"கள ஆய்வில் முதல்வர்" : மதுரையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டப் பணிகளை ஆய்வு செய்தார்!
மதுரையில் பல்வேறு திட்டப் பணிகளை முதல்வர் ஸ்டாலின் இன்று ஆய்வு செய்கிறார்.
மதுரை: மதுரை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு செய்தார்.
"கள ஆய்வில் முதல்வர்" என்ற திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாவட்டத்திலும் திட்டப்பணிகள் நடைபெறும் பகுதிகளை நேரில் சென்று ஆய்வு செய்து வருகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். கடந்த மாதம் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் முதல் கட்ட பயணம் மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து கடந்த 15-ந் தேதி சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் 2-ம் கட்ட ஆய்வுப் பணியை மேற்கொண்டார்.

தற்போது 3-வது கட்டமாக தென் தமிழ்நாட்டுக்கு வருகை தருகிறார். மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, தேனி ஆகிய 5 மாவட்டங்களில் திட்டப் பணிகளை ஆய்வு செய்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். இந்த ஆய்வுப் பணிக்காக இன்று காலை 9 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரைக்கு சென்றார் முதல்வர் ஸ்டாலின். மதுரை விமான நிலையத்தில் முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.
பின்னர் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 5 மாவட்ட சட்டம் ஒழுங்கு குறித்து ஆய்வு மேற்கொண்டார். இதில் அனைத்து காவல்துறை உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். பின் பல்வேறு தரப்பு மக்கள் பிரதிநிதிகளை சந்தித்து அவர் உரையாடினார்.
இதனைத் தொடர்ந்து கீழடி அகழாய்வு இடத்தை முதல்வர் ஸ்டாலின் பார்வையிடுகிறார். கீழடியில் ரு18.43 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள அருங்காட்சியகத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார். தமிழரின் பழம்பெருமையை பறைசாற்றும் வகையில் இந்த அருங்காட்சியகம் உருவாக்கப்பட்டுள்ளது.
மதுரை கள ஆய்வின் போது பல்வேறு அரசு அலுவலகங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் செல்லக் கூடும் எனவும் கூறப்படுகிறது. சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் இந்த திடீர் ஆய்வை முதல்வர் மேற்கொண்டார். மேலும் ஆட்சியர்கள் உள்ளிட்ட அதிகாரிகளும் உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்டிருந்தனர்.
முதல்வர் ஸ்டாலின் ஒவ்வொரு முறை மதுரைக்கு வருகை தரும் போதும் அவரது சகோதரரும் முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க.அழகிரியை சந்திப்பாரா? என்கிற கேள்வி எழுவதும் அடங்குவதும் வழக்கம். இம்முறை தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பெரியப்பா அழகிரியை அண்மையில் சந்தித்து பேசியிருந்தார். இதனால் இம்முறை முதல்வர் ஸ்டாலின், அழகிரியை சந்திப்பாரா? என்கிற எதிர்பார்ப்பு திமுகவினரிடம் எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications