அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 3 காளைகளை அடக்கிய வீரர் மணிகண்டன் காயம்! போட்டியில் இருந்து விலகல்
மதுரை: அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 3 காளைகளை அடக்கிய வீரர் மணிகண்டன் காயம் காரணமாக போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். முதல் சுற்றில் சீறிப் பாய்ந்து வந்த 3 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்திருந்தார் மணிகண்டன்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் மதுரை மாவட்டம், அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் பாரம்பரிய ஜல்லிக்கட்டு போட்டிகள் கோலாகலமாக நடைபெறும். அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி இன்று (ஜனவரி 14) காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. காளைகள் திமிறிப் பாய்ந்து வருகின்றன.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிக்கு 2,026 காளைகள், 1,735 மாடுபிடி வீரர்கள் முன்பதிவு செய்திருந்தனர். இவர்களில் போட்டிகளில் பங்கேற்க உள்ள சிறந்த காளைகள், மாடுபிடி வீரர்களுக்கு நேற்று டோக்கன்கள் வழங்கப்பட்டன. இன்று காலை 7 மணிக்கு போட்டி தொடங்கியது.
அமைச்சர் பி.மூர்த்தி, கொடி அசைத்து ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்தார். மாலை வரை ஒவ்வொரு சுற்றிலும் சுமார் 50 காளைகள் களத்தில் அவிழ்த்து விடப்படுகின்றன. ஒவ்வொரு சுற்றிலும் சிறந்த மாடுபிடி வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்கள் இறுதிச் சுற்றில் பங்கேற்பார்கள்.
போட்டியில் காளைகளை அடக்கும் மாடுபிடி வீரர்கள் மற்றும் காளை உரிமையாளர்களுக்கு தங்கம், வெள்ளிக் காசுகள், மிக்ஸி, ஃபேன், கிரைண்டர், குக்கர், கட்டில், சைக்கிள் உள்ளிட்ட ஏராளமான பரிசு பொருட்கள் வழங்கப்படுகின்றன. சிறந்த காளை, மாடுபிடி வீரர்களுக்கு விலையுயர்ந்த கார், டிராக்டர் பரிசு வழங்கப்படுகிறது.
இந்நிலையில், முதல் சுற்றில் மொத்தமாக 73 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. மஞ்சள் டி-சர்ட் அணிந்த வீரர்கள் களமிறங்கினர். இவற்றில் 11 காளைகள் பிடிபட்டன. 62 காளைகள் பிடிபடாமல் சென்றன. இந்த சுற்றில் மணிகண்டன் 3 காளைகள், சுஜித்குமார் 2 காளைகளை பிடித்தனர்.
முதல் சுற்றில் 3 காளைகளை அடக்கிய மணிகண்டன், ஒரு மாட்டைப் பிடிக்கும்போது காயமடைந்தார். இதையடுத்து, அங்கு அமைக்கப்பட்டுள்ள தற்காலிக மருத்துவ மையத்தில் சிகிச்சை பெறுகிறார் மணிகண்டன். காயம் காரணமாக ஜல்லிக்கட்டு போட்டியில் இருந்து விலகிக் கொள்வதாக அறிவித்தார் மணிகண்டன்.












Click it and Unblock the Notifications