உ.பி போலீசை நம்ப முடியாது.. சந்தேகமா இருக்கு.. அல் கொய்தா தீவிரவாதிகள் கைது.. அகிலேஷ் விமர்சனம்!
லக்னோ: உத்தர பிரதேச போலீஸை நம்ப முடியாது, அவர்கள் அல் கொய்தா தீவிரவாதிகளை கைது செய்ததாக கூறியதை என்னால் நம்ப முடியவில்லை என்று சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.
உத்தர பிரதேசத்தில் அடுத்த வருடம் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இதற்காக பாஜக தீவிரமாக தயாராகி வருகிறது. அங்கு மீண்டும் யோகி ஆதித்யநாத் முதல்வர் பதவிக்கு முன்னிறுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் தேர்தல் குறித்த ஆலோசனைகள் நடந்து வரும் போது, அங்கு தீவிரவாத தாக்குதல் நடத்தப்படலாம் என்ற பதற்றம் ஏற்பட்டுள்ளது. நேற்று முதல்நாள் அல் கொய்தா அமைப்புடன் தொடர்புடையதாக குற்றஞ்சாட்டப்பட்ட 2 தீவிரவாதிகள் லக்னோவில் கைது செய்யப்பட்டனர்.

கைது
அன்சார் காஸ்வாதுல் ஹிண்ட் என்ற அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர். இது இந்தியாவில் அல் கொய்தா ஆதரவை பெற்று இயங்கி வரும் அமைப்பு ஆகும். இந்த அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகள் உத்தர பிரதேசத்தில் பல்வேறு வெடிகுண்டு தாக்குதல்களுக்கு திட்டமிட்டு இருந்ததாகவும். மனித வெடிகுண்டு தாக்குதல்களுக்கு திட்டமிட்டு இருந்ததாகவும் கூறப்பட்டது.

தீவிரவாதம்
முக்கியமாக ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திரத்தினத்தன்று இவர்கள் தீவிரவாத தாக்குதலை நடத்த திட்டமிட்டு இருந்ததாகவும் கூறப்பட்டது. கடந்த ஞாயிற்றுக்கிழமை லக்னோவில் தீவிரவாத தடுப்பு அமைப்பு மூலம் இவர்கள் கைது செய்யப்பட்டனர். தேர்தல் நடப்பதற்கு முன் சரியாக இப்படி தீவிரவாதிகள் சதித்திட்டம், கைது என்று வெளியாகும் செய்திகளை எதிர்கட்சிகள் கேள்வி எழுப்ப தொடங்கி உள்ளனர்.

கேள்வி
சரியாக தேர்தலுக்கு முன் இப்படி நடப்பது சந்தேகம் தருவதாக எதிர்க்கட்சியினர் பலர் சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பி உள்ளனர். இந்த நிலையில் உத்தர பிரதேச முன்னாள் முதல்வரும் சமாஜ்வாதி தலைவருமான அகிலேஷ் யாதவ் இந்த கைது குறித்து சந்தேகம் எழுப்பி உள்ளார். அதில், உத்தர பிரதேச போலீஸை நம்ப முடியாது, அவர்கள் அல் கொய்தா தீவிரவாதிகளை கைது செய்ததாக கூறியதை என்னால் நம்ப முடியவில்லை.

சந்தேகம்
இது பாஜக அரசு. அவர்களை என்னால் நம்ப முடியாது, என்று அகிலேஷ் யாதவ் சந்தேகம் எழுப்பி உள்ளார். சரியாக தேர்தலுக்கு முன் இப்படி செய்திகள் வருவதாக அகிலேஷ் யாதவ் சந்தேகம் எழுப்பி உள்ளார். இதையடுத்து பாஜக தலைவர்கள் பலர் அகிலேஷ் யாதவை இணையத்தில் விமர்சனம் செய்ய தொடங்கி உள்ளனர். அகிலேஷ் யாதவ் அனைத்தையும் சந்தேகிக்க கூடியவர், ஏற்கனவே வேக்சினை சந்தேகித்தார், இப்போது தீவிரவாதிகளையும் சந்தேகிக்கிறார்.

சந்தேகம் தவறு
அவர் பாகிஸ்தானை மட்டும்தான் நம்புவார் என்று நினைக்கிறோம் என்று பாஜகவின் சிடி ரவி, அமித் மால்வியா ஆகியோர் விமர்சனம் செய்துள்ளனர். இந்த நிலையில் அகிலேஷ் யாதவ் பேசிய வீடியோ எடிட் செய்யப்பட்டது என்று சமாஜ்வாதி கட்சி தெரிவித்துள்ளது. அகிலேஷ் யாதவ் பேசிய விஷயத்தை திரித்து அவருக்கு எதிராக தவறாக பரப்பி வருகிறார்கள், என்று அக்கட்சி விளக்கம் அளித்துள்ளது.












Click it and Unblock the Notifications