தீயாக பரவும் கொரோனா.. பலி எண்ணிக்கை உச்சம்.. ஐரோப்பிய நாடுகளில் எப்படி இருக்கிறது கிறிஸ்துமஸ் சீசன்?
லண்டன்: ஒரு பக்கம் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்காக, மக்கள் வணிக நிறுவனங்களை நோக்கி படையெடுக்க தொடங்குகிறார்கள்.. மற்றொரு பக்கம் உருமாறிக் கொண்ட கொரோனா வைரஸ் காரணமாக அதிகப்படியாக நோய் பரவல் தாக்கம்.. என இரட்டை சவால்களை சந்தித்து வருகிறது ஐரோப்பிய நாடுகள்.
கொரோனாவால், உலகத்திலேயே காரணமாக அதிகம் பேர் பலியானது ஐரோப்பிய நாடுகளில்தான் என்கிறது புள்ளி விவரம். வியாழக்கிழமை நிலவரப்படி ஐரோப்பிய நாடுகளில் 5 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பலியாகியுள்ளனர். 52 நாடுகளை உள்ளடக்கியது ஐரோப்பிய யூனியன் என்பது கவனிக்கத்தக்கது.
லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் பிராந்தியத்தில், 477,404, அமெரிக்கா மற்றும் கனடா (321,287), ஆசியா (208,149), மத்திய கிழக்கு (85,895) மற்றும் ஆப்பிரிக்கா 57,423 பேர் கொரோனாவால் பலியாகியுள்ளனர். அக்டோபர் முதல் ஐரோப்பா மீண்டும் தொற்றுநோயின் மையமாக மாறிப்போய்விட்டது.

ஐரோப்பாவில் அதிக இறப்பு விகிதம்
கடந்த ஏழு நாட்களில் ஐரோப்பாவில் கிட்டத்தட்ட 37,000 பேர் இறந்துள்ளனர், இது கொரோனா தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து அதிகபட்ச வாராந்திர எண்ணிக்கையாகும். கடந்த செவ்வாய்க்கிழமை, 24 மணி நேரத்தில் 6,800 இறப்புகள் பதிவாகியுள்ளன. ஒரே நாளில் பதிவான மிக அதிகபட்ச எண்ணிக்கை இதுவாகும். ஐரோப்பாவில் மொத்த கொரோனா இறப்புகளில் பாதிக்கும் மேற்பட்டவற்றில் 5 நாடுகள்தான் அதிக பங்கு வகிக்கின்றன. இத்தாலி (66,537 இறப்புகள்), யூ.கே 65,520, பிரான்ஸ் 59,361, ரஷ்யா 49,151 மற்றும் ஸ்பெயின் 48,596 கொரோனா இறப்புகளை பதிவு செய்துள்ளன.

கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள்
இந்த நிலையில்தான் கிறிஸ்மஸ் கொண்டாட்டம் சீசன் ஆரம்பித்து உள்ளது. வழக்கமாக ஷாப்பிங் மால்களில் கூட்டம் நிரம்பி வழியும். நீண்ட தூர ஊர்களுக்கு பிரயாணம் செய்து தங்கள் குடும்பத்தினரை சென்று மக்கள் சந்திப்பார்கள். இதெல்லாம் செய்தால் இப்போது உள்ள நிலைமையில் நோய் பரவல் அதிகரித்துவிடும் என்பதால் ஐரோப்பிய நாடுகளின் அரசாங்கங்கள் கட்டுப்பாடுகளை விதிக்க ஆரம்பித்துள்ளன.

ஜெர்மனி, நெதர்லாந்து நிலவரம்
ஜெர்மனி, நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகள் பொதுமக்கள் பெரிய அளவில் வெளியே கூடுவதற்கு தடை விதித்துள்ளன. அத்தியாவசியப் பொருட்களுக்கான விற்பனை கடைகளை டிசம்பர் இரண்டாவது வாரம் முதல் ஜனவரி வரை மூடி வைப்பதற்கு உத்தரவிட்டுள்ளனர். நெதர்லாந்தில் இப்போது வியாபார காலம். ஜனவரி 18ஆம் தேதி வரை வழக்கமாக அங்கு வணிக நிறுவனங்கள் நிரம்பி வழியும். ஆனால், இப்போது, மளிகை கடை, காய்கறி கடை, மருந்தகங்கள், வங்கிகள் உள்ளிட்டவற்றை தவிர்த்து மற்ற வணிக நிறுவனங்கள் அனைத்தும் மூடிவைக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வீட்டுக்கே சென்று பொருட்களை சப்ளை செய்ய கடைகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பள்ளிகள் மூடப்பட்டு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

விருந்தினர்களுக்கு கட்டுப்பாடு
இன்னொரு கட்டுப்பாடு வினோதமானது. வீடுகளுக்குள் அதிகபட்சமாக ஒரு நாளைக்கு இரண்டு பேரை மட்டுமே விருந்தினராக அனுமதிக்க வேண்டும். அவர்களும் 13 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருக்க வேண்டும். டிசம்பர் 24 முதல் 26ம் தேதி வரை அதிகபட்சமாக மூன்று பேரை வீடுகளுக்குள் அனுமதிக்கலாம். இது கிறிஸ்துமஸ் விடுமுறை காலகட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

டென்மார்க்
கிறிஸ்மஸ் காலத்தில் டென்மார்க் ஒரு தேசிய லாக்டவுனுக்குள் நுழைகிறது. டிசம்பர் 25 முதல், உணவு மற்றும் மருந்துகளை விற்கும் கடைகள் தவிர அனைத்து கடைகளும் மூடப்படும். டிசம்பர் 17 முதல் நாடு முழுவதும் ஷாப்பிங் மையங்கள் மூடப்படும். லாக்டவுன் ஜனவரி 3 வரை நீடிக்கும். மருத்துவமனைகள் டிசம்பர் 21 முதல் மூன்று வாரங்களுக்கு அனைத்து சிகிச்சைகளையும் ஒத்திவைக்கப்படும். ரொம்பவே அவசரம் என்றால்தான் மருத்துவர்கள் சிகிச்சையளிப்பார்கள்.

பிரான்ஸ்
டிசம்பர் 3 ம் தேதி பிரெஞ்சு அரசு கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களில் ஈடுபட அதிகபட்சம் ஆறு பெரியவர்களுக்கு அனுமதி வழங்க முடிவு செய்தது. டிசம்பர் 15ம் தேதி முதல் கட்டுப்பாடுகளை தளர்த்த முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால், இப்போது கட்டுப்பாடுகளை தளர்த்துவது ஒத்தி வைக்கப்பட்டது. தியேட்டர்கள், அருங்காட்சியகங்கள் மற்றும் உள்ளிட்ட கலாச்சார இடங்கள் டிசம்பர் 15ம் தேதி மீண்டும் திறக்கப்படவிருந்தன. ஆனால் அவை மூன்று வாரங்களுக்கு மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜெர்மனி
ஜெர்மனி முழுவதும் உள்ள அனைத்து அத்தியாவசிய கடைகள், சேவைகள் மற்றும் பள்ளிகள் 2021 ஜனவரி 10 வரை மூடப்படும். நாட்டில் கிறிஸ்துமஸ் தினக் கூட்டங்களில் 10 நபர்கள் பங்கேற்கலாம் என்று பிறப்பித்த தளர்வு இப்போது 5 பேராக குறைக்கப்பட்டுள்ளது.

இத்தாலி
கொரோனா வைரஸின் பரவலைக் கட்டுப்படுத்த, கிறிஸ்துமஸ் விடுமுறை நாட்களில் ஒரு ஏரியாவிலிருந்து மற்றொரு ஏரியாவுக்கு பயணங்கள் செல்வதை இத்தாலி தடை செய்துள்ளது. டிசம்பர் 21 முதல் ஜனவரி 6ம் தேதி வரை, வேலை, சுகாதார காரணங்கள் மற்றும் அவசரநிலைகளுக்காக மட்டுமே மக்கள் ஒரு பிராந்தியத்திலிருந்து இன்னொரு பகுதிக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள். இந்த காலகட்டத்தில், மக்கள் தங்கள் விடுமுறை இல்லங்களுக்கு செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

தடுப்பூசியால் பலன்
இதனிடையே மாறுபட்ட கொரானா வைரஸ் பரவல் காரணமாக ஐரோப்பிய நாடுகளில் சமீப காலமாக பாதிப்பு அதிகரித்து உள்ளதாக கூறப்பட்டாலும் தடுப்பூசியை மீறி இது செயலாற்றுவது கஷ்டம் என்று மருத்துவ வல்லுநர்கள் கூறுவது ஒரு மகிழ்ச்சியான விஷயமாகும். பொதுவாகவே தொற்றுநோய் வைரஸ்கள் அவ்வப்போது தங்களை உரு மாற்றிக் கொள்வது வழக்கம்தான். அதற்கு ஏற்பத்தான் தடுப்பூசி வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒருவேளை வைரஸ் தனது ஒட்டுமொத்த புரத நிலையை மாற்றிக் கொண்டால்தான் சிக்கல் ஏற்படுமே தவிர இப்போது உள்ள மாற்றங்களால் தடுப்பூசியை அதனால் கட்டுப்படுத்த முடியாது. தடுப்பூசி வெற்றிபெறும் என்று பெரும்பாலான மருத்துவ வல்லுநர்கள் கூறுகிறார்கள்.












Click it and Unblock the Notifications