இனோவா காருக்குள் மே மே.. ஆட்டை ஆட்டைய போட்ட பாஜக ரஞ்சித்! ”கோட்” திருடனை கொத்தாகத் தூக்கிய போலீஸ்!
கரூர் : கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி பகுதியில் 16 ஆடுகளை திருடிய கொடைக்கானல் பாஜக ஒன்றிய இளைஞரணி செயலாளர் ரஞ்சித் குமார் உட்பட 3 நபர்களை கைது செய்துள்ள போலீசார், மேலும் இரண்டு பேரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். கடந்த சில நாட்களாக கரூர் பகுதியில் இனோவா காரில் ஆடுகளை ஆட்டைய போட்டது தெரியவந்துள்ள நிலையில், போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே கடந்த 27 ஆம் தேதி அதிகாலை TN01 AB 2333 என்ற பதிவு எண் கொண்ட இனோவா காரில் வந்த ஐந்து நபர்கள் 16 ஆடுகளை திருடி சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அரவக்குறிச்சி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

அதில், கொடைக்கானல் , கீழ் மழை பாஜக ஒன்றிய இளைஞரணி துணை செயலாளர் ரஞ்சித் குமார் (38) மற்றும் சதீஷ்குமார்(26), சிவகுமார்(25) உட்பட 5 நபர்கள் பாஜக கட்சி கொடி கொண்ட இனோவா காரில் ஆடு திருடியது தெரியவந்தது. இதனை தொடர்ந்து மூன்று நபர்களை போலீசார் கைது செய்து ஒரு ஆட்டுக்குட்டி மற்றும் காரை போலீசார் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இரண்டு நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட ரஞ்சித்குமார் திண்டுக்கல் மாணவரணி மாவட்ட செயலாளர் என்றும் இவர் மனித உரிமை கழக உறுப்பினர் என்றும் கூறி காவல்துறை விசாரணைக்கு சரியாக ஒத்துழைக்கவில்லை என கூறப்படுகிறது. உண்மையில், இவர் கறிக்கடை நடத்தி வருகிறார் என்றும் இவரது மனைவி தனியார் பள்ளியில் பணி செய்கிறார் எனவும் தெரியவந்துள்ளது. இவர், தென்னிலை, பரமத்தி மற்றும் அரவக்குறிச்சி காவல் நிலைய பகுதிகளில் ஆடுகளை திருடி இனோவா காரில் கொண்டு சென்றது கண்டுபிடிக்கப்பட்டு ஆடு மற்றும் காரை பறிமுதல் செய்து குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னணி : கரூர் மாவட்டம் வாங்கல், பரமத்தி, புகழூர் உள்ளிட்ட பல பகுதிகளில் ஏராளமான விவசாயிகள், தங்கள் விவசாய நிலங்களில், கூடுதல் வருவாய்க்காக ஆட்டுப் பட்டி அமைத்து ஆடுகளை வளர்த்து வருகின்றனர். பகல் நேரங்களில் ஆடுகளை மேய்ச்சலுக்கு கொண்டு செல்லும் விவசாயிகள், மாலையில் ஆடுகளை ஆட்டுப் பட்டிகளில் அடைத்து விட்டு வீடுகளுக்கு சென்று விடுவது வழக்கம்.
இந்த நிலையில் கடந்த ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் அதிக அளவில் ஆடுகளை, கார்கள், சரக்கு வாகனங்களில் வரும் மர்ம நபர்கள் திருடி செல்வதாக கூறப்படுகிறது. குறிப்பாக கறிக்கடை வைத்து இறைச்சி விற்பனை செய்யும் 'சில' நபர்கள் வெள்ளிக்கிழமை சனிக்கிழமைகளில் ஆடுகளை திருடி உடனடியாக அவற்றை வெட்டி இறைச்சியாக்கி ஞாயிற்றுக்கிழமைகளில் விற்பனை செய்து வருவதாக கூறப்படுகிறது.

தொடர்ந்து இது குறித்து விவசாயிகள் புகாரை தொடர்ந்து காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர். கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது பாஜக பிரமுகர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது ஆடு திருடி சிக்கியிருக்கும் ரஞ்சித்தும் இதேபோல் பல இடங்களில் கைவரிசை காட்டிய நிலையில் தான் கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications