"அண்ணாமலை ஒரு செருப்புக்கு சமானம்.." ஒரே ஒரு கேள்வியால் டென்ஷன் ஆன செல்லூர் ராஜு.. என்னாச்சு
மதுரை: இந்தி திணிப்பு போராட்டம் தொடர்பாக அண்ணாமலை கூறிய கருத்துகள் சர்ச்சையைக் கிளப்பிய நிலையில், இதற்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பதிலடி கொடுத்துள்ளார்.
ஸ்ரீபெரும்புதூர் லோக்சபா தொகுதி பாஜக கூட்டணியில் உள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் வேணுகோபால் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு ஆதரவாக நேற்று முன்தினம் அண்ணாமலை பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசிய பேச்சு தான் சர்ச்சையைக் கிளப்பியது.
சர்ச்சை: அங்கே பேசிய அண்ணாமலை, "1980இல் நடந்த விஷயங்களை எல்லாம் சம்பந்தமே இல்லாமல் திமுக இப்போது பேசி வருகிறார்கள். இந்தி- சமஸ்கிருதம், வடக்கு- தெற்கு எனப் பேசி வருகிறார்கள். அந்த பிஞ்சு போன செருப்பை அவர்கள் இன்னும் தூக்கி எறியவில்லை" என்று அவர் பேசினார். அவரது இந்த பேச்சு தான் சர்ச்சையைக் கிளப்பியது. இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் பலர் தங்கள் இன்னுயிரை ஈந்த நிலையில், அதைப் பிஞ்சு போன செருப்பு என அண்ணாமலை பேசியது சர்ச்சையானது.
செல்லூர் ராஜு: பலரும் அண்ணாமலை பேச்சைக் கடுமையாகச் சாடி வருகிறார்கள். மேலும், அண்ணாமலை தனது பேச்சுக்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவர்கள் விமர்சித்து வருகிறார்கள். இந்தச் சூழலில் அண்ணாமலையின் இந்த கருத்துக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கடுமையாக எதிர்வினையாற்றி உள்ளார். செய்தியாளர்களிடம் நல்லா சிரித்துப் பேசிக் கொண்டு இருந்தவர் அண்ணாமலையின் இந்த கருத்து குறித்துக் கேட்டதும் டென்ஷன் ஆனார்.
செருப்புக்குச் சமானம்: தொடர்ந்து பேசிய அவர், "அவரே ஒரு செருப்புக்கு சமானம் தான். சுதந்திரப் போராட்டத்திற்கு ஈடான ஒரு போராட்டம். மொழிக்காக உயிர் நீத்த தியாகிகளைக் கொண்டது தான் தமிழ் இனம். தமிழருக்கு என்று தனியாக ஒரு குணம் இருக்கிறது. மொழிக்காகப் போராடி உயிர் நீத்த வரலாறு தமிழர்களுக்கு இருக்கிறது.
காங்கிரஸ் பேரியக்கத்தை வேரோடு வேராக அழித்து, 52 ஆண்டுகள் ஆட்சி இன்னும் தமிழகத்தில் அவர்கள் ஆட்சிக்கு வரவே முடியாத சூழல் தான் இருக்கிறது. தேசிய கட்சிக்கு அப்படியொரு நிலைமையை ஏற்படுத்தியதே தமிழர்கள் தான். அதைக் கொச்சைப்படுத்துகிறார் என்றால் அது அவரது குணம், தரம் ஆகியவற்றைக் காட்டுகிறது.
கூமுட்டை: தம்பி அண்ணாமலை கிட்ட நான் ஒரு கேள்வி கேட்கிறேன். இந்தி படித்தவர்கள் அதிகம் பேர் ஏன் தமிழ்நாட்டுக்கு வேலை தேடி வந்துள்ளனர்.. ஆனால் இங்கே தமிழும் ஆங்கிலமும் படித்தவர்கள் வெளிநாடுகளிலும் இஸ்ரோவிலும் இருக்கிறார்கள். பல உயர்ந்த பொறுப்புகளில் இருக்கிறார்கள். இதெல்லாம் அண்ணாமலைக்குத் தெரிய வேணாமா. இது கூட தெரியாத கூமுட்டையாகத் தான் அண்ணாமலை இருக்கிறார். அப்படி தான் அவரை பார்க்க வேண்டும்" என்றார்.
மேலும் ஓபிஎஸ் குறித்துப் பேசிய அவர், "ஓபிஎஸுக்கு அடையாளம் கொடுத்ததே அதிமுக தான். அவரை வளர்த்து விட்டதே ஜெயலலிதா தான்.. அப்படி இருக்கும் போது ஜெயலலிதாவை கொச்சைப்படுத்திப் பேசிய அண்ணாமலை பின்னால் போய் நிற்கிறீர்களே.. உங்களுக்கு மான ரோஷம் வேண்டாமா.. எண்ணம் போல் அவருக்குப் பலாப்பழ சின்னம் கிடைத்துள்ளது . அதிமுகவை அழிக்க நினைத்தவர்கள் தேர்தலுக்குப் பிறகு காணாமல் போவார்கள்" என்றார்.












Click it and Unblock the Notifications