புல்டோசர்களுக்கு என்ன ஆனது? ஆசிரியை விவகாரத்தில் உ.பி முதல்வர் யோகியை சீண்டிய ஒவைசி
லக்னோ: உத்தரபிரதேசத்தில் 2-ம் வகுப்பு மாணவனை ஆசிரியை சக மாணவர்களால் அறைய வைத்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை ஒவைசி கடுமையாக சாடியுள்ளார்.
உத்தர பிரதேச மாநிலம் முசாபர் நகர் மாவட்டத்தில் குப்பாபூர் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணி புரிபவர் திருப்பதி தியாகி. 2- ஆம் வகுப்புக்கு பாடம் எடுத்து வரும் இவர் தனது வகுப்பில் வீட்டுப்பாடம் செய்யாமல் வந்ததற்காக ஒரு முஸ்லீம் மாணவனை சக மாணவர்களை வைத்து அடிக்க வைத்ததாக சொல்லப்படுகிறது.

இது தொடர்பாக வீடியோ நேற்று முன்தினம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பாதிக்கப்பட்ட சிறுவனின் குடும்பத்தினர் புகாரின் பேரில் ஆசிரியை மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். குறிப்பிட்ட பள்ளி நிர்வாகத்தின் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்படும் என்று மாவட்ட கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, அந்த ஆசிரியை நடந்த சம்பவம் குறித்து அளித்த விளக்கத்தில், மாணவர் ஒருவரை சக மாணவனை வைத்து அடிக்க வைத்தது தவறுதான் என்றார். மேலும் தான் ஒரு மாற்றுத்திறனாளி எனவும் மாணவன் வீட்டுப்பாடம் செய்யாததால் அவனை ஒழுங்குபடுத்தும் விதமாக அடிக்க நினைத்தேன். தன்னால் எழுந்து செல்ல முடியாததால், நான் அவ்வாறு செய்தேன் என்றார். எனினும் ஆசிரியை செயலுக்கு பல்வேறு தரப்பிலும் கண்டணங்கள் குவிந்து வருகின்றன.
காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இந்த சம்பவத்திற்கு கடுமையான கண்டனங்களை தெரிவித்தார். பாஜகவின் வெறுப்பு அரசியலின் விளைவுதான் இந்த சம்பவம் என்று சாடினார். அதேபோல், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறும் போது, "பள்ளி போன்று புனிதமான இடம் வெறுப்பு சந்தையாக மாற்றப்பட்டுள்ளது" என்று குற்றம் சாட்டியிருந்தார்.
இந்த நிலையில், ஐதரபாத் எம்.பியும் ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சியின் தலைவருமான ஒவைசி, இந்த விவகாரத்தில் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சீண்டியுள்ளார். இது குறித்து ஒவைசி கூறியதாவது:- மாணவனை சக மாணவர்களை வைத்து அறைய வைத்தது கண்டிக்கத்தக்கது. பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு நீதி வேண்டும். மாநிலத்தில் ஆளும் பாஜக அரசு வெறுப்புணர்வை பரப்புகிறது" என்று சாடினார்.
மேலும், யோகி ஆதித்யநாத்தை டேக் செய்துள்ள ஒவைசி, புல்டோசருக்கு என்ன ஆனது? என்று கேள்வி எழுப்பியுள்ளார். சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுக்கு உள்ளாகுபவர்களின் வீடுகள் மற்றும் அவர்களுக்கு சொந்தமான கட்டிடங்களை ஆக்கிரமிப்பில் இருந்ததாக கூறி புல்டோசர் கொண்டு இடிக்கும் நடவடிக்கையை பாஜக ஆளும் மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன.
குறிப்பாக உத்தர பிரதேசத்தில் இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுவதாக சொல்லப்படுகிறது. அதுவும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் சிறுபான்மை இனத்தவர்களாக இருந்தால் மட்டுமே இதுபோன்ற நடவடிக்கை எடுக்கப்படுவதாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வரும் சூழலில், ஒவைசி இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.












Click it and Unblock the Notifications