காக்கா குருவி கூட வரலயே.. இதான் காரணம்.. உளவுத்துறை மூலம் ‘தகவல்’ போயிருச்சு.. அதிமுக மாஜி அட்டாக்!
அதிமுக மாஜி அமைச்சர் ஆர்பி உதயகுமார் ஈரோடு இடைத்தேர்தல் முடிவு குறித்து விமர்சித்துள்ளார்.
மதுரை : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக அமைச்சர்கள் ஒரு ஓட்டுக்கு 50 ஆயிரம் ரூபாய் வரை செலவழித்து வெற்றி பெற்றுள்ளதாகவும், இதை காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் உணர்ந்ததால் தான் காங்கிரஸ் கட்சியினர் இந்த வெற்றியைக் கொண்டாடவில்லை என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 66 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதிமுகவினர் இந்த வெற்றி ஜனநாயகத்திற்கு எதிராக பணம் கொடுத்து வாங்கப்பட்டது என விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில் இதுதொடர்பாகப் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார், நியாயமான முறையில் தேர்தல் நடந்திருந்தால் ஐம்பதாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் இரட்டை சிலை சின்னம் வென்றிருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.

கே.என்.நேரு தோற்றார்
அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "2011ல் ஜெயலலிதா முதலமைச்சராக பொறுப்பேற்றார். அப்போது அமைச்சராக இருந்த மரியம் பிச்சை மரணம் அடைந்தார். திருச்சி மேற்கு தொகுதியில் அப்போது நடந்த இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் பரஞ்சோதியும் திமுக சார்பில் கே.என்.நேருவும் போட்டியிட்டனர். அந்த தேர்தலில் கே.என்.நேரு தோல்வியடைந்தார். அதன் பின்னர் 2012ஆம் ஆண்டில் சங்கரன்கோவிலில் அதிமுக எம்எல்ஏ கருப்பசாமி மரணம் அடைந்தார். அங்கு நடந்த இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் முத்துச்செல்வி வெற்றி பெற்றார். திமுக டெபாசிட் இழந்தது.

இது தேர்தலே அல்ல
2011ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரை இடைத்தேர்தல் நியாயமான முறையில் நடந்தது. மூன்று தொகுதிகளில் திமுக டெபாசிட் இழந்தது. இடைத்தேர்தல் என்பதை ஒரு பொதுவான அளவுகோலாக எப்போதும் தமிழ்நாடு தேர்தல் வரலாற்றில் பார்ப்பதில்லை. இப்போது நடைபெற்றது ஒரு தேர்தலே அல்ல. இது ஜனநாயக படுகொலை என்பது நாடறிந்த உண்மை. திமுக ஆட்சி மீது மக்கள் மத்தியில் அதிருப்தியும் கோபமும் இருக்கிறது. சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு இதையெல்லாம் மக்களிடத்திலே சொல்லி எடப்பாடியார் பிரச்சாரம் செய்தார்.

திமுக சதி
திமுக அமைச்சர்கள் 30 பேரும் ஈரோடு கிழக்கில் முகாமிட்டு தினந்தோறும் கோட்டை பக்கமே போகாமல் இருந்தனர். எண்பது சதவிகித வாக்காளர்களை மூளைச்சலவை செய்து அடைத்து வைத்தார்கள். ஈரோடு கிழக்கு தொகுதியில் 40 ஆயிரம் வாக்காளர்கள் இல்லை. ஆனால் அவர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்தது. 8,500 க்கும் மேற்பட்டோர் இறந்தவர்கள். அவர்கள் பெயர் பட்டியலில் இருந்து நீக்கப்படவே இல்லை. இது குறித்து தேர்தல் ஆணையத்திடம் புகார் கொடுத்தோம். திமுக செய்த முறைகேடுகள் குறித்து பத்துக்கும் மேற்பட்ட புகார்களை கொடுத்தோம். ஆனால் தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. வாக்குப்பதிவு அன்றும் கூட கடைசி நேரத்தில் ஒரு மணி நேரம் வாக்குப்பதிவு அதிகமாக நடந்தது. இதெல்லாம் திமுகவின் திட்டமிட்ட சதி தான்.

ஸ்டாலினுக்கு உளவுத்துறை மூலம் தெரியும்
எடப்பாடியார் சாதனைகளைச் சொல்லி ஓட்டு கேட்டார். ஆனால் திமுகவின் ஒவ்வொரு அமைச்சரும் தன்னுடைய பதவியை காப்பாற்றி கொள்வதற்காக மக்களுக்கு பணத்தை வாரி வாரி இறைத்தார்கள். குக்கர், கொலுசு, பணம் கொடுத்து, சேலை வேஷ்டி கொடுத்து என்று ஏறத்தாழ ஒரு ஓட்டுக்கு 50 ஆயிரம் ரூபாய் செலவழித்து உள்ளார்கள். இது ஸ்டாலினுக்கு உளவுத்துறை மூலம் தெரியும். நியாயமான முறையில் தேர்தல் நடந்திருந்தால் அதிமுக ஐம்பதாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கும்.

காக்கா குருவி கூட இல்லை
தேர்தல் வரலாற்றிலேயே இதுவரை திருமங்கலம் ஃபார்முலா தான் உலகம் முழுவதும் பேசப்பட்டது. இப்போது ஈரோடு கிழக்கு தொகுதி ஃபார்முலாவில் மக்களை பட்டியில் அடைத்து வைத்து மூளைச்சலவை செய்தது திமுக. இந்த ஆட்சியின் மீது மக்கள் விரோத அரசியல் மீது மக்களுக்கு இருந்த கடும் கோபத்தை தணிப்பதற்காக ஒரு ஓட்டுக்கு 50 ஆயிரம் ரூபாய் செலவழித்தார்கள். அதனால்தான் சத்தியமூர்த்தி அவனில் ஒரு காக்கா குருவி கூட இல்லை. ஏனென்றால் இது விலை கொடுத்து வாங்கிய வெற்றி. காங்கிரஸுக்கு இது நிரந்தரம் இல்லை.
ஒரு ஓட்டுக்கு 50 ஆயிரம் ரூபாய் காங்கிரஸ் கட்சியால் கொடுக்க முடியாது. காங்கிரஸ் கட்சியின் வெற்றியை சத்தியமூர்த்தி பவனில் கொண்டாடுவதற்கு இளங்கோவன் தயாராக இல்லை. இதுதான் உண்மை நிலவரம்." எனத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications