மருத்துவமனையில் ரஜினிகாந்த்.. லதாவுக்கு தாலி பாக்கியம் நீடிக்கனும்! மீனாட்சியிடம் வேண்டிய ரசிகர்கள்!
மதுரை : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் நாளை அல்லது நாளை மறுநாள் டிஸ்சார்ஜ் செய்யப்படவுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ரஜினிகாந்த் பூரண நலம் பெற வேண்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ரசிகர்கள் சிறப்பு வழிபாடு செய்ததோடு, லதா ரஜினிகாந்த் தாலி பாக்கியம் நீடிக்க வேண்டி பெண்களுக்கு தாலி, மஞ்சள் ஆகியவற்றை வழங்கினர்.
திடீர் உடல் நலக்குறைவு காரணமாக நடிகர் ரஜினிகாந்த் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு வயிற்று பகுதியில் ரத்த நாளத்தில் வீக்கம் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

தொடர்ந்து ரஜினியின் இதயத்திலிருந்து பிரிந்து செல்லும் பிரதான ரத்த நாளத்தில் அடைப்பு இருப்பதாகவும் அதனை கண்டறிந்து ஸ்டண்ட் வைத்து சரி செய்துள்ளதாகவும் மருத்துவமனை நிர்வாகம் கூறியது.
தொடர்ந்து ரஜினியின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் அச்சப்படும் வகையில் இல்லை, பெரிய அளவிலான அறுவை சிகிச்சையும் செய்யவில்லை.. வெறும் பரிசோதனைக்காக சென்றுள்ளார் என தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். இது தொடர்பாக விளக்கம் அளித்த அப்பலோ மருத்துவனை நிர்வாகம் ” ரஜினிகாந்த் இதயத்திலிருந்து வெளியேறும் பிரதான இரத்த நாளத்தில் அவருக்கு வீக்கம் ஏற்பட்டது. அதற்கு அறுவை சிகிச்சை அல்லாத டிரான்ஸ்கேதீட்டர் முறை மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது. இரண்டு நாட்களில் அவர் வீடு திரும்புவார்” என கூறப்பட்டது.
இதன் காரணமாக அவரது ரசிகர்கள் நிம்மதி அடைந்தனர். ஓரிரு நாட்களில் ரஜினிகாந்த் டிஸ்டார்ஜ் செய்யப்படுவார் என அப்போல்லோ மருத்துவமனை நிர்வாகம் கூறியிருந்தது. இந்த நிலையில் உடல் நலன் சீராகியிருப்பதாகக் கூறப்படும் நிலையில், தற்போது நாளை மாலை ரஜினிகாந்த் வீடு திரும்புவார் எனக் கூறப்படுகிறது. இதனால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்நிலையில் ரஜினிகாந்த் பூரண நலம் பெற வேண்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ரசிகர்கள் சிறப்பு வழிபாடு செய்ததோடு, லதா ரஜினிகாந்த் தாலி பாக்கியம் நீடிக்க வேண்டி பெண்களுக்கு தாலி, மஞ்சள் ஆகியவற்றை வழங்கினர். ரஜினிகாந்த் பூரண குணம் அடைய வேண்டும் என மதுரையில் அவரது ரசிகர்கள் உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தினர்.
அத்துடன், லதா ரஜினிகாந்த் தாலி பாக்கியம் நீடிக்க வேண்டும் என்பதற்காக அம்மன் சன்னதி முன்பு மாங்கல்ய பிரசாதம், வளையல், குங்குமம் உள்ளிட்டவைகளை 500க்கும் மேற்பட்ட பெண்களுக்கு வழங்கினர். மேலும் பிற பக்தர்களுக்கு வெற்றிலை பாக்கு, வாழைப்பழம் மற்றும் ரஜினி படம் உள்ளிட்ட பொருள்கள் அடங்கிய பையை பொதுமக்களுக்கு வழங்கினர். இதனையடுத்து ஏராளமான பக்தர்கள் அதனை வாங்கிச் சென்றனர்.
மதுரை மாநகர் மாவட்ட ரஜினி ரசிகர் மன்ற துனை செயலாளர் பி.அழகர்சாமி மற்றும் பால.நமச்சிவாயம் அவனி பாலா ஆகியோர் தலைமையில், முன்னாள் காவல் துறை அதிகாரி குமாரவேல் பெண்களுக்கு மாங்கல்யம் வழங்கும் நிகழ்வினை தொடங்கி வைத்தனர். அப்போது ரஜினிகாந்த் வாழ்க, மனித கடவுள் ரஜினி வாழ்க என முழக்கங்களை எழுப்பினர். தொடர்ந்து பேசிய அவர்கள், ரஜினிகாந்த் தொடர்ந்து நடித்து எங்களை மகிழ்வித்தாலே போதும், அவருக்காக என்ன வேண்டுமானாலும் செய்வோம் என்றனர்.












Click it and Unblock the Notifications