49 இடங்களில் ஒன்றில் மட்டும் வென்ற காங்.! 2019 நிலவரம் இதுதான்! இந்த முறையாவது களத்தை மாற்றுமா?
லக்னோ: நாடு முழுவதும் இன்று லோக்சபா தேர்தலின் 5ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. கடந்த 2019ம் ஆண்டு 5ம் கட்ட தேர்தல் வரை வாக்குப்பதிவு நடைபெற்ற 49 தொகுதிகளில் காங்கிரஸ் ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தது.
கடந்த 2019ம் ஆண்டை போல இந்த ஆண்டும் நாடு முழுவதும் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடத்தப்படுகிறது. முதற்கட்டமாக 22 மாநிலங்களில் ஏப்ரல் 19ம் தேதியும், 88 தொகுதிகளுக்கு இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26ம் தேதியும், 94 தொகுதிகளுக்கு மூன்றாம் கட்டமாக மே 7ம் தேதியும், 96 தொகுதிகளுக்கு 4ம் கட்டமாக மே 13ம் தேதியும் தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது.

இந்நிலையில், பீகார் 5 தொகுதிகள், ஜம்மு காஷ்மீர் 1, ஜார்க்கண்ட் 3, லடாக் 1, மகாராஷ்டிரா 13, ஒடிஷா 5, உ.பி. 14, மே. வங்கம் 7 என 6 மாநிலங்கள் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 49 தொகுதிகளுக்கு இன்று 5ம் கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இதில் உத்தரப் பிரதேசம் மிகுந்த கவனம் பெற்றிருக்கிறது.
லோக்சபா தேர்தலில் வெற்றி பெறுபவர்களுக்கு உத்தரப் பிரதேசத்தை முழுமையாக கைப்பற்றுவது அவசியம். ஏனெனில், நாட்டில் அதிக தொகுதிகளை (80 தொகுதிகள்) கொண்ட ஒரே மாநிலம் இது மட்டும்தான். எனவே உத்தரப் பிரதேசத்தை முழுமையாக வசப்படுத்தும் கட்சிகளுக்கு வெற்றிக்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கும். அந்த வகையில் இந்த முறை பாஜக vs இந்தியா கூட்டணிக்கு இடையே கடுமையான போட்டி ஏற்பட்டு வருகிறது.
உத்தரப் பிரதேசத்தின் மூன்று நட்சத்திர தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதாவது ராஜ்நாத் சிங் போட்டியிடும் லக்னோ தொகுதி, ஸ்மிருதி இராணி போட்டியிடும் அமேதி தொகுதி, ராகுல் காந்தி போட்டியிடும் ரேபரேலி தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
அதேபோல மகாராஷ்டிராவின் மும்பை வடக்கு தொகுதியும் நட்சத்திர தொகுதியாக பார்க்கப்படுகிறது. இங்கு பாஜக வேட்பாளராக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் களமிறக்கப்பட்டிருக்கிறார். இவரை எதிர்த்து காங்கிரஸ், பூஷன் பாட்டீலை நிறுத்தியிருக்கிறது.
மொத்தமாக இன்று வாக்குப் பதிவு நடைபெறும் 49 தொகுதிகளில் பாஜக 40 தொகுதிகளில் போட்டியிடுகிறது. மீதமுள்ள 9 தொகுதிகளில் பாஜகவின் கூட்டணி கட்சிகள் போட்டியிடுகின்றன. மறுபுறம் காங்கிரஸ் 49 தொகுதிகளில் 18 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடுகிறது. மீதமுள்ள 31 தொகுதிகளை தனது கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கியிருக்கிறது.
இதில் அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சி (எஸ்பி) 10 இடங்களிலும், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா 8 இடங்களிலும், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி (என்சிபி) 2 இடங்களிலும், ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) 4 இடங்களிலும் போட்டியிடுகின்றன.
இப்படி இருக்கையில் இதேபோல 2019ம் ஆண்டு நடைபெற்ற 5ம் கட்ட தேர்தலில் பாஜக 32 இடங்களிலும், காங்கிரஸ் ஒரே ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது என்கிற விவகாரங்கள் சோஷியல் மீடியாக்களில் ஷேர் செய்யப்பட்டு வருகின்றன. பாஜக 30 தொகுதிகளில் 40 சதவிகிதத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்றது. 2019ல் 49 தொகுதிகளில் போட்டியில் காங்கிரஸ் கட்சி உ.பியின் ரேபரேலி தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது.
இதே போல 2014ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 49 தொகுதிகளில் பாஜக வெறும் 6 இடங்களிலும், காங்கிரஸ் 14 இடங்களிலும் வென்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications