'ஆன்மீகம்'.. தென்கொரியாவின் வேர் இந்தியாவிலிருந்துதான் தொடங்குகிறது.. உ.பி முதல்வர் யோகி பெருமிதம்
லக்னோ: தென்கொரியா உள்ளிட்ட பல்வேறு மேலை நாடுகளின் ஆன்மீக தாயகம் இந்தியாதான் என்று உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
தென்கொரியா, வடகொரியா, சீனா, தாய்லாந்து, பர்மா, வங்கதேசம் என பல்வேறு ஆசிய நாடுகளில் பௌத்த மதம் தீவிரமாக பின்பற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில், தென்கொரியாவை சேர்ந்த புத்த மத யாத்திரிகள் இந்தியாவிலும், நேபாளத்திலும் கௌதம புத்தர் வாழ்ந்த இடங்களுக்கு 43 நாட்கள் நடைப்பயணமாக பாத யாத்திரை செய்தனர். இந்த பயணம் நேற்று முடிவடைந்தது. இதையடுத்து நடைபெற்ற நிறைவு விழாவில் பங்கேற்றிருந்த உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் "தென்கொரியா உள்ளிட்ட பல்வேறு மேலை நாடுகளின் ஆன்மீக தாயகம் இந்தியாதான்" என்று கூறியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், "இந்தியாவுக்கும் தென்கொரியாவுக்கும் இடையேயான ராஜ தந்திர உறவுகள் வெறும் 50 ஆண்டுகள்தான் பழமையானவை. ஆனால், இரு நாடுகளுக்கும் இடையேயான ஆன்மீக உறவு என்பது பல நூற்றாண்டுக்காலம் பழமையானது. கொரிய நாட்டை சேர்ந்தவர்களை பொறுத்த அளவில் இந்தியா என்பது அவர்களுக்கு வெளிநாடு கிடையாது. இந்தியா அவர்களின் ஆன்மீக தாய்நாடு. கடந்த 43 நாட்களாக பாத யாத்திரை மேற்கொண்ட துறவிகளை நான் வாழ்த்துகிறேன். துறவிகள் அனைத்தையும் துறந்ததாக அறிப்படுகிறார்கள். ஆனால் அவர்கள் இன்னும் ஆழமாக பயணிக்கும்போது அவர்கள் ஆன்மீகத்தில்தான் சென்று சேர்கிறார்கள்.
தற்போது யாத்திரை மேற்கொண்ட அனைவரும் புத்த ஜோகி சங்கத்தை சேர்ந்தவர்களாவார்கள். இந்த சங்கத்தின் வேர்கள் இந்தியாவில்தான் இருக்கிறது. உங்கள் தியான பாரம்பரியத்தின் தோற்றம் சரஸ்வதிதான். இந்தியா புத்த சமூகத்தின் நம்பிக்கைக்குரிய இடமாக இருக்கிறது. அதேபோல உத்தரப் பிரதேசமும் புத்த மதத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருக்கிறது. சாந்தி உப்வான் புத்த சிலை உத்தரப் பிரதேசத்தில்தான் இருக்கிறது. சர்வதேச புத்த ஆராய்ச்சி நிறுவனத்தையும் நாங்கள்தான் நடத்தி வருகிறோம். குஷிநகரிலேயே புத்தரின் பெயரில் வேளாண்மை மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தை நாங்கள் அமைக்க இருக்கிறோம்.
இவையனைத்திற்கும் மேலாக புத்த மதத்தின் புனித பூமியாக இருக்கும் இந்தியாவுக்கும், புத்த மதத்தை அளவில்லாது நேசிக்கும் தென்கொரியாவுக்குமான ராஜ தந்திர உறவுகள் பிரதமர் மோடி தலைமையில் மேம்பட்டு புதிய உச்சத்தை எட்டியிருக்கின்றன. இந்தியாவக்கும் தென்கொரியாவுக்கும் இடையேயான பரஸ்பர வர்த்தகம் என்பது ரூ.2.3 லட்சம் கோடியாகும். நாங்கள் இங்கிருந்து தென்கொரியாவுக்கு ரூ.74 ஆயிரம் கோடி மதிப்பில் ஏற்றுமதி செய்கிறோம். அங்கிருந்து ரூ.1.5 லட்சம் கோடி அளவில் இறக்குமதி செய்கிறோம். அந்த அளவுக்கு இரு நாடுகளின் உறவு நெருக்கமானதாக இருக்கிறது" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications