ரேஷன் கடையில் என்னப்பா அது.. நல்லா இருக்கே.. தமிழ்நாட்டிற்கே முன்மாதியான கன்னியாகுமரி கடை
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் பார்த்திபபுரம் பகுதியில் பணியாற்றும் ரேஷன் கடை ஊழியர், தன் மீதான முறைகேடு குற்றச்சாட்டை பொய் என நிரூபிக்க ரேஷன் கடையில் கண்காணிப்பு கேமராவை பெண் ஊழியர் பொருத்தி இருக்கிறார். இவரது நடவடிக்கையை பலரும் சமூக வலைதளங்களில் பார்த்து பாராட்டி வருகிறார்கள்.
கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை அருகே நடைக்காவு பகுதியை சேர்ந்த நிஷாராணி என்பவர் பார்த்திபபுரம் பகுதியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திற்கு சொந்தமான ரேஷன் கடையில் விற்பனையாளராக வேலை செய்து வருகிறார்.

ரேஷன் கடை ஊழிராக உள்ள நிஷாராணி மீது சிலர் வேண்டுமென்ற முறைகேடு நடப்பதாக குற்றம்சாட்டி விமர்சித்து வந்தார்களாம். மேலும் அவ்வப்போது வந்து ஏதாவது ஒரு காரணத்தை கூறி சிலர் தகராறில் ஈடுபட்டு வந்தார்களாம்
இதுசம்பந்தமாக நிஷாராணி புதுக்கடை காவல் நிலையில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் சம்பந்தப்பட்ட நபர்களிடம் விசாரணை நடத்திய போது, ரேஷன் பொருள் கடத்தலுக்கு நிஷாராணி துணை போவதாக புகாரில் சிக்கியவர்கள் குற்றம்சாட்டினார்கள்.
இதையடுத்த இதனை பொய் என நிரூபிக்கும் வகையில் செயல்பட வேண்டும் என நிஷாராணிக்கு போலீசார் சில அறிவுரையை கூறியுள்ளனர். அதன்படியே தான் பணிபுரியும் பார்த்திபபுரம் ரேஷன் கடையில் எந்த முறைகேடு நடந்தாலும் அதனை கண்டுபிடிக்கவும், கடையின் முன்பு யாரேனும் வந்து தகராறில் ஈடுபட்டால் அந்த நபர்கள் பற்றி ஆதாரங்களை சேகரிக்கவும் நிஷாராணி கடையில் கண்காணிப்பு கேமராவை பொருத்தி இருக்கிறார்.
இந்த கண்காணிப்பு கேமராவை தனது சொந்த செலவில் இதற்கான ஏற்பாடுகளை செய்தார் என்பது தான் கூடுதல் ஹைலைட். தன்மீதான குற்றச்சாட்டை பொய் என நிரூபிக்க ரேஷன் கடையில் கண்காணிப்பு கேமரா பொருத்திய பெண் ஊழியரின் இந்த செயலை அந்த பகுதியை சேர்ந்த மக்கள் சமூக வலைதளங்களில் வெகுவாக பாராட்டி வருகிறார்கள்.
இதேபோன்று தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி கண்காணித்தால் முறைகேடு நடப்பது முற்றிலும் தடுக்கப்படும் என்றும், அனைத்து ரேஷன் கடை பணியாளர்களுக்கும் உரிய பாதுகாப்பு இருக்கும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications