கொரோனா: மதுரை அருகே குண்ணத்தூரில்.. உண்டியல் பணத்தை முதல்வர் நிதிக்கு கொடுத்த மாணவன்!
திருமங்கலம் தொகுதியில் 1 லட்சம் குடும்பங்களுக்கு 5 கிலோ கொண்ட காய்கறி தொகுப்புகள் வழங்கப்படும்
மதுரை: திருமங்கலம் சட்டமன்ற தொகுதியில் உள்ள 1 லட்சம் குடும்பங்களுக்கு 5 கிலோ அளவிலான காய்கறி தொகுப்பு பைகளை இலவசமாக வீடு வீடாக சென்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கி வருகிறார். தூய்மை பணியாளர்களுக்கு பத்துகிலோ அரிசி, வேஷ்டி சேலை, கிருமி நாசினி ஆகியவற்றையும் அமைச்சர் ஆர் பி உதயகுமார் தனது சொந்த செலவில் வழங்கியுள்ளார். அப்போது தொட்டியபட்டியைச் சேர்ந்த 5ம் வகுப்பு மாணவன் அன்புச்செல்வன் உண்டியலில் சேமித்து வைத்திருந்த 2,300 ரூபாயை முதல்வர் நிவாரண நிதிக்காக அமைச்சரிடம் வழங்கினான்.
Recommended Video
கொரோனாவை ஒழிக்கும் பணியில் மருத்துவர்களும், செவிலியர்களும் காவல்துறையினரும், ஊரக உள்ளாட்சித்துறையினரும், வருவாய்துறையினரும் போராளிகளாக செயல்பட்டு வருகின்றனர். கொரோனாவிற்கு எதிரான போரில் முக்கிய பங்கு வகிப்பது தூய்மை காவலர்கள்தான். அவர்களின் சேவையை பாராட்டி நன்றி தெரிவிக்கும் விதமாக தூய்மை காவலர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.
மதுரை மாவட்டம், திருமங்கலம் தொகுதிக்குட்பட்ட டி.கல்லுப்பட்டி ஒன்றியத்தில் உள்ள டி. குண்ணத்தூர், ரெங்கபாளையம், பாப்புநாயக்கன் பட்டி, பொட்டிப்புரம் ஆகிய கிராமங்களை சேர்ந்த தூய்மை காவலர்கள், ஓட்டுனர்கள், தண்ணீர் மோட்டார் இயக்குபவர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக அரிசி, வேட்டி, சேலை, கிருமி நாசினி ஆகியவற்றை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார்.

குண்ணத்தூரில் விழா
டி.குண்ணத்தூரின் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் குண்ணத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் ராணி ராஜேந்திரன், ஊராட்சி கணக்காளர் பழனியாண்டி ஆகியோர் பங்கேற்றனர். இதனைத் தொடர்ந்து டி.கல்லுப்பட்டி, பேரையூர் பேரூராட்சிகளின் தூய்மை பணியாளர்களுக்கு அரிசி, வேட்டி, சேலை, கிருமி நாசினி ஆகியவற்றை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார்.

கொரோனா போராளிகள்
தூய்மை காவலர்கள் முன்னிலையில் பேசிய அமைச்சர் ஆர்.பி உதயகுமார், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் தமிழகம் முன்மாதிரியாக திகழ்கிறது. தூய்மை பணியாளர்களின் பணி மகத்தானது. எத்தனை வருடங்கள் வேலை செய்தாலும், தற்போது இந்த சோதனையான காலக்கட்டத்தில் பணி செய்வது தான் மிகவும் நன்றிக்குரியது என்று கூறினார்.

உணவு பாதுகாப்பு
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தடை உத்தரவு காலங்களில் அனைத்து மக்களுக்கும் முழு உணவு பாதுகாப்பினை வழங்கியுள்ளார். ஏற்கனவே 2 கோடியே 1 லட்சம் குடும்பங்களுக்கு 1000 ரூபாய் நிவாரணத் தொகை மற்றும் அரிசி, பருப்பு, எண்ணெய், சர்க்கரை வழங்கினார். தற்போது மே மாதத்திற்கும் அரிசி, பருப்பு, எண்ணெய், சர்க்கரை ஆகியவற்றை விலையில்லாமல் வழங்க அரசாணை பிறப்பித்து உள்ளார்.

இலவச காய்கறிகள்
தற்பொழுது முதலமைச்சர் வழிகாட்டுதலின் படி 1 லட்சம் குடும்பங்களுக்கு 5 கிலோ கொண்ட காய்கறி தொகுப்புகள் வழங்கப்படுகின்றன. தினந்தோறும் 10 ஆயிரம் குடும்பங்கள் வீதம் அவர்கள் இல்லங்களுக்கு சென்று வழங்கப்படுகிறது. மேலும் இதில் மக்கள் வரவேற்பை பொறுத்து அடுத்த கட்டமாக விரிவுபடுத்தப்படும் என்றார். கொரோனா வைரஸ் பரவலுக்கு இடையிலும் பணியாற்றும் ஊராக உள்ளாட்சித்துறையினர், தூய்மை பணியாளர்கள், வருவாய் துறையினர் காவல்துறையினர். ஊடகத்துறையினருக்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாகவும் அமைச்சர் ஆர்பி உதயகுமார் தெரிவித்தார்.

உண்டியல் பணம் நிவாரணம்
முதல்வர் நிவாரண நிதிக்காக தொட்டியபட்டியைச் சேர்ந்த 5ம் வகுப்பு மாணவன் அன்புச்செல்வன் உண்டியலில் சேர்த்து வைத்திருந்த இரண்டாயிரத்து 300 ரூபாயை அமைச்சர் ஆர்.பி. உதயகுமாரிடம் வழங்கினான். மாணவனிடம் இருந்து உண்டியல் பணத்தை பெற்றுக்கொண்ட அமைச்சர் உதயகுமார் பாராட்டுக்களை தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications