சட்டென குறைந்த குற்றங்கள்.. என்கவுன்ட்டர்கள்தான் முக்கிய காரணம்.. உ.பி. யோகி ஆதித்யநாத் பெருமிதம்
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் சட்டம் ஒழுங்கு சரியாக பராமரிப்பதற்கான எடுத்துக்காட்டுதான் அதிக் அகமதுவின் மகன் ஆசாத் மற்றும் அவரது உதவியாளர் குலாம் என்கவுன்டரில் கொல்லப்பட்ட சம்பவம் என்று முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக கடந்த 2017ம் ஆண்டு ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது. இதனையடுத்து கடந்த 2022ம் ஆண்டு தேர்தலிலும் பாஜக வெற்றி பெற்றது. இதனையடுத்து இரண்டாவது முறையாக யோகி ஆதித்யநாத் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில், அவர் முதலமைச்சராக பொறுப்பேற்று 6 ஆண்டுகள் நிறைவடைந்ததை பாஜக சிறப்பாக கொண்டாடி வருகிறது. ஏனெனில் இதற்கு முன்னர் மாநிலத்தின் முதலமைச்சராக பொறுப்பு வகித்திருந்தவார்கள் யாரும் தொடர்ச்சியாக 6 ஆண்டுகள் பதவியில் இருந்ததில்லை.

எனவே யோகி ஆதித்யநாத் புதிய சாதனையை படைத்திருக்கிறார். இதனையடுத்து பாஜக யோகி ஆட்சியின் சாதனைகளை மக்கள் மத்தியில் கொண்டு சென்றிருந்த நிலையில் எதிர்க்கட்சியினர் முக்கிய குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். அதாவது யோகி பொறுப்பேற்ற 6 ஆண்டுகளில் சுமார் 10,713 என்கவுன்ட்டர்கள் நடந்துள்ளதாகவும் அதில் 178 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர். இது குறித்து விளக்கமளித்துள்ள யோகி ஆதித்யநாத், உத்தரப் பிரதேசத்தில் மாஃபியாக்களின் ஆட்சி அடக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
மேலும் "இந்த என்கவுன்ட்டர் காரணமாகதான் மாநிலத்தில் பாலியல் குற்றங்கள், கொலை, கொள்ளை, வழிப்பறி, பெண்கள் மீதான தாக்குதல் போன்ற குற்றங்கள் குறைந்திருக்கிறது. அதேபோல சமூக விரோதிகளிடமிருந்து சுமார் ரூ.4,500 கோடி மதிப்பிலான சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளன. மாநிலம் நவீனமயப்படுத்தப்பட்டிருக்கிறது. இதற்கு இடையூராக உள்ளவர்கள் மீது கடுமையான நவடிக்கை எடுக்ககப்பட்டு வருகிறது. மாநிலம் தற்போது 1 டிரில்லியன் பொருளாதாரத்தை நோக்கி முன்னேறிக்கொண்டிருக்கிறது" என்று கூறியுள்ளார்.
இந்நிலையில் உமேஷ் பால் என்பவரின் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த அதிக் அகமதுவின் மகன் ஆசாத் மற்றும் அவரது உதவியாளர் குலாம் ஆகியோரை காவல்துறையினர் என்கவுன்டர் மூலம் நேற்று சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் மீண்டும் என்கவுன்ட்டர் குறித்த விவாதங்களை கிளப்பி விட்டிருந்தது. இதற்கு பதிலளித்த யோகி அதித்யநாத், "இந்த என்கவுன்ட்டர் மூலம் சட்டம் ஒழுங்கு மீண்டும் ஒரு முறை நிலைநாட்டப்பட்டுள்ளது" என்று கூறியுள்ளார். மேலும், உ.பி.யின் சிறப்பு அதிரடிப்படை குழுவுக்கும் தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.
உமேஷ் பால் கொலை வழக்கில் குற்றவாளிகளான ஆசாத் மற்றும் குலாம் ஆகியோர் நீண்ட நாட்களாக தேடப்பட்டு வந்தனர். இவர்களை கண்டுபிடிப்பவர்களுக்கு தலா ரூ.5 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில்தான் இவர்கள் இருவரும் என்கவுன்ட்டர் செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து சில ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த ஆயுதங்கள் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்டது என்ற காவல்துறையினர் கூறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications