தங்க கடிகாரம் டைட்டானிக் கப்பல் மூழ்கும்போது நின்னுடுச்சு! அது ரூ.20 கோடிக்கு ஏலம்! காஸ்ட்லி வாட்ச்
லண்டன்: டைட்டானிக் கப்பலில் பயணித்தபோது, கடலில் மூழ்கி இறந்தவர்களுள் ஒருவர்தான் இசிடோர் ஸ்ட்ராஸ்.. இவர் ஒரு தொழிலதிபர் ஆவார்.. இவர் கையில் கட்டியிருந்த வாட்ஸ் ஒன்று மீட்கப்பட்டுள்ள நிலையில், அது தற்போது ஏலத்துக்கும் விடப்பட்டுள்ளது.. கப்பலில் மூழ்கி இறந்த தொழிலதிபர் இசிடோர் ஸ்ட்ராஸ் என்பவர் யார் தெரியுமா? அந்த வாட்ச் எப்படிப்பட்டது தெரியுமா? இவைகளை பற்றி சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.
இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டன் நகரில் இருந்து அமெரிக்காவுக்கு 1912ம் ஆண்டு ஏப்ரல் 10ம் தேதி தன்னுடைய முதல் பயணத்தை ஆயிரக்கணக்கான பயணிகளுடன் தொடங்கியது சொகுசுக் கப்பல் டைட்டானிக்..

ஆனால், பயணத்தை ஆரம்பித்த அடுத்த சில தினங்களிலேயே வட அட்லாண்டிக்கில் பனி பாறையில் மோதி கடலில் மூழ்கியது. இதில் 1500 க்கும் மேற்பட்ட பயணிகள் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர்.
டைட்டானிக் கப்பல்
இந்த சம்பவத்தை மையப்படுத்திதான், ஜேம்ஸ் கேமரூன் டைரக்ஷ்னில் டைட்டானிக் படம் வெளியாகி, உலக மக்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்திருந்தது.
இதற்கு பிறகு, அந்த டைட்டானிக் கப்பல் நினைவு சின்னமாகவே கருதப்பட்டு வருகிறது. அதனால்தான், அந்தக் கப்பலில் பயணித்தவர்களின் உடைமைகளும் அதிக மதிப்பு வாய்ந்தவையாக கருதப்படுகின்றன..
தங்க நகைகள் ஏலம்
அந்தவகையில், பாத்திரங்கள், ஏராளமான போட்டோக்கள், சிறிய ஆபரணங்கள், வைர நகைகள், கடிகாரங்கள், நெக்லெஸ், மோதிரங்கள் போன்றவை கிடைக்க பெற்றுள்ளன.
மீட்கப்பட்ட இந்த வரலாற்றுப் பொருள்கள் உலகம் முழுவதும் ஏலங்களில் விற்கப்பட்டுள்ளன.
இந்த சொகுசு கப்பலில் பயணித்தவர்கள் பெரும்பாலும் பணக்காரர்கள் என்பதால், அவர்கள் பயன்படுத்திய பொருட்கள் மிகவும் விலை உயர்ந்ததாகும். இந்த பொருட்களுக்கு எப்போதுமே டிமாண்டும் அதிகம் ஆகும். அந்தவகையில், தற்போதும் ஒரு தங்கக் கடிகாரம் ஏலத்துக்கு வந்துள்ளது.
அமெரிக்க தொழிலதிபரான இசிடோர் ஸ்ட்ராஸ் என்ற பயணியின் 18 கேரட் தங்கக் கடிகாரம் ஒன்று இங்கிலாந்தின் வில்ட்ஷயர் நகரில் ஏலத்துக்கு விடப்பட்டுள்ளது.. இந்த கடிகாரம், 1.78 மில்லியன் பவுண்டுகளுக்கு அதாவது ரூ.20.7 கோடிக்கு விற்கப்பட்டு சாதனை படைத்துள்ளது.
அதிக பட்ச ஏலத்தொகை
டைட்டானிக் கப்பல் தொடர்பான நினைவுப் பொருட்களில் அதிகபட்சமாக விற்கப்பட்ட ஏலத்தொகை இதுவாகும். இதன்மூலம் டைட்டானிக் தொடர்பான மொத்த ஏலத்தொகை ரூ.35 கோடியை தாண்டியதாக சம்பந்தப்பட்ட ஏல நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த கடிகாரத்தின் மீது "IS" என்று அவர் பெயரின் இனிஷியல் பொறிக்கப்பட்டிருக்கிறதாம். அதுமட்டுமல்ல, டைட்டானிக் கடலில் மூழ்கிய நேரமான 02:20 AM என்றே அந்த கடிகாரத்திலும் நேரம் இருப்பதாக கூறப்படுகிறது.. அதாவது கப்பல் விபத்துக்குள்ளான நேரத்திலேயே, இசிடோர் ஸ்ட்ராஸின் இந்த கடிகாரமும் நின்றுவிட்டதாம். அதனால்தான் இந்த அளவுக்கு ஏலத்தொகை விலை போனதாக சொல்கிறார்கள்.
இந்த கடிகாரம் 43வது பிறந்த நாளுக்கு இசிடோருக்கு பரிசாக கிடைத்ததாம். ஆனால், 67 வது வயதில் டைட்டானிக் கப்பலில் மூழ்கி இறந்துவிட்டார்.
இசிடோர் ஸ்ட்ராஸ் யார் தெரியுமா?
தொழிலதிபர் இசிடோர் ஸ்ட்ராஸ், Macy's டிபார்ட்மெண்ட் ஸ்டோர்ஸின் இணை உரிமையாளராகவும் இருந்தவர்.. இவர் தன்னுடைய மனைவியுடன் டைட்டானிக் கப்பலில் பயணித்தார்.
கப்பல் விபத்துக்குள்ளானதுமே, மனைவி தப்பிக்க உயிர்காக்கும் படகுகள் தரப்பட்டன. ஆனால், கணவரை விட்டு பிரிய மாட்டேன் என்று சொல்லி, கணவர் இசிடோர் ஸ்ட்ராஸுடனேயே கடலில் மூழ்கி இறந்துவிட்டார். இந்த உணர்ச்சிமிகுந்த சம்பவம் டைட்டானிக் படத்திலும் காட்சியாக வைக்கப்பட்டிருந்தது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications