நம்பிக்கையோடு இருங்க விஜய்..நீங்க தான் ஜெயிப்பீங்க! கரூர் நெரிசலில் 2 குழந்தைகளை இழந்த தாய் உருக்கம்
கரூர்: நம்பிக்கையோடு இருங்க விஜய்.. நீங்க தான் ஜெயிப்பீங்க என்று கரூர் கூட்ட நெரிசலில் இரு குழந்தைகளை பறிகொடுத்த தாய் உருக்கமாக பேசியுள்ளார். கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 20 நாட்கள் கழித்து ரூ.20 லட்சம் வங்கி அக்கவுண்டில் வரவு வைக்கப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கடந்த மாதம் 27 ஆம் தேதி கரூர் வேலுசாமிபுரத்தில் பிரச்சார கூட்டம் நடந்தது. விஜய் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். அப்போது அங்கு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பெண்கள், குழந்தைகள் என 41 பேர் உயிரிழந்தனர்.

ரூ.20 லட்சம் அறிவிப்பு
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தற்போது இந்த கூட்ட நெரிசல் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன்படி இன்று முதல் கரூர் கூட்டநெரிசல் தொடர்பாக சிபிஐ விசாரணையை தொடங்கியுள்ளது. முன்னதாக கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தவெக சார்பில் ரூ.20 லட்சம் வழங்கப்படும் என விஜய் அறிவித்து இருந்தார்.
ஆனால் 20 நாட்கள் ஆகியும் விஜய் இன்னும் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று சந்திக்கவில்லை. மேலும் ரூ.20 லட்சம் வழங்கப்படும் என்று கூறியும் 20 நாட்களாக வழங்காமல் இருந்தனர். இந்த நிலையில் இன்று தவெக சார்பில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.20 லட்சம் அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது.
இரு மகள்களும் உயிரிழந்துவிட்டனர்
ஏற்கனவே சிடிஆர் நிர்மல் குமார், தவெக நிர்வாகிகள் உள்ளிட்டோர் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து இருந்தனர். அப்போது விஜய் வீடியோ காலில் பேசி ஆறுதல் கூறினார். இந்த நிலையில் பணம் அக்கவுண்டில் ஏறியது குறித்து கூட்ட நெரிசலில் சிக்கி பழனியம்மாள், கோகிலா ஆகிய இரண்டு பெண் குழந்தைகளை இழந்த செல்வராணி என்பவர் உருக்கமாக பேசியுள்ளார். அவர் கூறியதாவது:-
என் பெயர் செல்வராணி.. எனது மகள்கள் பழனியம்மாள், கோகிலா.. இருவரும் விஜய் கூட்டத்திற்கு என்னுடன் தான் வந்திருந்தனர். நானும் கூட்ட நெரிசலில் சிக்கி மயக்கமடைந்தேன். மருத்துவமனையில் இருந்த போது தான் எனக்கு எல்லாமே தெரிந்தது. என் மகள்கள் இருவரும் இறந்துவிட்டனர் என்று..
நீங்க தான் ஜெயிப்பீங்க..
இன்னைக்கு விஜய் ரூ.20 லட்சம் போட்டு விட்டுருக்கார்.. என்ன தான் இருந்தாலும் என் மகள்களது இழப்பிற்கு இது ஈடாகாது.. நாங்க கஷ்டப்படக் கூடாது என்பதற்காக இந்த பணத்தை போட்டு விட்டுருக்கார். நான் விஜய்க்கு என்ன சொல்வேன் என்றால், நம்பிக்கையோடு இருங்கள்.. இந்த முறை நீங்க தான் ஜெயிப்பீர்கள்.. இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே தவெக தலைவர் விஜய் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:- என் நெஞ்சில் குடியிருக்கும் உங்களுக்கு, வணக்கம். கரூரில் ஏற்பட்ட தாங்க முடியாத வேதனையான நிகழ்வில் நம் குடும்ப உறவுகளை இழந்து தவிக்கிறோம். இந்தச் சூழலில் உங்களுக்கு ஆறுதலாகவும் ஆதரவாகவும் எல்லா வகையிலும் இருப்போம் என்பதை மீண்டும் உறுதிபடத் தெரிவித்துக்கொள்கிறோம்.
நிச்சயமாகச் சந்திப்போம்
சென்ற வாரம் உங்களுடனான நம் துக்கத்தைப் பகிர்ந்துகொள்ள மேற்கொண்ட காணொளி அழைப்பில் நாம் சொன்னது போலவே, நமது சந்திப்பிற்காக, அதற்கான சட்டரீதியான அனுமதி முன்னெடுப்புகளை எடுத்து வருகிறோம். அனுமதி கிடைத்ததும் நிச்சயமாகச் சந்திப்போம்.
இதனிடையே, நாம் ஏற்கனவே (28.9.2025 அன்று) அறிவித்தபடி குடும்ப நல நிதியாக ரூ.20 லட்சத்தை வங்கியின் RTGS வழியாகத் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக (18.10.2025) அனுப்பி வைத்துள்ளோம். அதை நமது உதவிக் கரமாக ஏற்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். இறைவன் அருளுடன் இந்தக் கடினமான தருணத்தைக் கடந்து வருவோம்.. என்று கூறியிருந்தார்.












Click it and Unblock the Notifications