சூப்பர்.. மருத்துவ சேவையில் அதிரடி காட்டும் உ.பி அரசு! தரமான சிகிச்சை குறித்து யோகி பெருமிதம்
லக்னோ: மக்களுக்கான மருத்துவ காப்பீடு விஷயத்தில் உத்தரப் பிரதேச அரசு சமரசம் இல்லாமல் செயல்பட்டு வருவதாகவும், இது பாஜக அரசு எப்படி இயங்குகிறது என்பதற்கு எடுத்துக்காட்டு என்றும் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் இன்று உள்ளாட்சி தேர்தல் தொடங்கும் நிலையில் மக்கள் மத்தியில் உரையாற்றிய யோகி ஆதித்யநாத், மாநிலம் முழுவதும் மருத்துவ கட்டமைப்பு வசதிகளை அதிகரிக்க யோகி ஆதித்யநாத் அரசு தொடர்ந்து தீவிரமாக செயல்பட்டு வருகிறது என்று கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், "மாநிலத்தில் வசிக்கும் அனைவருக்கும் சுகாதாரமான கல்வியை வழங்குவதே எங்கள் நோக்கமாகும். எனவேதான் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் ரூ.20162.39 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதில் மருத்துவம் மற்றும் சுகாதாரத்துக்கு ரூ.17325 கோடியும், மருத்துவக் கல்விக்காக ரூ.2837.39 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. நகரங்களில் வாழும் மக்கள் மட்டுமல்லாது கிராமங்களில் வாழும் அடித்தட்டு மக்களும் பலன் பெற வேண்டும் என்பதற்காக தேசிய ஊரக சுகாதார இயக்கத்தின் கீழ் நடத்தப்படும் பல்வேறு திட்டங்களுக்கு அதிகபட்சமாக ரூ.12631 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. இந்த தொகை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட மார்ச் மாதத்திலேயே விடுவிக்கப்பட்டுவிட்டது.
சுகாதார நல மையங்கள், முக்கியமான பராமரிப்பு பிரிவுகள், நகரங்களில் ஒருங்கிணைந்த பொது சுகாதார ஆய்வகங்கள், தேசிய நோய் கட்டுப்பாட்டு மையத்தை வலுப்படுத்துதல் மற்றும் பிரதான் மந்திரி ஆயுஷ்மான் பாரத் சுகாதார உள்கட்டமைப்பு மிஷன் திட்டத்தின் கீழ் சுகாதார தகவல் விரிவாக்கத்திற்கான போர்டல் நிறுவுதல் போன்ற திட்டங்களுக்காக ரூ.1,655 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சுகாதாரத்திற்கு எப்படி முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறதோ. அதேபோல மருத்துவக் கல்விக்கும் கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் மொத்தம் 75 மாவட்டங்களில் இருக்கின்றன. இந்த 75 மாவட்டங்களிலும் மாவட்டத்திற்கு ஒரு மருத்துவ கல்லூரியை தொடங்க வேண்டும் என்று பாஜக அரசு முடிவெடுத்துள்ளது. ஏற்கனவே 45 மாவட்டங்களில் மருத்துவ கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. அதேபோல 14 மாவட்டங்களில் மருத்துவ கல்லூரிகள் கட்டப்பட்டு வருகின்றன. மேலும் அரசு தனியார் கூட்டு முயற்சி சார்பாக 16 மாவட்டங்களில் மருத்துவ கல்லூரிகள் நிறுவப்பட்டு வருகின்றன.
இதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும், மறுபுறம் மாநிலம் முழுவதும் உள்ள 22 லட்சம் அரசு ஊழியர்கள், அவர்களின் குடும்பத்தை சார்ந்தவர்கள் என மொத்தம் 75 லட்சம் பேருக்கு தொடங்கப்பட்டுள்ள இலவச மருத்துவ வசதி திட்டம் மாநிலம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. தீன் தயாள் உபாத்யாயா அரசு ஊழியர்களுக்கான ரொக்கமில்லா மருத்துவத் திட்டத்தின் கீழ், அரசு மருத்துவமனைகளில் இவர்கள் கட்டணமில்லா சிகிச்சையை பெற்றுக்கொள்ளலாம். அதேபோல தனியார் மருத்துவமனைகளிலும் ரூ.5 லட்சம் வரை கட்டணமில்லா சிகிச்சையை பெற்றுக்கொள்ளலாம்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications