குஜராத் குண்டுவெடிப்பு பயங்கரவாதிகளுடன் தொடர்பா? என்ன சொல்கிறார் அகிலேஷ்..பரபரக்கும் உத்தர பிரதேசம்
லக்னோ: குஜராத் குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய ஒருவருக்கு சமாஜ்வாடி கட்சியுடன் தொடர்பு உள்ளதாக பாஜக குற்றஞ்சாட்டிய நிலையில், இதற்கு சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ் பதிலளித்துள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் மொத்தம் 403 தொகுதிகளில் உள்ள நிலையில், அதற்கு மொத்தம் 7 கட்டங்களாகத் தேர்தல் நடைபெறுகிறது. இதுவரை 2 கட்ட தேர்தல் முடிந்துள்ள நிலையில், இன்று 3ஆம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது.
நாட்டிலேயே மிகப் பெரிய மாநிலம் என்பதால் உத்தரப் பிரதேசம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அங்கு ஒரு கட்சி பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிக்க 202 தொகுதிகளில் வெல்ல வேண்டும்.

உபி தேர்தல்
உத்தரப் பிரதேசத்தில் தற்போது யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு ஆட்சியில் உள்ளது. கடந்த 2017இல் பெற்றத்தைப் போல மீண்டும் ஒரு மிகப் பெரிய வெற்றியைப் பெற வேண்டும் என்ற முனைப்பில் பாஜக களமிறங்கியுள்ளது. இதற்காக பாஜக தலைவர்கள் தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர். நேற்றைய தினம் அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் லக்னோவில் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

யோகி ஆதித்யநாத் அட்டாக்
அப்போது அகிலேஷ் யாதவை கடுமையாகச் சாடிய அவர், சமாஜ்வாடி கட்சிக்கு அகமதாபாத் குண்டுவெடிப்பில் தொடர்புடைய பயங்கரவாதிகளுடன் தொடர்பு இருப்பதாகவும் கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். நேற்று கூட்டத்தில் பேசிய யோகி ஆதித்யநாத், "சமாஜ்வாதி கட்சியில் வேட்பாளர்களில் பாதிப்பேர் ரவுடிகளுடன் தொடர்பு வைத்துள்ளார்கள். பல பேர் மீது குற்ற வழக்குகள் உள்ளது. சொல்லப்போனால் சமாஜ்வாதி பயங்கரவாதிகளைப் பாதுகாக்கிறது.

பயங்கரவாதியுடன் தொடர்பு
சமீபத்தில் குஜராத் குண்டுவெடிப்பில் தொடர்புடைய இந்தியன் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த 38 பேருக்குச் சிறப்பு நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. அப்படி மரண தண்டனை விதிக்கப்பட்ட 38 பயங்கரவாதிகளில் ஒருவர் சஞ்சர்பூரை சேர்ந்தவர். அவரது தந்தை சமாஜ்வாதி கட்சியுடன் தொடர்புடையவர். இப்போது சட்டசபைத் தேர்தலில் சமாஜ்வாடி கட்சிக்காக அவர் பிரசாரம் செய்கிறார்' என்றார்.

போட்டோ
அகிலேஷ் யாதவும் சமாஜ்வாடி கட்சியும் பயங்கரவாதிகளைப் பாதுகாப்பதாகவும் மத ரீதியாக அரசியல் செய்வதாகவும் அவர் சாடியிருந்தார். மேலும், மத்திய அமைச்சர் அனுராக் தாகூரும் இது தொடர்பாக டெல்லி பாஜக தலைமையகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். குஜராத் குண்டுவெடிப்பில் தொடர்புடைய பயங்கரவாதியுடன் அகிலேஷுக்கு தொடர்பு இருப்பதாகச் சாடிய அவர், இது குறித்த சில படங்களையும் வெளியிட்டார்.

அகிலேஷ் விளக்கம்
இந்தச் சம்பவம் உத்தரப் பிரதேச அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்த குற்றச்சாட்டுகள் குறித்து அகிலேஷ் யாதவ் கூறுகையில், "இங்குப் பொய் சொல்பவர்கள் என யாராவது இருந்தால் அது நிச்சயம் பாஜக தான் என்று நான் பல நாட்களாகச் சொல்லி வருகிறேன். பாஜக தலைவர்கள் பொய்களைத் தவிர வேறு எதுவும் கூறுவதில்லை. விவசாயிகளைக் கொன்றவர்கள் அதற்குப் பதில் கூற வேண்டும்? விவசாயிகள் பாஜக மீது கடும் அதிருப்தியில் உள்ளனர். எனவே பாஜக நிச்சியம் அழிக்கப்படுவார்கள்" என்று சாடினார்.
Recommended Video

குஜராத் சம்பவம்
கடந்த 2008ஆம் ஆண்டு குஜராத்தின் அகமதாபாத் நகரில் 21 இடங்களில் அடுத்தடுத்து குண்டு வெடித்தது. இந்த கொடூர குண்டுவெடிப்பு சம்பவத்தில் 56 பேர் பலியாகிய நிலையில், 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இது தொடர்பான வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 49 பேரில் 38 பேருக்கு மரண தண்டனையும் 11 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து அகமதாபாத் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.












Click it and Unblock the Notifications