காரை கூட அனுப்பி வைத்த செந்தில் பாலாஜி! சிறையில் இருந்தே பக்கா வியூகம்! ஜோதிமணிக்கு லக்தான் போலயே
கரூர்: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் சிறையில் இருந்தாலும் கரூர் நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியை ஜெயிக்க வைப்பதற்கான பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறாராம்.
கரூரில் எம்பி ஜோதிமணி காங்கிரஸ் சார்பாக மீண்டும் களமிறங்கி உள்ளார். இவருக்கும் செந்தில் பாலாஜிக்கும் இடையில் கொஞ்சம் மனஸ்தாபம் இருந்ததாக கூறப்பட்டாலும் இப்போது ஜோதிமணிக்காக தீவிரமாக களப்பணிகளை செந்தில் பாலாஜி முடுக்கி விட்டுள்ளார்.

அதன்படி தன்னை சிறையில் சந்தித்த சிலர் மூலம் முதல்வர் ஸ்டாலினுக்கு முக்கியமான தகவல் ஒன்றை அனுப்பி உள்ளாராம் செந்தில் பாலாஜி. அதில்.. கரூர், கோவையில் நாம்தான் ஜெயிக்க வேண்டும்.
தேர்தல் பணிகளை எனக்கு நெருக்கமானவர்கள் பார்த்துக்கொள்வார்கள். திமுகவில் சரியாக இருக்கும் சிலரின் பெயர்களையும் குறிப்பிட்டு செந்தில் பாலாஜி தலைமைக்கு தகவல் அனுப்பி உள்ளாராம். இவர்களை விட்டு வேலை வாங்குங்கள் என்று கூறியுள்ளாராம். கொங்கு அரசியலை கரைத்து குடித்தவர் என்பதால் செந்தில் பாலாஜியின் ஆலோசனைகளை திமுக கேட்டு செயல்பட்டு வருகிறதாம்.
அவர் சொன்னதன் அடிப்படையிலே கோவையில் இந்த முறை கூட்டணி கட்சியை களமிறக்காமல் திமுக வேட்பாளரை களமிறக்கி உள்ளனராம். கோவை லோக்சபா தொகுதி வேட்பாளராக கணபதி ராஜ்குமார் அறிவிக்கப்பட்டு உள்ளார். பலரின் பெயர்கள் இதற்காக சுற்றி வந்த நிலையில் சர்ப்ரைஸாக கணபதி ராஜ்குமார் அறிவிக்கப்பட்டு உள்ளார். செந்தில் பாலாஜிதான் இங்கே கணபதியை கொண்டு வர முக்கிய காரணமாக இருந்தவர்.
இது போக கரூரிலும் திமுக வேட்பாளரை இந்த முறை நிறுத்த வேண்டும் என்று செந்தில் பாலாஜி கேட்டு இருக்கிறார். ஆனால் ஜோதிமணி காங்கிரஸ் தயவில் இங்கே நிற்க வாய்ப்பை பெற்றுவிட்டார்.
இப்படிப்பட்ட நிலையில்தான் செந்தில் பாலாஜி ஆட்கள்.. திமுக வேட்பாளர் நிற்கவில்லை என்பதால் சுணக்கம் அடைந்துள்ளனர். ஆனால் செந்தில் பாலாஜியோ நான் இல்லை என்றாலும்.. அங்கே யார் நின்றாலும் நம்ம கூட்டணிதான் வெல்ல வேண்டும். ஜோதிமணி நம் கூட்டணி தானே அவருக்காக களத்தில் இறங்குங்கள் என்று கூறி கோவையிலும், கரூரிலும் கூடுதல் ஆட்களை இறக்கி பணிகளை தீவிரப்படுத்தி இருக்கிறாராம்.
எப்போதும் இறங்குவதை விட 3 மடங்கு ஆட்களை இறக்கி கிரவுண்டு வேலைகளை செய்து வருகிறாராம். இதன் காரணமாக உற்சாகம் அடைந்த திமுகவினர் ஜோதிமணியை வெற்றிபெற வைக்க வேண்டும் என்று மிக தீவிரமாக பணியாற்றி வருகிறார்களாம். திமுக காங்கிரஸ் மிக இணக்கமாக பணியாற்றும் முதல் தொகுதியாக இருக்கிறது கரூர்.
கார் கொடுத்து உதவி: கரூர் தொகுதி தேர்தல் பொறுப்பு திமுக தேர்தல் பொறுப்பாளர் மாநிலங்களவை உறுப்பினர் எம் எம் அப்துல்லாவிற்கு கொடுக்கப்பட்டு உள்ளது. அங்கே இவருக்கு செந்தில் பாலாஜி ஆட்கள் வேலை பார்த்து வருகின்றனர். முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தன் சொந்தக் காரையே கொடுத்து பிரச்சாரத்திற்கு அனுப்பி வைத்திருக்கிறார்.
ஆம்.. படைபலம் தொடங்கி வியூக பலம் வரை மொத்தமாக செந்தில் பாலாஜி வழங்கி உள்ளாராம். அப்துல்லாவும் ஜோதிமணியும் தொகுதியை புயலாகச் சுற்றி வருகிறார்கள். சிறையிலிருந்தபடியே கரூர் தொகுதியை இயக்கி வருகிறாராரோ முன்னாள் அமைச்சர் என்று நினைக்க வைக்கும் அளவிற்கு தேர்தல் பிரச்சார அணுகுமுறைகளில் செந்தில் பாலாஜி ஸ்டைல் இருக்கிறதாம். இந்த தீவிர பணிகள் காரணமாக ஜோதிமணி கரூரை தக்கவைக்கவே வாய்ப்புகள் அதிகம் என்கின்றனர் களத்தில் பணி செய்யும் நிர்வாகிகள்.
புகழ்ச்சி: இதை எல்லாம் பார்த்த பின்பே, ஈரோட்டில் முதல்வர் ஸ்டாலின் தனது பேச்சின் தொடக்கத்திலேயே, செந்தில் பாலாஜியை புகழ்ந்துள்ளார். அதில், இந்தக் கூட்டத்தை இவ்வளவு எழுச்சியோடும் - சிறப்போடும் ஏற்பாடு செய்துள்ள ஆற்றல்மிகு ஈரோட்டுச் செயல்வீரர் முத்துசாமி உள்ளிட்ட அமைச்சர் பெருமக்களுக்கும், முக்கியமாக இங்கு வரவில்லை என்றாலும், தன்னுடைய பணிகள் மூலம் நம் உள்ளங்களைப் பெற்றிருக்கும் சகோதரர் செந்தில் பாலாஜி அவர்களுக்கும், என்னுடைய நன்றியும்!
மேற்கு மண்டலத்தின் வலிமையான செயல்வீரர் செந்தில் பாலாஜியையும் இதே மாதிரிதான் சிறையில் அடைத்து வைத்திருக்கிறார்கள். ஜாமீன் கூட கொடுக்காமல் பல மாதங்களாக அவரை சிறையில் வைத்திருக்கிறார்கள். மேற்கு மண்டலத்தில் அவரின் பணிகளை முடக்க வேண்டும் என்று இந்த சதிச் செயலைச் செய்தார்கள். பாஜகவின் அத்தனை சதிச் செயல்களையும் கடந்து, செந்தில் பாலாஜியால் உருவாக்கப்பட்ட செயல்வீரர்கள் களத்தில் வேகமாக பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள், என்று முதல்வர் ஸ்டாலின் கூறியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications