போலீஸ் துறையில் பெண்களுக்கு அதிகாரம்.. உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் போட்ட அதிரடி உத்தரவு
லக்னோ: உத்தர பிரதேச மாநிலத்தில் மகளிர் போலீஸ் ஸ்டேஷன்களை தவிர மாவட்டத்தில் ஒரு போலீஸ் நிலையத்தின் தலைமை பொறுப்பில் பெண் அதிகாரிகளை நியமனம் செய்ய வேண்டும் என யோகி ஆதித்யநாத் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.
உத்தர பிரதேசத்தில் பாஜக ஆட்சி நடக்கிறது. இங்கு 2வது முறையாக யோகி ஆதித்யநாத் பொறுப்பேற்று செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் தான் போலீஸ் துறையில் புதிய புதிய மாற்றங்களை அவர் முன்னெடுத்து வருகிறார்.
உத்தர பிரதேசத்தில் மொத்தம் 1,535 போலீஸ் நிலையங்களில் கட்டாயமாக எஸ்எச்ஓ எனும் ஸ்டேஷன் ஹவுஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட வேண்டும் என யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டார். அதன்பிறகு மொத்தம் 2,700 பேர் இந்த பணிக்காக நியமிக்கப்பட்டனர்.

இவர்களுடன் சமீபத்தில் யோகி ஆதித்யநாத் காணொலி காட்சி மூலம் கலந்துரையாடினார். பிராந்தியங்கள் வாரியாக இந்த கலந்துரையாடல் நடந்தது. இதில் ஒவ்வொரு பிராந்தியத்திலும் போலீஸ் நிலையங்களின் செயல்பாடு குறித்து அவர் ஆய்வு செய்தார். மேலும் எஸ்எச்ஓக்களின் செயல்பாடு குறித்தும் அவர் ஆலோசித்தார். இந்த வேளையில் அவர் முக்கிய அறிவுரைகளை வழங்கினார்.
இந்த கூட்டத்தில் பெண் காவல் நிலையங்களை தவிர ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள ஒரு காவல் நிலையத்துக்கு தலைமை அதிகாரியாக பெண் காவலர்களை நியமிக்க வேண்டும் என கூறினார். கிராம அளவில் பெண்களுக்கு அதிகாரிகள் அளிக்கும் வகையில் அக்டோபரில் இருந்து மாநில அரசு ‛மிஷன் ஷக்த்' எனும் திட்டத்தை தொடங்கி உள்ளதன் ஒரு பகுதியாக இதனை யோகி ஆதித்யாத் தெரிவித்தார்.
மேலும் விரைவில் பண்டிகை காலம் வருகிறது. இதனால் போலீசார் அனைவரும் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். போலீஸ் ஸ்டேஷன் வாரியாகவும், வட்டாம், மண்டலம் வாரியாகவும் போலீசாரின் செயல்பாடுகள் கண்காணிக்கப்படும். கண்காணிப்புகளை அதிகரிக்க வேண்டும். கிராமங்கள் தோறும் விழிப்புணர்வு பிரசாரம் நடத்த வேண்டும்.
இதன்மூலம் குற்றங்கள் நடப்பதை தடுக்கலாம். அதோடு எந்த காரணம் கொண்டும் தவறு நடக்க யாரும் இடம் அளிக்க கூடாது. இதுதவிர போலீஸ் நிலையம் வரும் மக்களிடம் கணிவாக நடந்து அவர்களின் புகார்களுக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும். மாறாக அலட்சியம் காட்டினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதுதவிர போலீசார் எந்த குற்ற செயல்களிலும் ஈடுபடக்கூடாது. மீறி நடந்து கொண்டால் சஸ்பெண்ட்டுக்கு பதில் பணி நீக்கம் செய்யப்படுவார்கள்.












Click it and Unblock the Notifications