ஆபத்தில் இருப்பது 'வாரிசு' அரசியல்தான்.. அத்துடன் ஜாதிவெறியும்.. காங்கிரஸ் மீது அமித்ஷா கடும் தாக்கு
லக்னோ: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு அமளி காரணமாக முழுமையாக முடங்கியது. இந்த முடக்கத்திற்கு காங்கிரஸ்தான் காரணம் என்றும், அவர்களை மக்கள் மன்னிக்க மாட்டார்கள் எனவும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விமர்சித்துள்ளார்.
அமெரிக்காவை சேர்ந்த முதலீட்டு பகுப்பாய்வு நிறுவனமான 'ஹிண்டன்பர்க்' கடந்த ஜனவரி மாதம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. சுமார் 106 பக்கங்கள் கொண்ட இந்த அறிக்கையில் உலகின் இரண்டாவது பெரும் பணக்காரராக இருந்த அதானியின் நிறுவனங்கள் பற்றி பல தகவல்களை வெளியிட்டிருந்தது. அதாவது அதானியின் நிறுவனங்கள் பெரும் கடனில் இருப்பதாகவும், மொரிஷியஸ், கரீபியன் போன்ற வரி ஏய்ப்பு செய்ய சாத்தியமுள்ள நாடுகளிலிருந்து அதானி நிறுவனத்தில் செய்யப்பட்டுள்ள முதலீடுகள் குறித்தும் விரிவாக கூறியிருந்தது.

இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக மொத்தமாக 88 கேள்விகளை தாங்கள் எழுப்பியிருந்ததாகவும், ஆனால் அதானி நிறுவனம் இதில் எந்த கேள்விக்கும் பதிலளிக்கவில்லை எனவும் ஹிண்டன்பர்க் குற்றம்சாட்டியிருந்தது. இந்த அறிக்கையையடுத்து அதானிக்கு சொந்தமான நிறுவனங்களில் முதலீடு செய்திருந்த முதலீட்டாளர்கள் தங்கள் முதலீடுகளை திரும்ப பெற்றுக்கொண்டனர். எனவே அதானி நிறுவனங்களின் பங்குகள் வேகமாக சரிய ஆரமித்தன. அதேபோல அதானியும் உலக பணக்காரர்கள் பட்டியலில் 2ம் இடத்திலிருந்து வேகமாக சரிய தொடங்கினார்.
இந்த விவகாரம் பெரியதாக வெடித்து. ஏனெனில் இதில் எல்ஐசி மற்றும் எஸ்பிஐ போன்ற பொதுத்துறை நிறுவனங்கள் முதலீடு செய்திருந்தன. இந்த முதலீடுகளின் நிலை என்ன? அதேபோல நாடு முழுவதும் அதானி குழுமத்தின் 7 நிறுவனங்கள்தான் பெரும்பாலான நிறுவனங்களில் முதலீடு செய்திருக்கின்றன. எனவே இந்த 7 நிறுவனங்களின் பங்கு மதிப்பு சரிந்தால் இது முதலீடு செய்துள்ள நிறுவனங்களின் நிலை என்னவாகும்? அதில் பணியாற்றும் லட்சக்கணக்கான இந்தியர்களின் நிலை என்னவாகும்? என நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கேள்வியெழுப்பி வந்தன. இது குறித்து மத்திய அரசு மவுனம் காத்து வந்தது.
இது மட்டுமல்லாது சமீபத்தில் ராகுல் காந்தி லண்டனில் பேசிய விவகாரத்தை பாஜக பூதாகரமாக எழுப்பியது. இது தொடர்பாக மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் வலியுறுத்தியது. ஆனால் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்கவில்லை. எனவே பாஜக அமளியில் ஈடுபட்டது. எதிர் தரப்பில் காங்கிரசும் அதானி விவகாரம் தொடர்பாக அமளியில் ஈடுபட்டது. கடந்த 13ம் தேதி தொடங்கிய பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு இப்படியாக அமளியுடன் தொடங்கி அமளியுடனேயே நடந்துக்கொண்டிருந்தது. இதற்கிடையில்தான் ராகுல் காந்தியின் வழக்கு விசாரணை இறுதி கட்டத்திற்கு நெருங்கியது.
அதாவது கடந்த 2019ம் ஆண்டு ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைவராக பொறுப்பு வகித்து வந்தார். அப்போது நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலுக்கு பிரசாரம் மேற்கொண்டார். கர்நாடகாவில் பிரசாரம் மேற்கொண்ட போது 'மோடி' சமூகம் குறித்து அவதூறாக பேசியதாக குஜராத்தின் சூரத் நீதிமன்றத்தில் அவர் மீது வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கில் அவர் குற்றவாளி எனவும், 2 ஆண்டுகள் அவருக்கு சிறை தண்டணை விதிப்பதாகவும் வழக்கை விசாரித்த நீதிபதி தீர்ப்பளித்தார். அதே நேரம் அவருக்கு உடனடி ஜாமீனும் மேல் முறையீடு செய்ய 30 நாட்கள் அவகாசமும் வழங்கப்பட்டது.
இந்த விவகாரம் ஒருபுறமிருக்க மறுபுறம் மக்கள் பிரதிநிதிகள் சட்டத்தின் அடிப்படையில் அவரை மக்களவை செயலகம், எம்பி பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்தது. ஏற்கெனவே நாடாளுமன்றத்தில் புகைந்துகொண்டிருந்த மோதலை இந்த தகுதி நீக்க நடவடிக்கை சம்பவம் கொழுந்துவிட்டு எரிய செய்தது. நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன. அதேபோல எதிர்க்கட்சி எம்பிக்கள் ஜனநாயகத்தை காக்க பேரணி நடத்தினர். இப்படி இருக்கையில் இன்று உத்தரப் பிரதேசத்தில் 'கௌசாம்பி மஹோத்சவத்தை' தொடங்கி வைத்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, "காங்கிரஸ் கட்சியினர் கூறுவதை போல ஜனநாயகம் தற்போது ஆபத்தில் இல்லை, வாரிசு அரசியலும், ஜாதி வெறியும்தான் ஆபத்தில் இருக்கிறது. அதை பாதுகாக்கதான் அவர்கள் போராடுகின்றனர்" என்று விமர்சித்துள்ளார்.
மேலும், "காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கொண்டு வந்த சட்டத்தின் அடிப்படையில்தான் மக்களவையிலிருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டார். ஆனால் காங்கிரஸ் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து நாடாளுமன்ற செயல்பாடுகளை முடக்கியுள்ளது. இதனை மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள். எதிர் வரும் தேர்தலில் மக்கள் இதற்கு பதிலடி கொடுப்பார்கள். 2024ம் ஆண்டு மோடி மீண்டும் பிரதமராவார்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications