வக்கீல் உடையில்.. கேங்ஸ்டர் முக்தார் அன்சாரியின் உதவியார் சுட்டுக்கொலை! லக்னோ கோர்ட்டில் பயங்கரம்
லக்னோ: உத்தர பிரதேச மாநிலம் லக்னோ நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் போல் உடையணித்து வந்த கும்பல் பிரபல கேங்ஸ்டர் முக்தார் அன்சாரியின் கூட்டாளியான சஞ்சீவ் மகேஷ்வரியை துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்தது.
உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் சஞ்சீவ் மகேஷ்வரி என்ற ஜீவா. இவர் மேற்கு உத்தர பிரதேச மாநிலங்களில் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளார். இவர் மீது பல கிரிமினல் வழக்குகள் உள்ளன. பிரபல கேங்ஸ்டரும், அரசியல்வாதியுமான முக்தார் அன்சாரியின் உதவியாளராக அறியப்படும் இவர் பிரபல ரவடியாக வலம் வந்தார்.

இந்நிலையில் தான் வழக்கு ஒன்றில் அவர் இன்று லக்னோவில் உள்ள சிவில் நீதிமன்றத்துக்கு போலீசார் அழைத்து வந்தனர். இந்த வேளையில் திடீரென்று அவரை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. வழக்கறிஞர்கள் போல் உடையணித்து நீதிமன்ற வளாகத்தில் சுற்றிய நபர்கள் சஞ்சீவ் மகேஷ்வரியை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இதில் அவரது உடலில் குண்டுகள் பாய்ந்தன. இதையடுத்து அவர் சரிந்து விழுந்தார்.
இதையடுத்து துப்பாக்கிச்சூடு நடத்திய கும்பல் அங்கிருந்து ஓடிவிட்டது. இந்த துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த சஞ்சீவ் மகேஷ்வரி பரிதாபமாக இறந்தார். மேலும் சிறுமி, போலீஸ்காரர் என 2 பேர் காயமடைந்தனர். இவர்கள் 2 பேரும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இதுபற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சஞ்சீவ் மகேஷ்வரியை துப்பாக்கியால் சுட்டு கொன்றது யார்? அதற்கான காரணம் என்ன? என்பது பற்றிய விபரம் உடனடியாக தெரியவில்லை. இதுபற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
முன்னதாக காங்கிரஸ் மூத்த தலைவரான அவதேஷ் ராய் கடந்த 1991-ம் ஆண்டு ஆகஸ்டு 3ம் தேதி சுட்டுக்கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் வாரணாசி எம்.பி., எம்எல்ஏவுக்கான நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் முன்னாள் எம்எல்ஏ முக்தார் அன்சாரிக்கு கடந்த மாதம் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த வழக்கில் சஞ்சீவ் மகேஷ்வரிக்கும் தொடர்பு உள்ளதாக கூறப்படும் நிலையில் இன்று அவர் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
இதற்கிடையே தான் நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச்சூடு நடந்தது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரவி வருகின்றன. சமீபத்தில் உத்தர பிரதேச மாநிலம் பிரக்யாராஜ் மருத்துவமனையில் வைத்து முன்னாள் எம்பியும், கேங்ஸ்டருமான ஆதிக் அகமது, அவரது சகோதரர் அஷ்ரப் ஆகியோரை மர்மகும்பல் துப்பாக்கியால் சுட்டு கொன்றது.
பத்திரிகையாளர்கள் போர்வையில் வந்த மர்மகும்பல் தான் ஆதிக் அகமது மற்றும் அவரது சகோதரர் அஷ்ரப் ஆகியோரை துப்பாக்கியால் சுட்டு கொன்றது. இதுதொடர்பான வீடியோ அப்போது வெளியாகி பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் தான் தற்போது சஞ்சீவ் மகேஷ்வரியை ஒரு கும்பல் நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications