5 பெண் குழந்தைகள்! 6ஆவது ஆணா? பெண்ணா? 8 மாத கர்ப்பிணியின் வயிற்றை பிளந்த கணவன்.. உ.பி.யில் ஷாக்
லக்னோ: உத்தரப்பிரதேசம், லக்னோவில் கர்ப்பத்தில் இருப்பது ஆணா, பெண்ணா என அறிய தனது மனைவியின் வயிற்றை கணவன் பிளந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த கொடூர கணவனுக்கு குடும்ப நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தும் ரூ 50 ஆயிரம் அபராதமும் விதித்தும் தீர்ப்பளித்தது.

உத்தரப்பிரதேசத்தில் பதான் மாவட்டத்தை சேர்ந்தவர் பன்னா லால். இவருடைய மனைவி அனிதா. இவர்களுக்கு 5 மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் பன்னா லாலுக்கு மகன் வேண்டும் என்பதால் ஒவ்வொரு முறையும் மகனாக இருக்க வேண்டும் என எண்ணி மனைவியை கருவுற செய்துவிட்டு பிறகு பெண் குழந்தை பிறந்ததும் அவர் கோபமடைந்ததாக தெரிகிறது.
ஏன் தொடர்ந்து பெண் குழந்தையாகவே பெற்று தருகிறாய் என அனிதாவிடம் அவ்வப்போது பன்னா லால் சண்டையிட்டு வருவாராம். எனினும் அனிதாவின் குடும்பத்தினர் இந்த விவகாரத்தில் தலையிட்டு அவர்களை சமாதானம் செய்வார்களாம். எனினும் "அடுத்து பிறக்கும் குழந்தை பெண்ணாக இருந்தால் உங்கள் பெண்ணை விவாகரத்து செய்துவிட்டு ஆண் குழந்தைக்காக வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்வேன்" என மிரட்டியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் 6 ஆவது முறையாக அனிதா கருவுற்றார். அப்போது கடந்த 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 8 மாத கர்ப்பிணியான அனிதாவுடன் , பன்னா லால் கருவில் இருக்கும் குழந்தை ஆணாக இருக்க வேண்டும் என்பது தொடர்பாக இருவருக்கும் வாய்த் தகராறு ஏற்பட்டது. அப்போது பன்னா லால் திடீரென அனிதாவின் வயிற்றை அரிவாளால் அறுத்துள்ளார்.
இதில் அனிதாவின் குடல்கள் எல்லாம் வெளியே வந்துவிட்டது. அவருடைய கருவும் இறந்துவிட்டது. இதையடுத்து அனிதாவை மோசமான நிலையில் பரேலியில் உள்ள மருத்துவமனையில் அவருடைய உறவினர்கள் சேர்த்தனர். இதையடுத்து பன்னா லாலுக்கு எதிராக அனிதாவின் குடும்பத்தினர் வழக்கு பதிவு செய்தனர். அந்த வழக்கை விசாரித்த விரைவு நீதிமன்ற நீதிபதி சவுரப் சாக்சேனா பன்னா லாலுக்கு ஆயுள் தண்டனை விதித்துள்ளார். மேலும் ரூ 50 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. ஒரு வேளை அபராதத்தை செலுத்த தவறினால் கூடுதலாக 6 மாதம் சிறையில் இருக்க நேரிடும் என உத்தரவிடப்பட்டது.
இந்தியாவில் வயிற்றில் வளரும் சிசு ஆணா, பெண்ணா என கண்டறிவது தண்டனைக்குரிய குற்றமாகும். பெண் குழந்தை என்றால் அந்த குழந்தைக்கு திருமணத்தின் போது நிறைய வரதட்சிணை, சீர் செய்ய வேண்டியிருப்பதால் பெண் குழந்தை என்றாலே செலவு என்ற மூடநம்பிக்கை பலரிடம் ஏற்பட்டுவிட்டது.
இந்த முட்டாள்தனத்தால் கூலித் தொழிலாளிக்கு முதலில் பெண் பிறந்தால், அடுத்து ஆண், அதற்கடுத்து ஆண் என 4 , 5 பெண் குழந்தைகளை பெற்றெடுத்துவிட்டு அந்த குழந்தைகளை நல்லபடியாக வளர்க்க முடியாமல் அவதிப்படுகிறார்கள்.
சிலர் பெண் குழந்தை பிறந்தவுடன் கூட கள்ளி பால் கொடுத்து கொன்றுவிடும் கொடூர சம்பவங்களும் நடந்துள்ளன. தற்போது ஆங்காங்கே இலை மறைவு காய் மறைவாக இருக்கத்தான் செய்கின்றன. அண்மையில் உத்தரப்பிரதேசத்தில் தொடர்ந்து 3 பெண் குழந்தைகளை பெற்றெடுத்ததால் பெண்ணின் கைகளை உறவினர்கள் உடைத்த சம்பவமும் அரங்கேறியது.
பெண் குழந்தை பிறப்பதற்கு முழுக்க முழுக்க ஆணிடம் இருக்கும் குரோமோசோம்கள்தான் காரணம் என்ற விஞ்ஞானத்தை கூட அறியாமல் மடத்தனமாக சிலர் செய்யும் காரியங்கள் நெஞ்சை பதைபதைக்கின்றன. அது போல் யூடியூபர் இர்பான் தனது மனைவியை துபாயில் வைத்து பாலின சோதனை நடத்தினார்.
பின்னர் பிறக்க போகும் குழந்தை ஆணா பெண்ணா என்பதையும் அவர் ஒரு பார்ட்டி வைத்து அறிவித்தார். அதில் அவர் எந்த குழந்தையாக இருந்தாலும் எங்களுக்கு சந்தோஷம், நாங்கள் நல்லபடியாக வளர்ப்போம், ஆணோ பெண்ணோ எல்லா குழந்தைகளும் தெய்வம் கொடுத்த வரம் என்பதை போல் ஒரு மெசேஜையும் அந்த பார்ட்டியில் இர்பான் தெரிவித்திருந்தார்.
ஆனாலும் அவர் மீது நடவடிக்கை எடுக்க நோட்டீஸ் அனுப்பப்பட்ட நிலையில் இர்பான் தான் வெளியிட்ட பார்ட்டி வீடியோ டெலிட் செய்துவிட்டார். மேலும் இரு முறை தான் செய்த செயலுக்கு மன்னிப்பும் கேட்டுவிட்டார். தமிழக சுகாதாரத் துறையும் வயிற்றில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என பார்த்தால் சட்ட நடவடிக்கை பாயும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. அது போல் சென்னையில் கோடம்பாக்கத்தில் தனியார் மருத்துவமனையில் பாலின சோதனை செய்ததாக அந்த மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications