திடீரென வந்த துயரச் செய்தி.. எமர்ஜென்சி காரணமாக செல்கிறேன்.. மன்னிப்பு கேட்டுப் புறப்பட்ட கனிமொழி!
மதுரை: மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட திமுக எம்பி கனிமொழி, சகோதரர் மு.க.முத்து காலமான செய்தி அறிந்து அவசர அவசரமாகப் புறப்பட்டிருக்கிறார். மாணவர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்ட கனிமொழி, ஒரு அவசர விவகாரம் காரணமாகப் புறப்பட வேண்டிய சூழல் வந்துவிட்டது என்றும் விளக்கம் அளித்திருக்கிறார்.
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து உடல்நலக் குறைவால் காலமானார். கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நலக் குறைவால் சிகிச்சையில் இருந்து வந்த அவர், இன்று காலை 8 மணியளவில் காலமானார். 1970களில் திமுகவின் முகமாக இருந்தவர், எம்ஜிஆருக்கு போட்டியாக சினிமாவில் களமிறக்கப்பட்டார். ஆனால் எதிர்பார்த்த அளவிற்கு மு.க.முத்துவுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைக்கவில்லை.

இதன்பின் கருணாநிதியுடனான மனக்கசப்பு காரணமாகத் தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கிய அவர், வறுமையில் சிக்கினார். இந்த நிலையில் உடல்நலக் குறைவால் மறைந்த மு.க.முத்துவுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து கோபாலபுரம் இல்லத்திற்கு அவரது உடல் கொண்டு செல்லப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே முதல்வர் ஸ்டாலின், முத்தமிழறிஞர் கலைஞர் குடும்பத்தின் மூத்த பிள்ளை, என்னுயிர் அண்ணன் மு.க.முத்து அவர்கள் மறைவுற்றார் என்ற செய்தி இன்று காலையில் என்னை இடியெனத் தாக்கியது. தாய் - தந்தையர்க்கு இணையாக என் மீது பாசம் காட்டிய அன்பு அண்ணனை இழந்து விட்டேன் என்ற துயரம் என்னை வதைக்கிறது என்று இரங்கல் தெரிவித்திருக்கிறார்.
தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கவிருந்த அத்தனை நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள், திமுகவினர் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அதேபோல் விசிக தலைவர் திருமாவளவன், நடிகர் சத்யராஜ், கவிஞர் வைரமுத்து உள்ளிட்டோரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
இந்த நிலையில் சகோதரர் மு.க.முத்து மறைந்த செய்தி கனிமொழிக்கு தெரிவிக்கப்பட்டது. மதுரையில் உள்ள மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியின் 30வது பட்டமளிப்பு விழாவில் கனிமொழி கலந்து கொண்டிருந்தார். அப்போது இந்த செய்தி கனிமொழிக்கு தெரிவிக்கப்பட்ட நிலையில், அவர் உடனடியாக மாணவர்களிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு அவசர அவசரமாகப் புறப்பட்டார்.
அந்த விழாவில் கனிமொழி பேசுகையில், மாணவர்கள் என்னை மன்னிக்க வேண்டும்.. எமர்ஜென்சி காரணமாக உடனடியாக புறப்பட வேண்டிய சூழல் வந்துவிட்டது. இருந்தாலும் மாணவர்கள் அத்தனை பேருக்கும் எனது இதயத்தில் இருந்து வாழ்த்துகளைக் கூறிக் கொள்கிறேன் என்று தெரிவித்தார். தொடர்ந்து மறைந்த மு.க.முத்துக்கு மாணவர்களுடன் இணைந்து 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்திவிட்டு கனிமொழி புறப்பட்டார்.












Click it and Unblock the Notifications