அயோத்தியின் அடையாளம்! ராமர் வாழ்வில் முக்கிய அங்கம் வகித்த.. 'சரயு' நதி! சிறப்புகள் இதுதான்
லக்னோ: உத்தரப் பிரதேசத்தின் அயோத்தியில் இன்று ராமர் கோயில் கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெறுகிறது. இந்நிலையில், அயோத்தி நகருக்கு இணையான பெருமை கொண்ட சரயு நதி பக்தர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.
அயோத்தி: இந்தியாவை ஆறுகளின் நாடு என்று சொல்வதுண்டு. வடக்கில் கங்கை மிகவும் பிரசித்தி பெற்றதாகும். ஆனால் அதே அளவு பிரசித்தி பெற்ற நதிதான் இந்த சரயு. வேத காலத்திலேயே இந்த நதி தொடர்பாக குறிப்புகளை பார்க்க முடிகிறது. ரிக் வேதத்தில் சரயு பற்றி விரிவாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. அயோத்தி எந்த அளவுக்கு புகழ் பெற்றிருக்கிறதோ, அதே அளவுக்கு சரயு நதியையும் வேத காலத்தில் சிறப்பாக புகழப்பட்டிருக்கிறது.

சரயு நதி: புராணத்தில் இந்த நதி சிவனின் கண்களிலிருந்து உருவானதாக சொல்லப்பட்டிருக்கிறது. அதாவது, ஷங்காசுரன் என்ற அரக்கன் வேதங்கள் அனைத்தையும் திருடி அதனை கடலுக்குள் கொண்டு சென்று மறைத்து வைத்துக்கொண்டான். இதனை மீட்க சிவன் மீன் அவதாரம் எடுத்திருக்கிறார். அரக்கனுடன் சண்டையிட்டு வேதங்களை மீட்ட சிவன் அதை பிரம்மாவிடம் ஒப்படைத்துள்ளார். அப்போது பெருகிய ஆனந்த கண்ணீர்தான் சரயு நதியாக உருவாகி ஓடுகிறது என்று ஆனந்த ராமாயணத்தின் யாத்ரா காண்டத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
ராமர்: சுருக்கமாக சொல்வதெனில் சரயு நதி இல்லாமல் அயோத்தி குறித்தும், ராமரின் வாழ்க்கையையும் முழுமையாக விளக்கிவிட முடியாது. மட்டுமல்லாது ராமரின் தனிப்பட்ட வாழ்க்கையிலும் சரயு முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த நதிக்கரையில்தான் ராமன் இரண்டு முக்கிய மந்திரங்களை பெறுகிறார். நதியின் தென்கரையில் பயணம் செய்யும் போது விஸ்வாமித்திர முனிவரிடமிருந்து பலா மற்றும் அதிபலா மந்திரங்களை பெற்றிருக்கிறார்.
மந்திரங்கள்: இந்த மந்திரங்கள் சோர்வை நீக்கி பெரும் சக்தியைக் கொடுக்கின்றன. பேச்சு ஆற்றலையும் இது மேம்படுத்துகிறது. இந்த மந்திரங்களைச் செய்பவரை பசியும் தாகமும் பாதிக்காது என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த நதியை உத்தரப் பிரதேச அரசு சிறப்பாக பராமரித்து வருகிறது. ராமர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெறும் இன்று, இந்த நதி ஏராளமான பக்தர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
ராமர் கோயில்: அயோத்தியில் ராமர் பிறந்ததாக நம்பப்படுகிறது. இந்நிலையில், அவருக்கான கோயிலை கட்ட கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5ம் தேதியன்று பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். 360 அடி நீளம், 235 அடி அகலம், 161 அடி உயரத்தில், 3 மாடிகள், 5 குவிமாடங்கள், கோபுரம், 360 தூண்கள் என பிரமாண்டமாக ரூ.1,100 கோடியில் கோயில் கட்டப்பட்டிருக்கிறது. இந்த கோயிலில் இன்று குழந்தை ராமர் சிலை வைத்து பிரதிஷ்டை செய்யப்படுகிறது.
பிரதிஷ்டை: இன்று பிற்பகல் 12.29.08 மணிமுதல் 12.30.32 வரை (84 விநாடிகளில்) பிரதிஷ்டை செய்யப்படவுள்ளது. பதினாறு பொருத்தங்களில் 10 பொருத்தங்கள் சிறப்பாக அமைந்துள்ளதால் இக்குறுகிய காலத்தில் பிரதிஷ்டை நடைபெறவுள்ளது என ஸ்ரீ ராமஜென்மபூமி தீா்த்த க்ஷேத்ர அறக்கட்டளை பொதுச் செயலாளர் சம்பத் ராய் கூறியுள்ளார். குழந்தை ராமரின் சிலையின் பீடம் 3 அடி உயரத்தைக் கொண்டது. இச்சிலை மக்ரானா மாா்பிள் கற்களால் செய்யப்பட்டு, அதன் மீது தங்கக் கவசம் பொருத்தப்பட்டுள்ளது.
பிரபலங்கள்: கோயிலின் கும்பாபிஷேகம், பிரதமர் நரேந்திர மோடி, ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத், உ.பி., கவர்னர் ஆனந்திபென் படேல், முதல்வர் யோகி ஆதித்யநாத், கோயில் அறக்கட்டளை தலைவர் மஹந்த் நிருத்ய கோபால் தாஸ் ஆகியோர் முன்னிலையில் நடைபெறுகிறது. இந்த நிகழ்வில் நாடு முழுவதும் இருந்து முக்கிய தலைவர்கள், திரை நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள் பங்கேற்கிறார்கள்.
இந்த கோயிலின் கும்பாபிஷேகம் முடிந்த பின்னர், தினந்தோறும் சுமார் 3 லட்சம் பக்தர்கள் கோயிலுக்கு வந்து செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கும்பாபிஷேகம் நடைபெறும் ஜனவரி 22ம் தேதி பல்வேறு மாநிலங்கள் பொது விடுமுறையை அறிவித்திருக்கின்றன.
இந்த கோயில் அமைந்துள்ள அயோத்தி நகரத்தில்தான் சரயு நதியும் பாய்கிறது. இந்த நதியில்தான் ராமர் தனது வாழ்வை முடித்துக்கொண்டதாக சொல்லப்படுகிறது. எனவே ராமரின் பிறந்த நாளான ராமநவமி அன்று ஏராளமான பக்தர்கள் சரயு நதிக்கரையில் குளிக்கிறார்கள். ரமார் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி பக்தர்களின் வருகைக்காக நதியின் கரைகள் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications