வக்ஃப் சொத்துகளை கணக்கெடுக்க உ.பி அரசு உத்தரவு.. ரொம்ப தவறு.. ஒவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி எதிர்ப்பு
லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலத்தில் இயங்கி வரும் மதரஸாக்களை ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று பாஜக தலைமையிலான அம்மாநில அரசு சமீபத்தில் உத்தரவிட்டிருந்தது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
தற்போது இதனைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் உள்ள வக்ஃப் சொத்துக்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டு அறிக்கை அளிக்க வேண்டும் என அம்மாநில அரசு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் உத்தரவிட்டுள்ளது.
மதரஸாக்கள், வக்ஃப் சொத்துக்கள் என தொடர்ந்து இஸ்லாமியர்கள் தொடர்பான விவகாரங்களில் தலையிட்டு பிரச்னைகளை ஏற்படுத்தி வருவதாக யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசை அசாதுதீன் ஒவைசியின் ஏஐஎம்ஐஎம் (AIMIM) கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

ஆய்வு
உத்தரப் பிரதேசம் முழுவதும் சுமார் 16,500 மதரஸாக்கள் இருக்கின்றன. இதில் 558 அரசு நிதியுதவி பெறுபவை, 7,442 மதரஸாக்கள் நவீன கல்வியை போதிக்கும் இடமாக விளங்குகிறது. ஆனால் அங்கீகாரம் பெறாமலேயே சில மதரஸாக்கள் இயங்கி வருவதாகவும், இவற்றில் கல்வி கற்கும் மாணவர்களின் நிலை மற்றும் கற்றுக்கொடுக்கும் ஆசிரியரின் நிலை மிகவும் மோசமாக உள்ளதாகவும் குற்றச்சாட்டு வந்ததாக சொல்லப்படுகிறது. என இதனை சீரமைக்கவே இவ்வாறான நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும் பாஜக விளக்கமளித்திருந்தது.

வக்ஃப் சொத்துக்கள் கணக்கெடுப்பு
இது நாடு ழுழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தற்போது இதனைத் தொடர்ந்து, மாநிலத்தில் உள்ள அனைத்து வக்ஃப் சொத்துகளையும் ஒரு மாதத்திற்குள் விசாரிக்க முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். மாவட்ட நிர்வாகங்கள் கணக்கெடுப்பு நடத்தி, உரிய அறிக்கையை ஒரு மாதத்தில் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. வக்ஃப் சொத்துக்கள் மாஃபியா கைகளுக்கு செல்வதை தடுக்கவே இந்த நடவடிக்கையை மேற்கொள்வதாக அரசு தெரிவித்திருக்கிறது.

உத்தரவு
இந்த சொத்துக்கள் கடவுளின் சொத்துக்கள் என்றும், இவற்றை ஆக்கிரமிக்க யாருக்கும் உரிமை இல்லையென்றும் மாநிலத்தின் முஸ்லிம் வக்ஃப் மற்றும் ஹஜ் அமைச்சர் தரம் பால் சிங் கூறியுள்ளார். அரசு அறிவிப்பையடுத்து சிறுபான்மையினர் நலத்துறையின் செயலாளர் உத்தரவு பிறப்பித்து மாவட்ட ஆணையர்கள் மற்றும் ஆட்சியர்களுக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதற்கு முன்னர் இருந்த சட்டத்தை இந்த உத்தரவு மூலம் அரசு ரத்து செய்துள்ளது.

கடவுளின் சொத்து
அதாவது கடந்த 1989ம் ஆண்டு சட்டம் ஒன்று இயற்றப்பட்டது. இந்த சட்டத்தின்படி, தரிசு நிலங்கள், வேளாணுக்காக பயன்படுத்தப்படாமல் இருந்த நிலங்கள் அல்லது புனிதத் தலங்கள், கப்ரிஸ்தான் அல்லது ஈத்காவால் பயன்படுத்தப்படும் பொது சொத்துக்களை வக்ஃப் வாரியத்திற்கு மாற்ற வழி வகுத்தது. இந்த கணக்கெடுப்பு நல்ல நோக்கத்துடன் செயல்படுத்தப்படுவதாகவும், வக்ஃப் சொத்துக்களை முதலில் கண்டறிந்து, அதன்பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தரம் பால் சிங் கூறியுள்ளார்.

கேள்வி
பாஜக அரசின் இந்த உத்தரவு மாநிலத்தில் புதிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த உத்தரவுக்கு அசாதுதீன் ஒவைசியின் அனைத்திந்திய மஜ்லிசே இத்திகாதுல் முசுலிமீன் (AIMIM) கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் சையத் அசிம் வக்கார், "மத்ரஸா கணக்கெடுப்பை விட வக்ஃப் கணக்கெடுப்பு ஒரு பெரிய NRC திட்டம். இந்த அரசு ஏன் பெரிய இந்து மடங்கள் மற்றும் அறக்கட்டளைகளுக்கு எதிராக கணக்கெடுப்பு நடத்தவில்லை?" என்று கேள்வியெழுப்பியுள்ளார்.












Click it and Unblock the Notifications