ஷவர்மா.. பர்கர்.. அடுத்து கிருஷ்ணகிரியில் விஷமான சிக்கன் ரைஸ்.. 26 பேர் மருத்துவமனையில் அனுமதி
கிருஷ்ணகிரி: ஷவர்மா சாப்பிட்டு சிறுமி உயிரிழந்த சோகம் மறையும் முன் பர்கர் சாப்பிட்டு அந்த பாதிப்பில் இளைஞர் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அந்த அதிர்ச்சி மறையும் முன்பாக கிருஷ்ணகிரியில் சிக்கன் ரைஸ் சாப்பிட்ட 26 பேர் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நாமக்கல் மாவட்டத்தில் தனியார் உணவகத்தில் ஷவர்மா சாப்பிட்ட 14 வயது சிறுமி உயிரிழந்தார். 43 பேர் உடல் நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து, உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட உணவகத்தை ஆய்வு செய்து, சீல் வைத்தனர். மேலும், புகாரின் அடிப்படையில் கடையின் உரிமையாளர்களைக் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டத்தில் ஷவர்மா விற்பனை செய்ய தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் உணவகங்களுக்குச் சென்று ஆய்வு செய்து வருகின்றனர். பல ஆயிரம் கிலோ கெட்டுப்போன சிக்கன், மீன், மட்டன் போன்றவை ப்ரீஷரில் சேமித்து வைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்து அழித்தனர். பல உணவங்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கிருஷ்ணகிரியில் நேற்று இரவு சிக்கன் ரைஸ் சாப்பிட்ட 26 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கிருஷ்ணகிரியிலுள்ள தனியார் உணவகத்தில் நேற்று இரவு 150 பேருக்கு சிக்கன் ரைஸ் வாங்கி செல்லப்பட்டது. அதைச் சாப்பிட்ட வடமாநிலத்தவர் 26 பேருக்கு உடல்நிலை பாதிப்பு வயிற்றுப்போக்கு உள்ளிட்டவை ஏற்பட்டதைத் தொடர்ந்து, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்குச் சென்ற காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.













Click it and Unblock the Notifications