மோடி முதல் ஹேம மாலினி வரை.. உத்தரப்பிரதேச தேர்தலில் பாஜக சார்பில் 30 ஸ்டார் பரப்புரையாளர்கள்!
லக்னோ: உத்தரப்பிரதேச தேர்தலில் பாஜகவை ஆதரித்து பிரசாரம் செய்ய 30 பேர் கொண்ட குழு அறிவிக்கப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேசம், பஞ்சாப், கோவா, மணிப்பூர், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களுக்கான சட்டசபைத் தேர்தல் அடுத்த மாதம் நடைபெறுகிறது. உத்தரப் பிரதேசத்தில் 403 தொகுதிகள் இருக்கிறது. அங்குள்ள கட்சிகள் விறுவிறுப்பாக தேர்தல் வேளைகளில் ஈடுபட்டு வருகின்றன.
உத்தரப்பிரதேசத்தில் சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு, அடுத்த மாதம் 10ல் துவங்கி மார்ச் 7 வரை ஏழு கட்டங்களாக நடக்கவுள்ளது. முதற்கட்ட தேர்தலுக்கான வாக்கு சேகரிப்புகள் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. உத்தரப்பிரதேசத்தின் முக்கிய கட்சிகளாக இருக்கும் பாஜக மற்றும் சமாஜவாதி கட்சியில் இருந்து பலர் விலகி எதிர் எதிர் கட்சிகளில் இணைந்து வருகிறார்கள். முலாயம் சிங் மருமகள் இன்று பாஜக-வில் இணைந்திருக்கிறார். இப்படி ஒவ்வொரு நாளும் திருப்பங்கள் நிறைந்ததாக இருக்கிறது உபி தேர்தல் களம்.

தேர்தல்
உத்தரப்பிரதேச தேர்தல் களத்தைப் பொறுத்தவரை, பாஜக மற்றும் சமாஜவாதி கட்சிக்குத்தான் அதிக போட்டி இருக்கும். விறுவிறுப்பான தேர்தல் பிரசாரத்தால், அங்கு யார் வேண்டுமானாலும் ஆட்சியைப் பிடிக்கலாம் என்று தெரிகிறது. பாஜக மீண்டும் ஆட்சியைத் தக்கவைக்க போராடுகிறது. அகிலேஷ் யாதவ் பாஜக-வுக்கு சரிசமமாக போட்டியைக் கொடுக்கிறார்.

கருத்துக்கணிப்பு
உத்தரப்பிரதேச மாநிலத்துக்கான தேர்தல் கருத்துக்கணிப்பு முடிவுகள் வந்துகொண்டிருக்கின்றன. ஏபிபி சிவோட்டர், இந்தியா டிவி, ரிபப்ளிக் டிவி கருத்து கணிப்புகளில் பாஜக 220-க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெறும் என்றும் சமாஜவாதி கட்சி 160-க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெறும் என்று கருத்து கணிப்புகள் வந்துள்ளன.

வேட்பாளர்
உத்தரபிரதேசத் தேர்தலை இந்தியாவே உற்று நோக்கிப் பார்த்துக் கொண்டிருக்கிறது. பிப்ரவரி 10ம் தேதி முதற்கட்ட தேர்தல் நடக்கிறது. முதல் இரண்டு கட்ட தேர்தலுக்காக சமீபத்தில் 107 வேட்பாளர்கள் கொண்ட பட்டியலை வெளியிட்டது பாஜக. முதல்வர் யோகி கோரக்பூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.

பிரசார குழு
முதற்கட்ட தேர்தலில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக 30 பேர் கொண்ட ஸ்டார் பிரச்சார குழுவை அறிவித்துள்ளது பாஜக கட்சித் தலைமை. இதில் பிரதமர் நரேந்திர மோடி, கட்சியின் தலைவர் ஜே.பி.நட்டா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித் ஷா, முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்திய அமைச்சர் நிதின் கட்காரி, ஸ்மிருதி இரானி, கட்சியின் எம்.பி. ஹேம மாலினி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.












Click it and Unblock the Notifications