"ஜாம்பி வைரஸ்.." 48,500 ஆண்டுகள் உறைந்திருந்த வைரஸ்.. மீண்டும் புத்துயிர் பெற்றது! நடந்தது என்ன
லண்டன்: ஐரோப்பாவை சேர்ந்த ஆய்வாளர்கள் சிலர் சுமார் 48,500 ஆண்டுகள் பழமையான ஜாம்பி வைரஸை கண்டுபிடித்துள்ளனர்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரசே நம்மை வைத்துச் செய்துவிட்டது. உலக வல்லரசுகளான அமெரிக்கா, பிரிட்டன் தொடங்கி எந்தவொரு உலக நாடுகளுக்கும் கொரோனாவில் இருந்து தப்பவில்லை.
இப்போது தான் கொரோனாவுக்கு பின் உலகம் மெல்ல இயல்பு நிலையை நோக்கித் திரும்பி வருகிறது. அதேநேரம் உலகில் இருக்கும் மற்ற பல்வேறு வகையான வைரஸ்கள் குறித்த ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே தான் இருக்கிறது.

புதைந்து கிடந்த வைரஸ்
இதற்கிடையே பல ஆண்டுகளாக ஏரியின் கீழ் உறைந்த கிடந்த 10க்கும் மேற்பட்ட வைரஸ்களை கண்டறிந்துள்ளனர். பருவநிலை மாற்றம் காரணமாக இந்த பல ஆயிரம் ஆண்டுகளாக உறைந்திருந்த இந்த ஏரி உருகியுள்ள நிலையில், இதில் இந்த புதிய வைரஸ்கள் கண்டறியப்பட்டுள்ளன. இவை மனிதக் குலத்திற்குப் பேராபத்தை விளைவிக்கும் அபாயம் இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் தெரிவித்தனர். ஏற்கனவே, பருவநிலை மாற்றத்தால் நாம் ஏகப்பட்ட பிரச்சினைகளைச் சந்தித்து வரும் நிலையில், இது புதிய தலைவலியாகச் சேர்ந்துள்ளது.

ஜாம்பி வைரஸ்
ரஷ்யாவின் சைபீரியா பகுதியில் உள்ள இரு இடத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகளை ஐரோப்பிய ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தனர். அதில் தான் ஆய்வாளர்கள் இந்த வைரஸ்களை கண்டறிந்தனர். அதில் ஒரு வைரஸ் சுமார் 48,500 ஆண்டுகளாகப் புதைந்திருந்த "ஜாம்பி வைரஸ்" என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இவை பல ஆயிரம் ஆண்டுகளாக உறைந்த நிலையில், இருந்த போதிலும், அது இன்னும் கூட மனிதர்களைத் தாக்கும் குணத்தைக் கொண்டிருந்ததாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர். பருவநிலை மாற்றம் தொடர்பாக இப்போது உலகத்தில் பலரும் குரல் கொடுத்து வருகின்றனர். இதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் பேசுகின்றனர்.

சர்வதேச ஆய்வாளர்கள்
இருப்பினும், இந்த பருவநிலை மாற்றம் உறைந்து கிடக்கும் நோய்க்கிருமிகளை மீண்டும் உயிர்ப்பிக்கும் என்பது குறித்த ஆய்வுகளோ விழிப்புணர்வோ பெரிதாக இல்லை என்றே சொல்ல வேண்டும். ரஷ்யா, ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஆய்வாளர்கள் இப்போது கண்டறியப்பட்டுள்ள ஜாம்பி வைரஸ்களை ஆய்வு செய்தனர். இவை பெரும்பாலும் அமீபா நுண்ணுயிரிகளைப் பாதிக்கும் திறன் கொண்டவையாகவே உள்ளன. இவை மனிதர்களைத் தாக்கும் ஆபத்து ரொம்பவே குறைவு என்றே ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

பெரிய பாதிப்பு
அதேநேரம் விலங்குகள் அல்லது மனிதர்களைத் தாக்கும் எதாவது வைரஸ் இதேபோல பனிப்பாறை உருகுவதால் மீண்டும் புத்துயிர் பெற்றால் அது மிகப் பெரியா பாதிப்பைத் தரும் என்று ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். அந்த ஆய்வில், "பனிப்பாறை உருகுவதால் பல நூறு ஆண்டுகளாகப் புதைந்திருக்கும் வைரஸ்கள் மீண்டும் புத்துயிர் பெறலாம். இவை நமக்கு இதுவரை தெரியாத வைரஸ்களை கிளப்பிவிடும் ஆபத்துகள் உள்ளன. இவை எந்தளவுக்கு மனிதர்களைத் தாக்கும். எவ்வளவு வேகமாக மனிதர்கள் மத்தியில் பரவும் என்பது குறித்த தகவல்களை நம்மால் இப்போது உறுதியாகச் சொல்ல முடியாது.

மக்கள்
இருப்பினும், புவி வெப்ப மயமாதல் இதுபோன்ற ஆபத்துகளை அதிகரிக்கவே செய்யும். இதனால் மனிதர்களைத் தாக்கும் திறன் கொண்ட வைரஸ் எப்போது வேண்டுமானாலும் பனிப்பாறைகளில் இருந்து ரிலீஸ் ஆகும் வாய்ப்புகள் உள்ளன. அதிலும் இப்போது பல்வேறு தொழில்களைச் செய்ய ஒவ்வொரு ஆண்டும் அதிகப்படியான மக்கள் ஆர்க்டிக் பகுதிகளுக்குச் செல்கிறார்கள். அவர்களை இதுபோன்ற வைரஸ்கள் தாக்கினால், அது பெரிய ஆபத்தை ஏற்படுத்தும் வாய்ப்புகள் ரொம்வே அதிகம்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.

பருவநிலை மாற்றம்
உலகெங்கும் பருவநிலை மாற்றம் மிகப் பெரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. தொழில் மயமாக்கல், அதிகரிக்கும் வாகனங்கள் என இதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. பருவ நிலை மாற்றத்தைத் தடுக்க ஒவ்வொரு ஆண்டும் இதற்கான உச்சி மாநாடுகள் கூட நடத்தப்படுகின்றன. இருப்பினும், ஒவ்வொரு ஆண்டும் புவியின் வெப்பம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு தான் செல்கிறது. இதைத் தடுக்கவில்லை என்றால் இதுபோல பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.












Click it and Unblock the Notifications