கிருஷ்ணகிரியில் பிரபல தொழில் அதிபர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை.. காரணம் என்ன?
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் செல்வாக்கு மிக்க தொழில் அதிபராகவும் நகர அனைத்து வணிகர்கள் சங்கத்தின் தலைவராகவும் இருந்து வந்த சுரேஷ் என்பவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரியில் உள்ள காந்தி நகர் பகுதியில் சுரேஷ் என்பவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தார். கிருஷ்ணகிரி வட்டாரத்தில் மிகவும் பிரபலமான தொழில் அதிபராக இருந்து வந்த சுரேஷுக்கு சொந்தமாக நகைக்கடைகள் உள்ளது. ஜூவல்லரி தொழில் தவிர ரியல் எஸ்டேட் தொழிலும் சுரேஷ் செய்து வந்துள்ளார். கிருஷ்ணகிரி நகர அனைத்து வணிகர்கள் சங்கத்தின் தலைவராகவும் சுரேஷ் இருந்து வந்தார்.

இந்த நிலையில், இன்று காலை 7 மணியளவில் வீட்டில் தனது அறையில் சுரேஷ் இருந்துள்ளார். அப்போது திடீரென துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டுள்ளது. இதனால், அதிர்ச்சி அடைந்த சுரேஷின் மனைவி மற்றும் அவரது பிள்ளைகள் அறைக்கு சென்று பார்த்த போது ரத்த வெள்ளத்தில் சுரேஷ் சடலமாக கிடந்ததாக தெரிகிறது. உடனடியாக கிருஷ்ணரி போலீசாருக்கு சுரேஷின் மனைவி தகவல் கொடுத்தார்.
தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார், சுரேஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதானைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், தொழில் அதிபர் சுரேஷ், துப்பாக்கி வைத்திருப்பதற்கான லைசன்ஸ் பெற்றிருப்பது தெரியவந்தது. இரவு வழக்கம் போல மனைவி, குழந்தைகளுடன் பேசிவிட்டு தனது அறைக்கு தூங்க போனதாகவும் காலையில் திடீரென தற்கொலை செய்து கொண்டதாகவும் குடும்பத்தினரிடம் நடத்திய முதல் கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.

கிருஷ்ணகிரி அனைத்து வணிகர் சங்க தலைவராக இருந்து சுரேஷ் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி வணிகர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி பகுதியில் பிரபலமானவராக இருந்து வந்த சுரேஷ் தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து பல்வேறு கோணங்களிலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொழில் அதிபர் சுரேஷ் தற்கொலை செய்து கொண்டதையடுத்து கிருஷ்ணகிரி டவுன் பகுதியில் இன்று கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. போலீசார் தொடர்ந்து பல்வேறு கோணங்களில் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த சில நாட்களாக இவர் மன வருத்தத்தில் இருந்ததாகவும் அதிக அளவு ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு இருந்ததாகவும் சொல்லப்படுகிறது. ரியல் எஸ்டேட்டில் தொழிலில் முதலீடுகள் பெருமளவு சிக்கி கொண்டதாகவும் இதனால் மன உளைச்சலில் சுரேஷ் இருந்ததாகவும் சொல்லப்படுகிறது போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கிருஷ்ணகிரி - பெங்களூர் சாலையில் உள்ள அவரது வீட்டிற்கு உறவினர்களும் நண்பர்களும் குவிந்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications