கொரோனா தடுப்பூசிக்கு பதில்.. வெறிநாய் கடிக்கு போடப்படும் ரேபிஸ் தடுப்பூசி... உபியில் பரபரப்பு
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் வயதான மூன்று பெண்களுக்கு கொரோனா தடுப்பூசிக்குப் பதிலாக வெறிநாய் கடிக்கு போடப்படும் ரேபிஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ள சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் கொரோனா பரவல் பல மடங்கு அதிகரித்துள்ளது. மகாராஷ்டிரா, டெல்லி, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் வைரஸ் பாதிப்பு பல மடங்கு உயர்ந்துள்ளது,
இதன் காரணமாக அனைத்து மாநிலங்களும் தடுப்பூசி செலுத்தும் பணிகளை விரைவாக மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், உத்தரப் பிரதேச மாநிலத்தில் கொரோனா தடுப்பூசிக்குப் பதில் ரேபிஸ் தடுப்பூசி போடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தடுப்பூசி பணிகள்
இந்தியா முழுவதும் தற்போது அரசு மையங்களிலும் தனியார் மையங்களிலும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அரசு மையங்களில் இலவசமாகவும் தனியார் மையங்களில் 200 ரூபாய் என்ற விதத்திலும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி உத்தரப் பிரதேச மாநிலம் முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் தடுப்பூசி
இந்நிலையில், உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சரோஜ் (70), அனார்கலி (72), சத்தியாவதி (60) ஆகிய மூன்று பெண்கள் தடுப்பூசி எடுத்துக்கொள்ள ஷாம்லி மாவட்டத்திலுள்ள தடுப்பூசி மையத்திற்குச் சென்றுள்ளனர். அங்கு அவர்களுக்கு கொரோனா தடுப்பூசிக்குப் பதிலாக வெறிநாய் கடிக்குப் போடப்படும் ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இது குறித்து விசாரணை நடத்த அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

உண்மை தான்
இது குறித்து மாவட்ட நீதிபதி ஜஸ்ஜித் கவுர் கூறுகையில், இந்தச் சம்பவம் குறித்து நாங்கள் விசாரணை நடத்தினோம். அந்த மூன்று பெண்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டது உண்மை தான். அவர்கள் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்ள மருத்துவமனையில் முதல் தளத்திற்குச் செல்வதற்குப் பதிலாக புற நோயாளிகள் பிரிவுக்குச் சென்றுவிட்டார்கள். அங்கிருந்த மருத்துவர் தவறுதலாக ரேபிஸ் தடுப்பூசியைச் செலுத்தச் மருந்தாளரிடம் சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார் என அவர் குறிப்பிட்டார்.

மருந்தாளர் இடைநீக்கம்
அந்த மூன்று பெண்களிடமும் எவ்வித கேள்வியும் கேட்காமல், அவர்களைச் சரி பார்க்காமல் அந்த மருந்தாளர் ரேபிஸ் தடுப்பூசியைச் செலுத்தியுள்ளார். இதன் காரணமாக அவரை இடைநீக்கம் செய்ய உத்தரவிட்டுள்ளதாக மாவட்ட நீதிபதி ஜஸ்ஜித் கவுர் தெரிவித்தார். பல்வேறு மாநிலங்களிலும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் சூழ்நிலையில், அலட்சியத்தால் உத்தரப் பிரதேசத்தில் நடந்துள்ள இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எதுவும் கேட்கவில்லை
இது குறித்து அந்தப் பெண்கள் கூறுகையில், எங்களிடம் வயதை உறுதி செய்ய ஆதார் உள்ளிட்ட எந்த தகவலையும் அவர் கேட்கவில்லை. இங்குத் தடுப்பூசி போடப்படுமா என்று கேட்டதற்கு 10 ரூபாய்க்கு சிரஞ்ச் வாங்கி வாருங்கள் எனக் கூறிவிட்டு மருந்தாளர் சென்றுவிட்டார். அது ரேபிஸ் தடுப்பூசியாக இருக்கும் என்ற சந்தேகம் எனக்கு இருந்தது. ஏனென்றால், அந்த தடுப்பூசியை எடுத்துக்கொண்டதும் மயக்கம் ஏற்பட்டது என்று தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications