ஜெயிலுக்குள்ளேயே திருமணம்.. தோழியை மணக்கிறார் விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே!
லண்டன்: சிறையில் உள்ள விக்கி லீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே தனது நீண்ட கால தோழியான ஸ்டெல்லா மோரிஸை சிறையில் திருமணம் செய்துகொள்கிறார்.
ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஜூலியன் அசாஞ்சே அமெரிக்க பாதுகாப்புத்துறை, சி.ஐ,ஏ குறித்த ரகசிய தகவல்களை விக்கிலீக்ஸ் மூலம் அம்பலப்படுத்தியது உலகளவில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
பாதுகாப்புத்துறை சார்ந்த ரகசிய தகவல்களை வெளியிட்டதற்காக இவரை தேடி வந்த அமெரிக்கா, பல்வேறு பாலியல் வழக்குகளை இவர் மீது பதிவு செய்தது.

அடைக்கலம் தந்த ஈகுவடார்
ஈகுவடார் அரசாங்கம் அடைக்கலம் தர முன்வந்ததை அடுத்து லண்டனில் உள்ள ஈகுவடார் தூதரகத்தில் பதுங்கினார் ஜூலியன் அசாஞ்சே. சுமார் 7 ஆண்டுகள் ஈகுவடார் தூதரகத்தில் தங்கி இருந்த ஆசேஞ்சே கடந்த 2019 ஆம் ஆண்டு பிரிட்டன் போலீசால் கைது செய்யப்பட்டார். லண்டன் பெல்மார்ஷ் சிறையில் 2019 ஆம் ஆண்டிலிருந்து அடைக்கப்பட்டு இருக்கும் அசாஞ்சே தனது நீண்ட நாள் தோழியும் வழக்கறிஞருமான ஸ்டெல்லா மோரிசை இன்று திருமணம் செய்துகொள்கிறார்.

அசாஞ்சேவின் லவ் ஸ்டோரி
2011 ஆம் ஆண்டு முதல் ஜூலியன் அசாஞ்சேவின் வழக்கறிஞராக ஸ்டெல்லா மோரிஸ் பணியாற்றி வந்துள்ளார். இதனை தொடர்ந்து 2015 ஆம் ஆண்டு இருவருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. ஈகுவடார் தூதரகத்தில் மறைந்து இருந்த ஜூலியன் அசாஞ்சே - ஸ்டெல்லா மோரிசுடன் ஒன்றாக வாழத் தொடங்கினார். இருவருக்கும் 2 குழந்தைகள் உள்ளன.

இன்று அசாஞ்சேவுக்கு டும் டும் டும்
இந்த நிலையில் இன்று லண்டன் பெல்மார்ஷ் சிறையில் பார்வையாளர் நேரத்தின்போது ஜூலியன் அசாஞ்சே - ஸ்டெர்ல்லா மோரிசுக்கு திருமணம் நடைபெறுகிறது. இருவருக்கான திருமண உடையை பிரபல ஆடை வடிவமைப்பாளர் விவெயின் வெஸ்ட் வடிவமைத்து இருக்கிறார். இவர் ஜூலியன் அசாஞ்சேவை நாடு கடத்தும் முடிவை எதிர்த்து போராடியவர்.

அசாஞ்சேவின் முதல் திருமணம்
50 வயதாகும் ஜூலியன் அசாஞ்சே, இதற்கு முன்னதாக 1989 ஆம் ஆண்டு தெரசா என்பவரை திருமணம் செய்துகொண்டார். இருவரது திருமண பந்தம் 10 ஆண்டுகளுக்கு பிறகு 1999 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது. இந்த நிலையில் 2 வது திருமணம் செய்துகொள்ளும் அசாஞ்சேவுக்கு மொத்தம் 3 குழந்தைகள் உள்ளன.

அமெரிக்காவிடம் அசாஞ்சேவை ஒப்படைக்க திட்டம்
லண்டன் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் ஜூலியன் அசாஞ்சேவை அமெரிக்காவிடம் ஒப்படைக்கும் முடிவுக்கு எதிராக பிரிட்டன் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்ய அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அதேநேரம் தன்னை நாடு கடத்துவது தொடர்பாக பிரிட்டன் அரசு எடுக்கும் எந்த முடிவையும் எதிர்த்து அவரால் மனுத்தாக்கல் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications