உத்தரப் பிரதேசத்தில் 1.25 கோடி குடும்பங்களுக்கு ஜாக்பாட்! முதல்வர் யோகி ஆதித்யநாத் சூப்பர் அறிவிப்பு
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் உள்ள 1.25 கோடி குடும்பங்களுக்கு இந்த ஆண்டு இறுதிக்குள் பிரதம மந்திரி சுவாமித்வா திட்டத்தின் கீழ் குத்தகைக்கு விடப்பட்ட நிலத்தின் உரிமையாளர் உரிமை வழங்கப்படும் என்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் இதற்கு முன்னர் யாரும் தொடர்ச்சியாக 6 ஆண்டுகள் முதலமைச்சராக நீடித்தது கிடையாது. ஆனால் இந்த சாதனையை கடந்த சட்டமன்ற தேர்தலில் யோகி ஆதித்யநாத் முறியடித்துள்ளார். மக்களின் இந்த ஆதரவை நாடாளுமன்ற தேர்தலுக்கும் நீடிக்க வேண்டும் என்பதற்காக ஏராளமான புதிய திட்டங்களை அவர் தொடர்ந்து அறிவித்து வருகிறார். இந்நிலையில் பிரதம மந்திரி சுவாமித்வா திட்டத்தை செயல்படுத்த தீவிரம் காட்டி வருகிறார்.

நேற்று அலிகாரில் சுமார் ரூ.105.77 கோடி மதிப்பிலான 117 திட்டப் பணிகளை தொடங்கி வைத்த யோகி ஆதித்யநாத், 489 கோடி ரூபாய் மதிப்பிலான 204 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியுள்ளார். இந்நிலையில் பிரதமர் மந்திரியின் சுவாமித்வா திட்டம் திட்டம் குறித்து அவர் பேசியதாவது, "உத்தரப் பிரதேசம் ஒரு காலத்தில் ஊழல் நிறைந்ததாகவும், எங்கு பார்த்தாலும், குற்ற சம்பவங்கள் அதிகம் நிகழும் மாநிலமாகவும் இருந்தது. ஆனால் பாஜக பொறுப்பேற்ற பின்னர் இந்த நிலைமை அப்படியே தலைகீழாக மாறியது.
இப்போது மாநிலத்தில் பெண்கள் சுயமரியாதையுடனும், தன்னம்பிக்கையுடனும் வாழ்ந்து வருகிறார்கள். அதேபோல சாமானிய மக்களுக்கு இந்த அரசு அதிகாரத்தை வழங்கியுள்ளது. ஏற்கெனவே 70 லட்சம் குடும்பங்களுக்கு பிரதம மந்திரி சுவாமித்வா திட்டத்தின் கீழ் குத்தகைக்கு விடப்பட்ட நிலத்தின் உரிமையாளர் உரிமை வழங்கப்பட்டது. இந்நிலையில் விரைவில் மேலும் 1.25 கோடி குடும்பங்களுக்கு இந்த உரிமை வழங்கப்படும்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications