எச்ஐவி பாதிப்பால் மகனை கொன்று தாய் எடுத்த விபரீத முடிவு.. கிருஷ்ணகிரியில் யாருக்கும் வரக்கூடாத சோகம்
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே யாருக்கும் வரக்கூடாத சோகச் சம்பவம் நடந்துள்ளது. தொழில் அதிபருக்கு ஏற்பட்ட எச்.ஐ.வி காரணமாக அவரது மனைவி விபரீத முடிவை எடுத்துள்ளார். எச்.ஐ.வி நோயால் பாதிக்கப்பட்ட மகனையும் மனதை கல்லாக்கி கொண்டு மூச்சுத்திணறடித்து கொலை செய்து தானும் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி அருகே டிரான்ஸ்போர்ட் தொழில் செய்து வந்தவர் 40 வயது நபர். இவருக்கு திருமணம் ஆகி ஒரு மகளும், 9 வயதில் ஒரு மகனும் உண்டு. இந்த நிலையில் தொழில் அதிபருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் அவரது மனைவி தொழில் அதிபரை மருத்துவனையில் அனுமதித்தார்.

அங்கு அவருக்கு பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட்டன. இதில் அதிர்ச்சி அளிக்கும் விதமாக தொழில் அதிபருக்கு எச்.ஐ.வி தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. எய்ட்ஸ் நோய் பாதிப்பு கண்டறியப்பட்டதால் அவரது மனைவி மிகுந்த அதிர்ச்சிக்குள்ளானர். இதனால் கடும் மன உளைச்சலில் இருந்த அவருக்கு தனக்கும் எச்.ஐ.வி தொற்று இருக்குமோ என்று அச்சம் ஏற்பட்டுள்ளது.
மேலும் மகன் மற்றும் மகளுக்கும் பாதிப்பு இருக்குமோ என பயந்துள்ளார். இதனால் மறுநாள் அதே மருத்துவமனைக்கு சென்று மகள், மகன் மற்றும் தனக்கு எச்.ஐ.வி பரிசோதனை செய்ய கோரியுள்ளார். அதன்படி 3 பேருக்கும் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் மேலும் அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது மகனுக்கும் தாய்க்கும் எய்ட்ஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
மகளுக்கு மட்டுமே பாதிப்பு இல்லை என ரிப்போர்ட் வந்துள்ளது. இதனால் மேலும் அதிர்ச்சிக்குள்ளான தாய் கடும் மன உளைச்சலில் இருந்துள்ளார். மேலும் தன்னுடன் மகள் ஒன்றாக இருந்தால், அவருக்கும் எய்ட்ஸ் பாதிப்பு வந்துவிடுமோ என மேலும் அச்சமடைந்து இருக்கிறார். இதனால் யாரும் செய்யக்கூடாத, விபரீத முடிவை எடுத்துள்ளார்.
தன் மகள் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைத்து தற்கொலை செய்ய முடிவெடுத்தார். நேற்று முன் தினம் இரவு தொழில் அதிபர் மற்றொரு அறையிலும், மகன், மகளுடன் தாய் ஒரு அறையிலும் படுத்திருந்தனர். பிள்ளைகள் இருவரும் அயர்ந்து தூங்கிய பின்னர், மனதை கல்லாக்கி கொண்ட தாய் பெற்ற மகனை முகத்தை தலையணையால் அழுத்தி மூச்சுத் திணறடித்து கொலை செய்தார்.
பின்னர் அவரும் மின்விசிறியில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டார். காலையில் எப்போதும் போல கண்விழித்த மகளுக்கு, கண் முன்னாடியே தாய் தூக்கில் தொங்கியபடி கிடந்ததை பார்த்து கதறி அழுதுள்ளார். தம்பியை எழுப்ப முயன்றபோது அவனும் உயிரிழந்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து அப்பகுதி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications