கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: "யார் போன் செய்தது?” ஆம்புலன்ஸ் டிரைவர்களிடம் 4வது நாளாக சிபிஐ விசாரணை!
கரூர்: கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக தொடர்ந்து 4வது நாளாக ஆம்புலன்ஸ் டிரைவர்களிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவம் நடைபெற்ற போது உங்களை தொடர்பு கொண்டது யார்? எந்த செல்போன் எண்ணில் இருந்து உங்களுக்கு அழைப்பு வந்தது? என்ற கேள்விகளுக்கு ஆம்புலன்ஸ் டிரைவர்கள் ஆஜர் ஆகி விளக்கம் அளித்துள்ளனர்.
கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி விஜய் பங்கேற்ற தமிழக வெற்றிக் கழக பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 110 பேர் படுகாயம் அடைந்தனர். இது தொடர்பாக கரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இணைப் பொதுச் செயலாளர் நிர்மல் குமார் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

தமிழக அரசின் சார்பில் பரிந்துரைக்கப்பட்ட வடக்கு ஐ.ஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழு இந்த வழக்கை விசாரிக்கத் தொடங்கியது. கரூர் வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனவும் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை வேண்டாம் எனவும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான உச்சநீதிமன்ற விசாரணையில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில், கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். சில நாட்களுக்கு முன்பு ஆம்புலன்ஸ் டிரைவர்கள் அதன் உரிமையாளர்கள், வீடியோகிராபர்கள் காவல்துறை அதிகாரிகள் என 306 பேருக்கு சி.பி.ஐ சம்மன் அனுப்பினர். தொடர்ந்து அவர்களை நேரில் வரவழைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
7 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மற்றும் ஆம்புலன்ஸ் உரிமையாளர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. தொடர்ந்து நேற்று 3-வது நாளாக ஆம்புலன்ஸ் டிரைவர்களிடம் விசாரனை நடத்தப்பட்டது. இதில் 10-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் டிரைவர்கள் ஆஜர் ஆகி விளக்கம் அளித்தனர். அவர்களை கரூர் மாவட்ட அலுவலக பொதுப்பணித்துறை விருந்தினர் மாளிகைக்கு வரவழைத்து வாக்குமூலம் பெற்றனர்.
இந்நிலையில், 4வது நாளாக இன்றும் ஆம்புலன்ஸ் உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் விசாரணைக்காக ஆஜராகி உள்ளனர். பிரச்சாரத்தின் போது மயக்கம் அடைந்தவர்களும் காயமடைந்தவர்களும் ஆம்புலன்ஸ் உதவியுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். கூட்டத்தில் ஆம்புலன்ஸ் வந்ததும் சந்தேகத்தை ஏற்படுத்துவதாக தவெக தரப்பினர் குற்றம்சாட்டினர். இந்நிலையில் அது தொடர்பாக விசாரிக்கப்பட்டு வருகிறது.
சம்பவம் நடைபெற்ற போது உங்களை தொடர்பு கொண்டது யார்? எந்த செல்போன் எண்ணில் இருந்து உங்களுக்கு அழைப்பு வந்தது? நெரிசலில் சிக்கி ஆம்புலன்சில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட போது எத்தனை பேர் மருத்துவ மனைக்கு செல்லும் வழியில் இறந்தனர்? எத்தனை பேரை பிணமாக சம்பவ இடத்திலிருந்து ஏற்றிச் சென்றீர்கள்? என பல்வேறு கேள்விகளை எழுப்பி, விசாரித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications