தேவர் தங்க கவசம்.. திண்டுக்கல் சீனிவாசன் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு.. ஓபிஎஸ் பதிலளிக்க கோர்ட் உத்தரவு
மதுரை: முத்துராமலிங்க தேவர் சிலைக்கான தங்கக்கவசத்தை ஒப்படைக்க கோரும் அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் மனுவிற்கு ஓ.பன்னீர்செல்வம் 10-ந் தேதிக்குள் பதிலளிக்க மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.
அதிமுக பொருளாளரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசன், ,மதுரை ஐகோர்ட் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த மனுவில் "பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத்தேவர் மணிமண்டபத்தில் இருக்கும் தேவரின் உருவ சிலைக்கு அணிவிக்க அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தங்க கவசம் வழங்கினார். ஒவ்வொரு வருடமும் குருபூஜையையொட்டி சில நாட்கள் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு தங்க கவசம் பொருத்தப்படும்.

அதன்பிறகு மதுரை அண்ணா நகரில் உள்ள வங்கியில் உள்ள லாக்கரில் தங்க கவசம் பாதுகாக்கப்படும். இதற்காக அதிமுக, தேவர் நினைவிட பொறுப்பாளர்கள் பெயரில் தனி வங்கி கணக்கு தொடங்கப்பட்டுள்ளது. அதிமுக பொருளாளர் மற்றும் நினைவிட பொறுப்பாளர் கையெழுத்திட்டு தங்க கவசம் பெறப்படும். கடந்தாண்டு அதிமுக பொருளாளராக இருந்த ஓ.பன்னீர்செல்வம், அப்பொறுப்பில் இருந்தும், அதிமுகவில் இருந்தும் நீக்கப்பட்டார்.
அதனால் தங்க கவசத்திற்கு அவர் எந்த வகையிலும் உரிமை கோர முடியாது. இதனால் வங்கியில் உள்ள தங்க கவசத்தை யாரிடம் ஒப்படைக்க வேண்டும் என பிரச்சினை எழுந்தபோது ராமநாதபுரம் மாவட்ட வருவாய் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டது. தற்போது அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ள நிலையில், அதிமுக நிர்வாகிகள் பட்டியலுக்கு தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.
எனவே, நடப்பு ஆண்டு தேவர் குருபூஜை விழாவின் போது தேவர் சிலைக்கு அணிவிக்கப்படும் தங்க கவசத்தை அதிமுகவின் பொருளாளர் என்ற முறையில் என்னிடம் தான் ஒப்படைக்க வேண்டும் என வங்கி நிர்வாகத்திற்கு உத்தரவிட வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இந்த மனு நீதிபதி சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, அப்போது ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் இது குறித்து பதில் அளிக்க 2 வாரம் கால அவகாசம் வேண்டும் என கேட்டுக்கொண்டார். அதற்கு மறுப்பு தெரிவித்த நீதிபதி, ஏற்கனவே இது தொடர்பான வழக்கில் பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. எனவே வருகிற 10-ந் தேதி வழக்கு ஒத்தி வைக்கப்படுகிறது. அதற்குள் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.


Click it and Unblock the Notifications
