"உயிர் பலி கேட்கும் ராட்சஷி..." 7 குழந்தைகளை துடிக்க துடிக்க கொன்ற கொடூர 'நர்ஸ்' - பரபர பின்னணி
லண்டன்: இங்கிலாந்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் 7 பச்சிளம் குழந்தைகளை நூதனமான முறையில் துடிக்க துடிக்க கொன்ற செவிலியரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
போலீஸார் எடுத்த துரித நடவடிக்கையால், இந்தக் கொடூர நர்ஸின் பிடியில் இருந்து 17 குழந்தைகள் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளன.
7 குழந்தைகளை கொன்ற இந்த நர்ஸுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் இருந்து கோரிக்கை எழுந்துள்ளது.

புகழ்பெற்ற மருத்துவமனை..
இங்கிலாந்தில் உள்ள செஸ்டர் நகரில் அமைந்துள்ளது 'கவுன்ட்டஸ் ஆப் செஸ்டர்' மருத்துவமனை. மிகப் பழமையான மருத்துவமனை என்பதாலும், தரமான சிகிச்சை அளிக்கப்படுவதாலும் செஸ்டர் நகர் மட்டுமல்லாமல் அந்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நோயாளிகள் இந்த மருத்துவமனையை தேடி வருவது வாடிக்கை. இந்த மருத்துவமனையில் இதய நோய் முதல் மகப்பேறு வரை தனித்தனியான பிரிவுகள் உள்ளன. இதனால், பொதுவாக செஸ்டர் நகரில் உள்ள கர்ப்பிணிகள் இந்த மருத்துவமனைக்கு அழைத்து வரப்படுவர்.

அடுத்தடுத்து இறந்த குழந்தைகள்
இந்நிலையில், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அந்த மருத்துவமனையில் அடுத்தடுத்து 2 பச்சிளம் குழந்தைகள் திடீர் திடீரென இறந்து போயின. அந்தக் குழந்தைகளின் உடல்களை பரிசோதித்த போதும், அவற்றில் எந்தவித விஷமோ அல்லது ரசாயனமோ கண்டறியப்படவில்லை. இதனால் இயற்கையான உடல் உபாதை காரணமாக அந்தக் குழந்தைகள் உயிரிழந்திருக்கலாம் என மருத்துவர்கள் முடிவு செய்தனர். ஆனால், அந்த இரண்டு குழந்தைகளுடன் அந்த மர்ம மரணம் நின்றுவிடவில்லை.

மர்மமான முறையில்...
சில வார இடைவெளியில் குழந்தைகள் இவ்வாறு மர்மமாக இறப்பது தொடர்கதை ஆகியது. இதையடுத்து, இந்த விவகாரத்தில் ரகசியமாக விசாரணை நடத்த மருத்துவமனை நிர்வாகமும், சில மருத்துவர்களும் முடிவு செய்தனர். அதன்படி, கடந்த ஆகஸ்ட் மாதம் குறைப்பிரசவத்தில் பிறந்த ஒரு குழந்தை திடீரென இறந்து போனது. அந்தக் குழந்தையுடன் சேர்த்து இறந்துபோன குழந்தைகளின் எண்ணிக்கை 7-ஆக உயர்ந்தது. இதனைத் தொடர்ந்து, அந்தக் குழந்தையின் உடலை பரிசோதித்த போது அது முந்தைய தினம் இரவு இறந்திருப்பது தெரியவந்தது.

அதிர்ந்து போன மருத்துவர்கள்
அதன் அடிப்படையில், முந்தைய தினம் இரவு, குழந்தைகள் வார்டில் எந்த செவிலியர் பணியில் இருந்தார் என மருத்துவர்கள் பார்த்தனர். அதில் இருந்த பெயர் லூசி லெட்பை (32). பின்னர், இதற்கு முன்பு குழந்தைகள் உயிரிழந்த நாட்களையும், அந்தந்த தேதிகளில் இரவுப் பணியில் இருந்த செவிலியரின் பெயரையும் மருத்துவர்கள் பார்த்த போது அதிர்ந்து விட்டனர். ஏனெனில், குழந்தைகள் உயிரிழந்த குறிப்பிட்ட நாட்களில் லூசி லெட்பையே பணியில் இருந்திருக்கிறார்.

பேஸ்புக்கில் தேடிய லூசி..
இதையடுத்து, இந்த விவகாரம் குறித்து போலீஸாருக்கு மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. லூசி லெட்பைதான் குழந்தைகளை கொன்றார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை; அதேபோல, இறந்துபோன குழந்தைகளின் உடலிலும் எந்த விஷமோ கலக்கவும் இல்லை. எனவே, எந்த ஆதாரமும் இல்லாமல் லூசி லெட்பையை விசாரிக்க முடியாது என்பதால் போலீஸாரும் ரகசிய ஆபரேஷனில் இறங்கினர். அதன்படி, லூசி லெட்பையின் ஃபேஸ்புக்கை 'ஹேக்' செய்து போலீஸார் பார்த்தனர். அப்போது, இறந்த குழந்தைகளின் பெற்றோரின் பெயரை வைத்து லூசி லெட்பை தனது பேஸ்புக்கில் தேடி பார்த்திருப்பது தெரியவந்தது.

திடுக் வாக்குமூலம்
இதனைத் தொடர்ந்து, லூசி லெட்பையிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். முதலில் தனக்கு எதுவும் தெரியாது என அப்பாவியாக நடத்தி லூசி, பல மணிநேர கிடுக்கிப்பிடி விசாரணைக்கு பிறகு, குழந்தைகளை கொன்றதை ஒப்புக் கொண்டார். மேலும், சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக குழந்தைகளின் உடலில் ஊசி மூலம் அதிக அளவில் பாலை செலுத்துவது; வெறும் காற்று நிரம்பிய ஊசியை குழந்தைகளின் நரம்பில் செலுத்துவது; அதிகப்படியான இன்சுலினை நரம்பில் செலுத்துவது என்பன போன்ற செயலில் ஈடுபட்டு குழந்தைகளை கொன்றதை 'சைக்கோ' நர்ஸ் லூசி ஒப்புக் கொண்டார். இவ்வாறு செய்ததால் குழந்தைகளுக்கு மாரடைப்பு ஏற்பட்டு அவை துடிதுடித்து இறந்திருக்கின்றன. விசாரணைக்காக போலீஸார் அழைத்து செல்வதற்கு முன்பு, மேலும் 17 குழந்தைகளை இதே முறையில் கொல்ல லூசி முயற்சித்துள்ளார். ஆனால் அந்த குழந்தைகள் தப்பித்துவிட்டன.

மரண தண்டனை விதிக்க கோரிக்கை
குழந்தைகள் இப்படி துடிதுடித்து இறப்பதை லூசி ரசித்து பார்த்துள்ளார். மேலும், குழந்தைகளை பறிகொடுத்த துயரத்தில் அவற்றின் பெற்றோர் எப்படி வேதனைப்படுகின்றனர் என்பதை தெரிந்து கொள்வதற்காக, அவர்களை பேஸ்புக்கில் லூசி தேடியுள்ளார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் போலீஸார் நர்ஸ் லூசியை கைது செய்துள்ளனர். அவர் மீதான வழக்கை நீதிமன்றம் விசாரித்து வரும் நிலையில், அவருக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என குழந்தைகளை பறிகொடுத்த பெற்றோரும், பொதுமக்களும் வலியறுத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications