்த விவரம் பதிவு செய்யப்படும். மீண்டும் வாடிக்கையாளருக்கு அந்தக் கள்ள நோட்டு திரும்ப வழங்கப்பட மாட்டாது. ஏடிஎம்-ல் எடுத்த கள்ள நோட்டுக்குப் பதிலாக வேறு ரூபாய் நோட்டு வழங்கப்படும்.
இறுதியாக, வங்கியாளர்கள், வாடிக்கையாளர் வழங்கியதில் 3, 4 கள்ள நோட்டுகள் இருந்தால், அது குறித்த விவரங்களை போலீஸ் ஸ்டேஷனில் தெரியப்படுத்தி, எஃப்ஐஆர் பதிவு செய்வார்கள்.
புகார் தரலாம்: அதே சமயம், வாடிக்கையாளர் ஏடிஎம்-லிருந்து கள்ள நோட்டை எடுத்திருந்தால் அதை வங்கிகளில் நிரூபிக்கவேண்டும். கள்ள நோட்டு தொடர்பாக ஒருவேளை வங்கி அதிகாரிகள் உங்களுக்கு முறையான பதிலை அளிக்கவில்லையானால், அல்லது கள்ள நோட்டுக்குப் பதில் வேறு பணத்தை வழங்கவில்லை எனில், காவல் நிலையத்தில் அது குறித்து நீங்கள் புகார் செய்யலாம்.












Click it and Unblock the Notifications