ஏன் அன்னூருக்கு ஒரு நியாயம் , கடலூருக்கு ஒரு நியாயமா? அண்ணாமலைக்கு அன்புமணி கேள்வி
மதுரை: அன்னூருக்கு ஒரு நியாயம் கடலூருக்கு ஒரு நியாயமா என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
நெய்வேலி என்எல்சி பழுப்பு நிலக்கரி நிறுவனத்திற்கு நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாமக சார்பில் நெய்வேலி ஆர்ச் கேட் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை முற்றுகை போராட்டம் நடந்தது. இந்த போராட்டம் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடந்தது.

அப்போது என்எல்சி நுழைவுவாயில் முன்பு தனது தொண்டர்களுடன் நுழைய முற்பட்ட அன்புமணி ராமதாஸை போலீஸார் தடுத்து நிறுத்தினர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்த தள்ளுமுள்ளுவுக்கு இடையே அன்புமணி ராமதாஸை கைது செய்ய காவல் துறை வாகனம் வரவழைக்கப்பட்டது.
இதனால் ஆத்திரம் அடைந்த பாமக தொண்டர்கள் காவல் துறை வாகனத்தின் கண்ணாடியை அடித்து நொறுக்கினர். இதையடுத்து போலீஸார் அவர்களை விரட்டினர். பின்னர் அன்புமணி போலீஸ் வேனில் ஏற்றப்பட்டார். எனினும் அவரை கைது செய்யக் கூடாது என வாகனம் முன்பு அமர்ந்து போலீஸார் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது சிலர் கல்வீசி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் போலீஸார், செய்தியாளர்கள் உள்ளிட்டோர் காயமடைந்தனர். இதையடுத்து போலீஸார் கூட்டத்தை கலைப்பதற்காக வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். விளை நிலத்தை அழித்து விரிவாக்கம் செய்யும் என்எல்சியை பலர் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் என்எல்சிக்கு எதிராக போராட்டம் நடத்தினால் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவர் என்றார். மேலும் விளை நிலங்களை அழித்ததை எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் மதுரை கிருஷ்ணாபுரம் காலனியில் பாமக அலுவலக கட்டடத்தை அன்புமணி திறந்து வைத்தார். இதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது என்எல்சிக்கு எதிர்ப்பு தெரிவித்தால் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவர் என அண்ணாமலை கூறியிருந்தது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள்.
அதற்கு அன்புமணி ராமதாஸ் அன்னூரில் சிப்காட் நிறுவனம் அமைக்க நிலம் கையகப்படுத்தப்பட்டபோது, அண்ணாமலையும், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் போராட்டம் நடத்தி, தடுத்து நிறுத்தியது ஏன்? இருவரும் போராட்டம் நடத்தி அந்த திட்டத்தையே தடுத்து நிறுத்திவிட்டார்கள். இத்தனைக்கும் அந்த சிப்காட் இடம் தரிசு நிலம், அதில் போர் போட்டால் பல அடி தூரத்திற்கு தண்ணீர் கூட வராது. ஏன் அந்த திட்டத்தை கைவிடுமாறு கேட்டார்கள். ஏன் சிப்காட்டை அமைத்து தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்த வேண்டியதுதானே. அன்னூருக்கு ஒரு நியாயம், கடலூருக்கு ஒரு நியாயமா என கேள்வி எழுப்பியுள்ளார்.












Click it and Unblock the Notifications