சனாதனம்: உதயநிதி ஸ்டாலின் தலையை வெட்டினால் ரூ10 கோடி பரிசு-உ.பி. 'கொலைகார' சாமியார் பகீர் அறிவிப்பு
லக்னோ: சனாதனத்தை ஒழிப்போம் என பேசியதற்காக தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலையை வெட்டி கொண்டு வந்தால் ரூ10 கோடி பரிசு தருவேன் என உத்தரப்பிரதேச சாமியார் பரமஹன்ஸ ஆச்சார்யா அறிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மனிதர்களை பிளவுபடுத்துகிற ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்துகிற சனாதன தர்மம் எதிர்க்கப்பட வேண்டியது அல்ல- ஒழிக்கப்பட வேண்டியது என்பதுதான் தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு.

ஆனால் சனாதன தர்மத்தைப் பின்பற்றுவோரை இனப்படுகொலை செய்ய தூண்டிவிட்டார் உதயநிதி ஸ்டாலின் என வட இந்தியா முழுவதும் பாஜகவும் அதன் ஆதரவு ஊடகங்களும் பொய் பிரசாரம் செய்து வருகின்றன. பாஜக இதனை லோக்சபா தேர்தலுக்கான பிரசாரமாக கையில் எடுத்திருக்கிறது.
அதே நேரத்தில் தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள் உதயநிதி ஸ்டாலின் கருத்தை தொடர்ந்து ஆதரித்து வருகின்றனர். மேலும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் தாம் பேசியது சரிதான். அதில் தவறு எதுவும் இல்லை. சனாதன தர்மத்தை ஒழிப்பதில் உறுதியாக இருக்கிறேன். என்னதான் நடந்தாலும் நடக்கட்டும் என்றார்.
மேலும் ஒட்டு மொத்த இந்தியாவே சனாதனம் குறித்து பேசிக்கொண்டு இருக்கிறது. இன்னமும் பேச வேண்டும். நான் சொன்னது போல் நிறைய பேருக்கு வயிற்றெரிச்சல் வந்துள்ளது, Genocide என நான் சொன்னதாக பயித்தியக்காரத்தனமாக சிலர் பேசுகின்றனர். சனாதனம் கோட்பாடு ஒழிக்க வேண்டும் என்று தான் பேசினேன். திராவிடத்தை ஒழிக்க வேண்டும் என்கிறார்கள் சிலர். அதற்கு திமுகவினரை எல்லாம் கொலை செய்வதாக அர்த்தமா? எல்லாருக்கும் எல்லா கிடைக்க வேண்டும் என்பதே திராவிட கொள்கை. முன்பு பெண்கள் படிக்க கூடாது. மேலாடை அணிய கூடாது. இதையெல்லாம் மாற்றியதே திராவிட மாடல், வேண்டுமென்று பாஜகவினர் போலி செய்தி பரப்புகின்றனர். இந்தியா கூட்டணி கூட்டம் வெற்றியடைந்ததை திசைதிருப்பவே பாஜகவினர் இப்படி செய்கின்றனர். வதந்திகள் பரப்புவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்திருந்தார் உதயநிதி ஸ்டாலின்.
இதனிடையே உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த சாமியார் என அழைத்துக் கொள்ளும் பரமஹன்ஸ ஆச்சார்யா, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் படத்தை வாளால் வெட்டி, கிழித்து தீ வைத்து எரித்துள்ளார். அத்துடன் அமைச்சர் உதயநிதியை கொலை செய்து தலையை வெட்டி எடுத்து வருவோருக்கு ரூ10 கோடி பரிசு தருவேன் எனவும் அயோத்தி சாமியார் அறிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications