பிரதமர் மோடியை புகழ்ந்ததற்காக உ.பி.யை சேர்ந்தவர் படுகொலை.. விபரீதத்தில் முடிந்த கார் பயணம்! ஷாக்
லக்னோ: பிரதமர் நரேந்திர மோடியைப் புகழ்ந்து பேசியது குறித்து எழுந்த பிரச்சினையில் மிர்சாபூரைச் சேர்ந்த ஒரு நபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாக எங்கு வெளியே பயணிக்கும் போது உடன் பயணிப்போருடன் ஜாலியாக எதையாவது பேசிக் கொண்டு தான் வருவோம். பேசிக் கொண்டே பயணித்தால் நேரம் போவது தெரியாது என்பதால் பலரும் உடன் வருவோருடன் பேசிக் கொண்டே பயணிப்பார்கள்.
சினிமா, சுற்றுலா என பொதுவான டாப்பிக்குகளில் தான் பயணிக்கும் போது பேசுவார்கள். அரசியல் சார்ந்து எதாவது பேசுவது சண்டையில் முடியும் என்பதால் இதுபோன்ற தலைப்புகளைப் பேசுவதைப் பலரும் தவிர்க்கவே செய்வார்கள்.

ஷாக் சம்பவம்: இருப்பினும், சிலர் விடாப்பிடியாக அரசியல் நிலைப்பாட்டைச் சொல்லி வாக்குவாதம் கூடச் செய்வார்கள். இவை பெரும்பாலும் அந்த பயணத்துடன் முடிந்துவிடும்.. யாருக்கும் எந்தவொரு ஆபத்தும் ஏற்படாது. ஆனால், இப்போது இதுவே ஒருவரின் உயிரைப் பறித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடியை புகழ்ந்து பேசியதால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் நபர் ஒருவரை கார் ஓட்டுநர் கொலை செய்துள்ளார். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் மிர்சாபூரில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. நேற்றைய தினம் அப்பகுதியைச் சேர்ந்த ராஜேஷ்தர் துபே (50) என்பவர் தனது உறவினர் திருமண விழாவில் கலந்து கொள்ளச் சென்றபோது இந்த சம்பவம் நடந்துள்ளது. அதாவது ராஜேஷ்தர் துபேயின் உறவினருக்குக் கடந்த ஞாயிற்றுக்கிழமை மிர்சாபூரில் திருமணம் நடந்துள்ளது.
வாடகை கார்: அதைத் தொடர்ந்து அங்கே பல சடங்குகளும் நடந்துள்ளது. அதைத் தொடர்ந்து நேற்று திங்கள்கிழமை அதிகாலை, ராஜேஷ்தர் துபே மற்றும் அவரது உறவினர்களுடன் வீடு திரும்பியுள்ளனர். அதிகாலை நேரம் என்பதால் சீக்கிரம் வீட்டிற்குச் செல்ல வாடகை கார் ஒன்றையும் புக் செய்துள்ளனர்.
ஆரம்பத்தில் அவர்களின் பயணம் நன்றாகவே சென்றுள்ளது. அப்படியே பேசிக் கொண்டே பயணித்துள்ளனர். இருப்பினும், சற்று நேரத்தில் அவர்கள் அப்படியே அரசியல் பற்றி பேச ஆரம்பித்துள்ளனர். அப்போது தான் ராஜேஷ்தர் துபேவுக்கும் கார் டிரைவரும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
என்ன பிரச்சினை: ராஜேஷ்தர் துபே பிரதமர் நரேந்திர மோடியைப் பாராட்டிப் பேசிய நிலையில் இதில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. மேலும், அந்த டிரைவர் பிரதமர் மோடி மற்றும் உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்தை விமர்சித்துப் பேசியுள்ளார். பிரதமரையும் முதல்வரையும் விமர்சிக்கக் கூடாது என்று டிரைவரை பேச விடாமல் ராஜேஷ்தர் துபே தடுத்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த அந்த டிரைவர் வண்டியை நிறுத்தி ராஜேஷ்தர் துபேவை வலுக்கட்டாயமாகக் கீழே இறக்கியுள்ளார். இதனால் கடுப்பான ராஜேஷ்தர் துபே காருக்கு வழிவிடாமல் மறித்து நின்றுள்ளார். அப்போது தான் இந்த கொடூரம் நடந்துள்ளது. அதாவது துபே காரின் முன்னால் நின்ற போதிலும், அதைக் கண்டு கொள்ளாமல் அந்த டிரைவர் காரை இயக்கியுள்ளார். இதனால் கார் மோதி துபே நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார். அப்படியே சுமார் 20 மீட்டருக்கு அந்த டிரைவர் காரை இயக்கியுள்ளார்.
ஷாக் சம்பவம்: அருகில் இருந்த பயணிகள் இதைப் பார்த்துக் கூச்சலிடத் தொடங்கிய பின்னரே அந்த டிரைவர் வாகனத்தை நிறுத்தியுள்ளார். உடன் வந்த மற்ற பயணிகள் துபேவை மீட்க காரில் இருந்து கீழே இறங்கியுள்ளனர். இருப்பினும், கார் மோதி 20 மீட்டர் இழுத்துச் செல்லப்பட்டதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இப்போது கார் ஓட்டுநர் காரை அங்கேயே விட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார். இது குறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சுமார் 6 மணி நேரம் தேடுதல் வேட்டை நடத்திய போலீசார், அம்ஜத் என்ற அந்த டிரைவரை கைது செய்தனர். சிசிடிவி காட்சிகள் மற்றும் உடன் வந்த பயணிகளின் வாக்குமூலத்தின் அடிப்படையில் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் அங்கே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications