வரதட்சணை கொடுமை! மதுரையில் பெண்ணின் இரு கால்களை பின்ன வைத்து தாக்குதல்! இரு காவலர்கள் மீது வழக்கு
மதுரை: மதுரையில் வரதட்சணை கேட்டு ஒரு பெண் கொடுமைப்படுத்தப்பட்ட வழக்கில், இரு காவலர்கள் உட்பட நான்கு பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சமீபத்தில் அவிநாசியில் ரிதன்யா என்ற பெண் வரதட்சிணைக் கொடுமையால் தற்கொலை செய்துகொண்ட நிலையில், அடுத்தடுத்து நிகழும் இத்தகைய சம்பவங்கள் தமிழகத்தையே உலுக்கியுள்ளன.
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் காவல் ஆய்வாளராகப் பணிபுரிந்து வரும் செந்தில்குமரனின் மகன் பூபாலன், மதுரை அப்பன்திருப்பதி காவல் நிலையத்தில் காவலராக இருக்கிறார். பூபாலனுக்கும், தேனி மாவட்டத்தைச் சேர்ந்த தங்கப்பிரியாவுக்கும் 2017 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 7 வயதில் ஒரு மகனும், 5 வயதில் ஒரு மகளும் உள்ளனர். தங்கப்பிரியா ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார்.

திருமணத்தின்போது 60 சவரன் நகைகள், புல்லட் பைக், சீர்வரிசைப் பொருட்கள் கொடுத்தபோதிலும், மேலும் பணம் மற்றும் நகைகள் வாங்கி வருமாறு தனது கணவர் பூபாலன், மாமனார் செந்தில்குமரன், நாத்தனார் அனிதா ஆகியோர் தன்னை வரதட்சிணை கேட்டு கொடுமைப்படுத்துவதாகத் தங்கப்பிரியா புகார் அளித்துள்ளார். பல லட்சம் செலவில் சொந்த வீடு, கூடுதல் நகைகள் வேண்டும் என்றும் அவர்கள் கேட்டதாக அவர் புகாரில் தெரிவித்துள்ளார். கணவன் - மனைவிக்கு இடையே சண்டை ஏற்பட முக்கிய காரணம் கணவரின் குடும்பத்தினர் என்றும் தங்கப்பிரியா குற்றம்சாட்டியுள்ளார்.
சித்ரவதை மற்றும் மருத்துவமனையில் அனுமதி
இந்த நிலையில், தொடர்ந்து வரதட்சணை கேட்டுச் சித்ரவதை செய்து வந்த நிலையில், தனது பிறந்த வீட்டில் அவ்வளவு பணம், நகை கொடுக்க முடியாது எனத் தங்கப்பிரியா திட்டவட்டமாகத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பூபாலன், தங்கப்பிரியாவை அறையில் தனியாக அடைத்து வைத்துச் சித்ரவதை செய்ததாகவும் சொல்லப்படுகிறது.
இந்தச் சித்ரவதையால் படுகாயமடைந்த தங்கப்பிரியா, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது முட்டியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. தங்கப்பிரியாவின் புகாரின் பேரில், அவரது கணவர் பூபாலன், மாமனார் செந்தில்குமரன், மாமியார் விஜயா, நாத்தனார் அனிதா ஆகியோர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
அவிநாசி ரிதன்யா தற்கொலை: தொடரும் கொடூரங்கள்
இந்தச் சம்பவம் தமிழகத்தில் அதிகரித்து வரும் வரதட்சணைக் கொடுமைகளை மீண்டும் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது. முன்னதாக, அவிநாசியில் 27 வயதான ரிதன்யா என்ற பெண் திருமணத்தின்போது 300 பவுன் நகை மற்றும் ₹70 லட்சம் மதிப்பிலான வால்வோ கார் வாங்கிக் கொடுத்த நிலையிலும், கூடுதல் வரதட்சணை கேட்டு அவரது கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வரமூர்த்தி, மாமியார் சித்ராதேவி ஆகியோர் டார்ச்சர் செய்துள்ளனர். இதன் காரணமாக அந்தப் பெண் பூச்சி மருந்து குடித்துத் தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், கவின்குமார், ஈஸ்வரமூர்த்தி, சித்ராதேவி ஆகியோரைக் கைது செய்தனர்.
இத்தகைய தொடர்ச்சியான சம்பவங்கள் தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்புக் குறித்த கவலைகளை எழுப்பியுள்ளன. வரதட்சிணைக் கொடுமைகளைத் தடுக்க அரசு மற்றும் சமூக அமைப்புகள் மேலும் தீவிரமாகச் செயல்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.












Click it and Unblock the Notifications