கங்கையில் மூழ்கிய அதிகாரி.. பணத்துக்காக காத்திருந்த படகோட்டி.. கடைசியில் என்னாச்சு தெரியுமா?
லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலத்தில் அரசு அதிகாரி ஒருவர் கங்கை ஆற்றில் மூழ்கியுள்ளார். ஐஏஎஸ் அதிகாரி, நீதிபதி, மருத்துவர் என்று செல்வாக்கான குடும்பத்தைச் சேர்ந்த அந்த அதிகாரியை காப்பாற்ற உள்ளூர் படகோட்டியின் உதவியை நாடியுள்ளனர். அப்போது அவர், “என் வங்கிக் கணக்குக்கு உடனடியாக ரூ.10,000 அனுப்பினால் தான் தண்ணீரில் இறங்குவேன்.” என்று கூறி காத்திருந்ததாக புகார் எழுந்துள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் சுகாதாரத்துறை துணை இயக்குநராக பணியாற்றியவர் ஆதித்ய வர்தன் சிங் (வயது 44). பனாரஸ் மாவட்டத்தில் பணியாற்றி வந்த இவர், கடந்த சனிக்கிழமை உன்னோ மாவட்டத்தில் உள்ள கங்கை ஆற்றுக்கு தன் நண்பர்கள் மூன்று பேருடன் குளிக்க சென்றுள்ளார். நண்பர்கள் மகிழ்ச்சியாக குளித்துக் கொண்டிருக்கும்போது. ஆதித்ய வர்தன் ஆழமான பகுதிக்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது. அங்கு கண் இமைக்கும் நேரத்தில், அவர் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டு நீரில் மூழ்கியதாக தகவல் வெளியானது.

நீரில் மூழ்கியபோது, ஆதித்ய வர்தன் சிங் தன் இரண்டு கைகளையும் உயர்த்தி காப்பாற்ற சொல்லி உதவி கேட்டுள்ளார். ஆனால் அவரது நண்பர்களால் தண்ணீரில் சென்று அவரை காப்பாற்ற முடியவில்லை. இதுகுறித்து ஆதித்ய வர்தன் சிங்கின் நண்பர் பிரதீப் குமார் திவாரி என்பவர் கூறுகையில், “நாங்கள் அனைவரும் ஒன்றாகத்தான் கங்கை ஆற்றுக்கு சென்றிருந்தோம். ஆதித்ய வர்தன் தண்ணீரில் மூழ்கியதும், எங்களுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை.
உடனடியாக அருகில் இருந்த உள்ளூர் படகோட்டி சைலேஷ் காஷ்யப் உதவியை நாடினோம். அவரும் உபகரணங்களுடன் தண்ணீரில் செல்வதற்கு தயாராக இருந்தார். ஆனால் அவர் உடனடியாக தன் வங்கிக் கணக்குக்கு ரூ.10,000 அனுப்பினால் தான் மீட்புப் பணியில் இறங்க முடியும் என்று கறாராக கூறினார். வேறு வழியில்லாமல் நானும் படகோட்டியின் வங்கிக் கணக்குக்கு பணம் அனுப்பினேன். இருந்தபோதும் அது மிகவும் தாமதமாகிவிட்டது.
அதற்குள் ஆதித்ய வர்தன் எங்கள் பார்வையில் இருந்து முற்றிலும் மறைந்து விட்டார். சிறிது நேரத்திலேயே படகோட்டி அங்கிருந்து தன் படகில் தப்பி சென்றுவிட்டார்.” என்று கண்ணீருடன் அந்த சம்பவத்தை பகிர்ந்தார். ஆதித்ய வர்தன் தண்ணீருக்குள் மூழ்கிய தகவல் அவரின் குடும்பத்தினருக்கும் சொல்லப்பட்டது. சிறிது நேரத்தில் அந்த இடத்தில் அதிகாரிகள் குவிந்து பதற்றமான சூழல் நிலவியது. காரணம் ஆதித்ய வர்தன் செல்வாக்கான குடும்பத்தைச் சேர்ந்தவர்.
அவரின் சகோதரர்களில் ஒருவர் பீஹாரில் ஐஏஎஸ் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். தற்போது அவர் பீஹார் முதலமைச்சர் நிதிஷ்குமாரின் செயலாளராக இருக்கிறார். ஆதித்ய வர்தனின் மனைவி ஸ்ரேயா மிஸ்ரா, மகாராஷ்டிரா மாநிலம், அகோலா மாவட்டத்தில் நீதிபதியாக பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.
மேலும் அவரின் சகோதரி ஆஸ்திரேலியா நாட்டில் உயர் பொறுப்பில் பணியாற்றி வருகிறார். அவரின் தந்தை ஓய்வு பெற்ற அரசு அதிகாரி. இவர் குடும்பத்தில் மருத்துவர்களும் உள்ளனர்.
இதனால் சனிக்கிழமை முதல் அவரை மீட்கும் பணி துரிதமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. உன்னாவ் மற்றும் கான்பூர் ஆகிய இரண்டு மாவட்டங்களில் தேடுதல் வேட்டை தீவிரமாக நடந்து வருகிறது. தேசிய பேரிடர் மீட்புப் படை, மாநில பேரிடர் மீட்புப் படை, காவல்துறை உள்ளிட்ட 100 பேர் இந்த தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல உள்ளூரில் உள்ள தனியார் மீட்புக் குழுவினரும் இந்தப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இருப்பினும் ஆதித்ய வர்தனின் உடல் கண்டறியப்படவில்லை.
இந்நிலையில் வங்கிக் கணக்குக்கு பணம் செல்லும் வரை படகோட்டி காத்திருந்ததே, அதிகாரியை காப்பாற்ற முடியாமல் போனதற்கு காரணம் என்று புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில், “ஆதித்ய வர்தனுக்கு நீச்சல் நன்கு தெரியும். அவர் செல்பி எடுக்கும்போது, தவறி விழுந்துவிட்டதாகவும் தகவல் வந்துள்ளது.
படகோட்டியிடம் நடத்திய விசாரணையில் அவர் பெட்ரோலுக்கு மட்டுமே பணம் கேட்டதாக சொல்கிறார். இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறோம். அதிகாரியை தேடும் பணியும் தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கிறது.” என்றனர்.












Click it and Unblock the Notifications