உள்நாட்டு உற்பத்தியை சர்வதேச அளவில் கொண்டு சென்றது பாஜகதான்.. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பெருமிதம்
லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலத்தின் சிறப்பு வாய்ந்த பொருட்களை சர்வதேச சந்தைக்கு கொண்டு சென்றது பாஜகதான் என்று அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று வருகிறது. கடந்த 4ம் தேதி முதற்கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் தற்போது இரண்டாம் கட்ட தேர்தல் வரும் 11ம் தேதி நடைபெற இருக்கிறது. தேர்தலில் வெற்றி பெற வாக்கு சேகரிக்க தொடர்ந்து பொதுக்கூட்டங்களில் பங்கேற்று வருகிறார். நேற்று அலிகாரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சிறப்புரையாற்றிய அவர், "மாநிலத்தின் சிறப்பு வாய்ந்த பொருட்களை சர்வதேச சந்தைக்கு கொண்டு சென்றது பாஜகதான்" என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், "அலிகார் பகுதி சிறு குறு தொழில்களுக்கு பெயர் பெற்றது. இங்கு உற்பத்தி செய்யப்படும் பூட்டுகள் சர்வதேச தரம் வாய்ந்தவையாகும். ஆனால் கடந்த கால ஆட்சியில் இதனை மேம்படுத்துவதற்கு எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை. எனவே இந்த பூட்டு உற்பத்தி தொழில் ஏறத்தாழ அழியும் நிலைக்கு தள்ளப்பட்டது. ஆனால் பாஜக ஆட்சிக்கு வந்த பின்னர் இதனை முழுவதுமாக மீட்டெடுத்தது. தற்போது இந்த பூட்டுக்கள் சர்வதேச அளவில் விற்பனையாகி வருகிறது. அலிகார் பூட்டை பலர் தேடி வந்து வாங்குகின்றனர். இதற்கு காரணம் பாஜகவின் பொருளாதார கொள்கைதான்.
பாஜகவை பொறுத்த அளவில் உ.பி அடுத்த சில ஆண்டுகளில் 1 டிரில்லியன் பொருளாதாரத்தை நோக்கி நகர வேண்டும். இதனை சாத்தியப்படுத்தவே இந்த ஆண்டு தொடக்கத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. இதன் மூலம் ரூ.35 லட்சம் கோடி முதலீடுகள் வந்திருக்கின்றன. அதேபோல மாநிலத்தில் இருக்கும் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்களை மேம்படுத்த நாங்கள் பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறோம். எனவே இருபுறம் இருந்து மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியை பலப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது நிச்சயம் 1 டிரில்லியன் பொருளாதார வளர்ச்சியை சாத்தியமாக்கும்.

இதற்கு இணையாக உட்கட்டமைப்பு வளர்ச்சியையும் அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அலிகாரில் விமான நிலையம் விரைவில் அமைய இருக்கிறது. இதற்காக விமான நிலைய ஆணையத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. தொடக்கத்தில் சிறிய விமான நிலையமாக இருந்தாலும் கூட இதனை விரிவுபடுத்த ரூ.700 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சாலை போக்குவரத்தை பொறுத்த அளவில் காஜியாபாத்-அலிகார்-கான்பூர் வழியாக நான்கு வழிச் சாலையை அமைக்கும் பணிகள் தீவிரமான நடைபெற்று வருகின்றன. இதுதான் உண்மையான மாற்றம். பாஜக அரசுதான் இந்த உண்மையான மாற்றத்தை சாத்தியமாக்கும். எனவே தற்போது இருக்கும் டபுள் என்ஜின் அரசை ட்ரிபிள் என்ஜின் அரசாக அப்கிரேட் செய்ய வேண்டும் என்று மக்களை கேட்டுக்கொள்கிறேன்" என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications