கரூர் தவெக கூட்ட நெரிசல் பலிகள்.. அரசியல் ரீதியாக விஜய்க்கு பின்னடைவை ஏற்படுத்துமா?
கரூர்: தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நடத்தின கரூர் பொதுக்கூட்டம் விபரீதமாக மாறியது. செப்டம்பர் 27 இரவு நிகழ்ந்த கூட்ட நெரிசலில் 39 உயிர்கள் பலியாகி, 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்தச் சம்பவம், 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு விஜய் கட்டியெழுப்பிக் கொண்டிருந்த அரசியல் பயணத்திற்கு கடும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இது அரசியல் கூட்டம் என்பதால் அரசியல் பாதிப்பை பற்றி பேசுவதும் அவசியமாகிறது. எனவேதான் பல தரப்பினரின் கருத்து தொகுப்பு அடிப்படையில் இந்த கட்டுரை வழங்கப்பட்டுள்ளது.

விஜய் மீது வழக்குகள் பதிவு
பெரும் மனித உயிரிழப்புக்குப் பின், தமிழக காவல்துறை விஜய் மற்றும் அவரது கட்சி TVK மீது FIR பதிவு செய்துள்ளது. கொலை முயற்சி, கொலைக்கு நிகரான குற்றவியல் மனிதப் படுகொலை, அரசு உத்தரவுகளை மீறல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதியப்பட்டுள்ளது. TVK கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் மதியழகன் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
10,000 பேருக்கே அனுமதி இருந்த கூட்டத்தில் 30,000-க்கும் அதிகமானோர் கூடியிருந்தது மிகப்பெரிய விதிமீறலாகக் கருதப்படுகிறது. மேலும், விஜய் திட்டமிட்ட நேரத்தைவிட 6 மணி நேரம் தாமதமாக வந்தது நிலைமையை மோசமாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அரசியல் பிம்பத்துக்கு கேள்விக்குறி
மக்கள் உயிரிழந்த நிலையிலும் காயமடைந்தவர்களைச் சந்திக்காமல், உடனே கரூரை விட்டு விஜய் புறப்பட்டுச் சென்றது கடும் விமர்சனத்தை கிளப்பியுள்ளது. அவரது செய்தித் தொடர்பாளர் கூறிய "விஜய் மருத்துவமனைக்குச் சென்றால் மேலும் நெரிசல் ஏற்படும்" என்ற காரணம் பொதுமக்கள் கோபத்தை அதிகரித்துள்ளது.
அவர் திருச்சியிலாவது இருந்துவிட்டு இன்று வந்திருக்க வேண்டும். தனி விமானத்தில் சென்னை போய் தனது சொகுசு இல்லத்தில் தூங்கியது ஏன் என்ற கேள்வி மக்கள் மனதில் எதிரொலிக்கிறது. இதனால் விஜய்யின் தலைமைத் திறன், நெருக்கடி மேலாண்மை திறனைப் பற்றிய கேள்விகள் எழுந்துள்ளன. இவர் கையில் அரசாங்கம் இருந்தால் எப்படி உடனுக்குடன் திறமையான முடிவுகளை எடுப்பார்.. முக்கியமாக மனிதாபிமானமாக நடந்துகொள்வாரா என்ற கேள்வியையும் இந்த சம்பவம் எழுப்பியுள்ளது.
திமுகவின் விரைவான நடவடிக்கை
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு அறிவித்ததுடன், ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணைக் குழுவையும் அமைத்துள்ளார். மேலும், கரூருக்கு நேரில் சென்று நிவாரணப் பணிகளை மேற்பார்வையிட்டும், அரசின் பொறுப்புள்ள முன்னவராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார்.
திமுகவின் செய்தித் தொடர்பாளர்கள் விஜய்யையே நேரடியாக குற்றவாளியாக சுட்டிக்காட்டி வருகின்றனர். "திட்டமிட்டு கூட்டத்தை நடத்தியவர் விஜய்யே; உயிரிழப்புக்கு அவர்தான் பொறுப்பு" என்று அவர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
தவெகவிற்கு சரிவு
இந்தச் சம்பவத்தால் ஆளும் திமுக அரசு பெரிய பாதிப்பைச் சந்திக்கவில்லை. மாறாக, பாதுகாப்பு குறைபாடு குறித்த குற்றச்சாட்டுகளை TVK மீதே கூறிவருகிறது. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சை பணிகளை மேற்பார்வையிட்டதும், அரசின் முனைப்பை வெளிப்படுத்தியது. அதேநேரம், திமுக அரசு சரியான வசதிகள் செய்யவில்லை என்ற தவெக குற்றச்சாட்டுக்கு செவி சாய்க்கும் மக்களும் உள்ளனர். ஆனால், அவர்களே கூட விஜய் சென்னைக்கு ஓடிப்போனதைத்தான் ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை என்கிறார்கள்.
விஜய்க்கு பின்னடைவு
கரூரில் நிகழ்ந்த இந்த விபத்து, விஜய்யின் அரசியல் வாழ்வில் மிகப் பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழப்புகள் காரணமாக மக்களின் மனதில் ஏற்பட்ட அதிருப்தி, அவரின் அரசியல் நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்கியுள்ளது.
இனிமேல் விஜய் என்ன மாதிரி பேசி அல்லது அறிக்கை விட்டு இந்த விஷயத்தை திமுக பக்கம் திருப்புகிறார் என்பதை பொறுத்தே அரசியல் மாறும். இன்றைய நிலவரப்படி, விஜய் கடுமையாக தடுமாறியது அம்பலமாகிவிட்டது மட்டும் உண்மை. தடுமாற்றம் என்பதை தாண்டி, பொறுப்பற்றத் தன்மை என்ற வார்த்தை, ரத்தக் கறையாக விஜயின் கை மீது அப்பி உள்ளது. இவரை நம்பி எப்படி அணிவகுப்பது என்ற கேள்வியை அந்த திருச்சி டூ சென்னை விமான "தப்பியோட்டம்" நினைவுபடுத்திக்கொண்டே உள்ளது.












Click it and Unblock the Notifications