கால்நடைகளை பராமரிப்பதன் மூலம் இயற்கை விவசாயத்தில் கவனம்! உத்தரப் பிரதேச அரசு புது முயற்சி
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் கால்நடைகளை பராமரிக்க உருவாக்கப்பட்டுள்ள மருத்துவக் குழுக்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்றும், இந்த திட்டம் மூலம் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சியமைத்து 6 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இந்த 6 ஆண்டுகளில் பல்வேறு திட்டங்களை முதலமைச்சர் யோகி அதித்யநாத் அறிவித்திருக்கிறார். அதேபோல இதற்கு முன்னர் இம்மாநிலத்தில் முதலமைச்சராக பணியாற்றியவர்கள் யாரும் தொடர்ச்சியாக 6 ஆண்டுகள் பதவியில் இருந்ததில்லை. இந்த சாதனையை யோகி ஆதித்யநாத் முறியடித்துள்ளார். எனவே இதனை பாஜக சிறப்பாக கொண்டாடி வருகிறது.

நலத்திட்டங்களை தொடங்கி வைத்தல், புதிய திட்டங்களை அறிவித்தல், முடிவு பெற்ற நலத்திடங்களை மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தல் என பாஜக அரசு இந்த 6 ஆண்டு சாதனையை கொண்டாடி வருகிறது. இந்த கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக சமீபத்தில் நடமாடும் கால்நடை மருத்துவ யூனிட்களை முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தொடங்கி வைத்துள்ளார். மாநிலம் முழுவதும் உள்ள 75 மாவட்ட மக்களுக்கு பயன்படும் வகையில் இந்த திட்டத்தை யோகி ஆதித்யநாத் தொடங்கி வைத்திருக்கிறார்.
இது குறித்து பேசிய அவர், "கால்நடைகளுக்கான மருத்துவ உதவிகளை பெற 1962 என்கிற எண்ணுக்கு தொடர்பு கொண்டால் நடமாடும் மருத்துவ வாகனங்கள் வீடு தேடி வரும். இந்த திட்டத்திற்கு மத்திய அரசு ரூ.202 கோடி நிதியை ஒதுக்கியிருக்கிறது. இந்த மருத்துவக்குழுக்கள் குழு கால்நடைகளின் நோயறிதல், சிகிச்சை மற்றும் சிறு அறுவை சிகிச்சை ஆகியவற்றை மேற்கொள்ளும். இதற்கான கருவிகள் கொண்ட வாகனத்தில் இக்குழு பயணிக்கும். இந்த திட்டத்தால் மாடு வைத்திருப்பவர்கள்தான் அதிக அளவில் பயன்படுவார்கள். உத்தரப் பிரதேசத்தில் இந்த திட்டம் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும்.
கடந்த 2014ம் ஆண்டு முதல் விவசாயிகள் மற்றும் விவசாய கால்நடைகளுக்கு உதவும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். ஏற்கெனவே மாநிலம் முழுவதும் பசு பாதுகாப்பு மையங்கள் செயல்பட்டு வருகின்றன. மாநிலம் முழுவதும் உள்ள தெருக்களில் சுமார் 12 லட்சம் பசுக்கள் இருக்கின்றன. இவற்றை 6,600 பசு பாதுகாப்பு மையங்கள் பராமரித்து வருகின்றன. அதேபோல நமது அரசு ஒவ்வொரு பசுவுக்கும் சுமார் ரூ.900-ஐ பராமரிப்பு செலவுக்காக வழங்குகிறது. மட்டுமல்லாது பசுவை அடிப்படையாக கொண்டு இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கவும் மாநில அரசு தொடர்ந்து முயன்று வருகிறது" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications