சுயேச்சைக்கு ஓட்டு கேட்ட திமுகவினர்.. டென்ஷனான காங்கிரஸ் எம்பி ஜோதிமணி.. தேர்தல் அதிகாரியிடம் புகார்
கரூர்: இன்று மாநிலத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், சுயேச்சை வேட்பாளருக்கு திமுகவினர் ஆதரவு திரட்டிய கரூர் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி புகார் அளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
தமிழ்நாடு முழுவதும் இன்று ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது. சென்னை உட்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளுக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது.
இன்று பதிவாகும் வாக்குகள் வரும் பிப். 22இல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. அதைத் தொடர்ந்து மார்ச் 4ஆம் தேதி மேயர்களை தேர்வு செய்யும் மறைமுகத் தேர்தல் நடைபெறுகிறது.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்
தமிழ்நாடு முழுவதும் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. மாநிலம் முழுவதும் சில இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுதடைந்ததால், சில இடங்களில் சற்றே தாமதமாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடங்கியது. காலை முதலே வாக்காளர்கள் ஆர்வமுடன் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்து வருகின்றனர். தமிழ்நாட்டில் இதுவரை அமைதியான முறையிலேயே வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

கரூர்
அதன்படி கரூர் மாவட்டத்தில் மொத்தம் 48 வார்டுகள் உள்ள நிலையில், அதில் ஒருவர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். மீதமுள்ள 47 வார்டுகளில், இன்று காலை முதல் தேர்தல் விறுவிறுப்பாகத் தேர்தல் நடைபெற்று வருகின்றது. கரூர் 12ஆவது வார்டில் உள்ள, அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளைச் சார்ந்த 8 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அப்பகுதியில் உள்ள புனித மரியன்னை அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

சுயேச்சைக்கு ஆதரவு திரட்டி திமுக
இந்நிலையில், திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட இடத்திலேயே, திமுக அமைச்சரும், மாவட்ட திமுக பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி ஆதரவு பெற்ற சுயேச்சை வேட்பாளர் களம் இறங்கி உள்ளார். தென்னை மரச் சின்னத்தில் போட்டியிடும் அந்த வேட்பாளருக்கு வாக்களிக்குமாறு திமுகவினர் வாக்குச் சாவடிக்குள் இருந்து கேட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

கரூர் எம்பி ஜோதிமணி
இது தொடர்பாக முதலில் கரூர் மாவட்ட பாஜக சார்பில் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் புகார் அளித்துள்ளார். அதைத் தொடர்ந்து அதிமுக மற்றும் இதர சுயேச்சை வேட்பாளர்களும் புகார் அளித்தனர். இதையடுத்து அப்பகுதிக்கு வந்த கரூர் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி, மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரியும், மாவட்ட ஆட்சியருமான பிரபு சங்கரிடம் செல்போன் வாயிலாகப் புகார் அளித்தார். இந்தச் சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications